உலகிற்கே 'பொது அப்பனை' தந்த உருகவைக்கும் பாசக்கதை: புனே தகடுஷேத் கணபதி ஆலய ரகசியங்கள்!

Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதி
Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதிAI Image
Updated on

புனே பயணத்தின்போது நான் கண்ட மிக உன்னதமான, மனதிற்கு அசாத்தியமான அமைதியைத் தந்த ஒரு ஆன்மீகத் தலம்தான் இந்த தகடுஷேத் ஹல்வாய் கணபதி திருக்கோயில். பல கோயில்களுக்கு நாம் சென்றிருந்தாலும், இக்கோயிலின் பின்னணியில் உள்ள பாசப்பிணைப்பும், வரலாறும், அதன் பிரம்மாண்டமும் என்னை உண்மையிலேயே வியக்க வைத்தன.

பெயருக்குப் பின்னால் உள்ள பாசக்கதை (The Touch of Love):

பொதுவாகக் கோயில்கள் மன்னர்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ கட்டப்பட்டிருக்கும். ஆனால், இந்தக்கோயில் ஒரு தந்தை தன் மகனின் மீது வைத்த மாறாத பாசத்தால் உருவானது.

1800-களின் இறுதியில் கர்நாடகாவிலிருந்து புனேவிற்கு வந்து குடியேறிய 'தகடுஷேத் கத்பே' என்பவர் ஒரு புகழ்பெற்ற இனிப்பு வியாபாரி (Halwai). ஒரு பெரும் கொள்ளை நோய் (Plague) தாக்கியதில், அவரகளது ஒரே மகன் இறந்துபோனான்.

புத்திர சோகத்தில் மூழ்கிய தகடுஷேத்-லக்ஷ்மிபாய் தம்பதியினருக்கு, அவர்களின் ஆன்மீகக் குருவான மாதவ்நாத் மகராஜ், "மக்களைக் காக்கும் கணபதியைத் தங்களின் மகனாகக் கருதி ஒரு விக்ரகம் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்" என்று வழிகாட்டினார். அப்படி 1893-ல், தன் மகனின் நினைவாகவும், ஒட்டுமொத்த ஊரின் நல்வாழ்விற்காகவும் அவர் உருவாக்கியதுதான் இந்த 'தகடுஷேத் ஹல்வாய் கணபதி'.

இந்தக் கணபதியின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சுமார் 7.5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் விக்ரகம் அது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் 'தட்சிண அகோபிலம்' ஆவணியாபுரம் நரசிம்மர் கோவில் அதிசய ரகசியங்கள்!
Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதி

தங்கக் கவசம்: விநாயகரின் உடல் முழுக்க அக்மார்க் தூய தங்கத்தால் (சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான தங்கம்) செய்யப்பட்ட கவசங்கள் அணிவிக்கப்பட்டிருக்கும்.

மின் விளக்குகளின் மேஜிக்: கருவறையின் மேலே உள்ள அதிநவீன எல்இடி விளக்குகளின் ஒளியானது, விநாயகரின் தங்கக் கவசங்களின் மீது பட்டு எதிரொளிக்கும்போது, முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒளி சிதறுவதுபோல ஒட்டுமொத்த கருவறையும் தெய்வீகப் பிரகாசத்துடன் மின்னுகிறது. அந்தத் தரிசனம் நமக்கு உணரமுடியாத ஒரு பேரானந்தத்தையும், கண்களில் பக்திப் பெருக்கையும் வரவழைக்கிறது.

வரலாற்று ரீதியாக இக்கோயிலுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. லோகமான்ய பால கங்காதர திலகர், இந்தத் தகடுஷேத் ஹல்வாய் விநாயகர் வழிபாட்டைக் கண்ட பிறகுதான், "சுதந்திரப் போராட்டத்திற்காக மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்" என்ற தெளிவான சிந்தனையோடு "பொது கணபதி திருவிழாவை" (Ganeshotsav) மகாராஷ்டிராவில் முறைப்படி மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கினார்.

இக்கோயிலின் கட்டிடக்கலையில் என்னை மிகவும் கவர்ந்தது அதன் கருவறைதான். விநாயகர் அமர்ந்திருக்கும் மண்டபத்தின் உட்புறச் சுவர்கள் முழுவதும் உயர்தரக் கண்ணாடிகளாலும், வண்ணமயமான கற்களாலும் (Glass Work) வடிவமைக்கப்பட்டுள்ளன. நாம் எங்கிருந்து பார்த்தாலும் அந்தப் பிரம்மாண்ட விநாயகரின் பிம்பம் சுற்றிலும் உள்ள கண்ணாடிகளில் பிரதிபலித்து, நம் கண்ணுக்குப் பேரழகாகக் காட்சியளிக்கிறது.

தற்போதைய விக்ரகம் உருவான வரலாறும் (Navasacha Ganpati) அதன் சிறப்புகளும்:

கோயிலில் நாம் இன்று காணும் அந்த கம்பீரமான விக்ரகம் முதலாவது விக்ரகம் அல்ல; அது மூன்றாவது விக்ரகம் ஆகும்.

1893-ல் செய்யப்பட்ட முதல் விக்ரகம் களிமண்ணால் ஆனது.

பின்னர் 75 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த விக்ரகத்தின் கைகளில் சிறிய சேதம் ஏற்பட்டது. இதனால், 1968-ஆம் ஆண்டு கோயிலின் பவள விழாவை (Amrit Mahotsav) ஒட்டி, சிற்பி நாகேஷ் ஷில்பி என்பவரால் அக்மார்க் கர்நாடக பாணியில் ஒரு புதிய பிரம்மாண்ட விக்ரகம் செதுக்கப்பட்டது.

இந்த விக்ரகத்தின் வயிற்றுப் பகுதியில் சாஸ்திர முறைப்படி ஒரு 'கணபதி யந்திரம்' அசாத்தியமான ஆன்மீக சடங்குகளுடன் வைக்கப்பட்டுள்ளது. இதுவே இன்று கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் 'நவசாச்சா கணபதி' (வேண்டுதலை நிறைவேற்றும் கணபதி) ஆகும்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!
Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதி

புனேவின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வணிக வீதி "லக்ஷ்மி ரோடு" (Laxmi Road) ஆகும். இந்தச் சாலைக்கு இப்பெயர் வரக் காரணமே தகடுஷேத்தின் மனைவி லக்ஷ்மிபாய் ஹல்வாய் தான். தகடுஷேத்தின் மறைவிற்குப் பிறகு, அவரது மனைவி லக்ஷ்மிபாய் தன் கணவரின் அறக்கட்டளைப் பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும் மிகச் சிறப்பாகத் தொடர்ந்தார். அவரது கொடைத் தன்மையைப் பாராட்டித்தான் புனேவின் முக்கிய வீதிக்கு லக்ஷ்மி ரோடு என்று பெயரிடப்பட்டது.

இந்தியாவின் மிக விசித்திரமான இன்சூரன்ஸ் (Insurance):

இந்த இன்ஷூரன்ஸ் பற்றி கட்டாயமாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் .இந்தக் கணபதி விக்ரகம் வெறும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் மிகவும் மதிப்புமிக்கது.

விநாயகரின் திருமேனியில் உள்ள 40 கிலோவிற்கும் அதிகமான தூய தங்க நகைகள் மற்றும் வைரக் கற்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிற்கு மிகப் பெரிய காப்பீடு (Insurance) செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு கடவுளின் விக்ரகத்திற்கு இந்த அளவிற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருப்பது மிக அரிதான ஒரு விசித்திர தொழில்நுட்ப மேலாண்மை ஆகும்.

தகடுஷேத் கணபதி அறக்கட்டளை (Trust) என்பது மகாராஷ்டிராவின் மிகப்பணக்கார அறக்கட்டளைகளில் ஒன்றாகும். ஆனால், அங்கு வரும் காணிக்கைப் பணம் அனைத்தும் அக்மார்க் மனிதநேயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதி
Pune Ganeshotsav - தகடுஷேத் கணபதிAI Image

பிதாஸ்ரீ (Pitashree): ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம்.

பழங்குடியின மக்களுக்கான இலவச நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள். வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான இலவசக் கல்வி மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த விநாயாகர் வீற்றிருக்கும் கருவறையின் வடிவமைப்பு மிகவும் எளிமையானது. கோயிலின் கதவுகள் திறந்திருக்கும்போது, சாலையில் நடந்து செல்பவர்கள் அல்லது வாகனங்களில் செல்பவர்கள் கூட எந்தவித தடையுமின்றி, மிகத் தூரத்திலிருந்தே நம் அப்பனான கணபதியைத் தெளிவாகத் தரிசித்துவிட முடியும். அப்படி ஒரு சிறப்பு இந்த ஆலயத்திற்கு உண்டு!

ஒரு தந்தை தன் மகனை இழந்த சோகத்திலிருந்து மீண்டு, உலகிற்கே ஒரு பொது அப்பனாக விநாயகரை உருவாக்கி, இன்று லட்சக்கணக்கான பக்தர்களின் பசியையும், குறைகளையும் தீர்க்கும் ஒரு உன்னத மையமாக மாற்றியுள்ளார்.

புனே நகரின் பரபரப்பான சாலையின் நடுவே இருந்தாலும், இந்தத் தகடுஷேத் ஹல்வாய் கணபதியின் சந்நிதானத்திற்குள் நுழைந்த உடனே மனம் அடையும் அமைதியும் தெளிவும், 'இதற்காகவே மீண்டும் ஒருமுறை புனே வரலாம்' என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது! எனக்கு மட்டுமல்ல இதை காண்போர் அனைவருக்கும் அந்த எண்ணம் எழுவது இயல்பே!

புனே நகரின் ஆன்மீக அடையாளமாகத் திகழும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் பின்னணியை நீங்கள் முழுமையாக உணர்வதோடு, புத்திர சோகத்தை உலகிற்கான மக்கள் சேவையாக மாற்றிய ஒரு தந்தையின் உன்னத வாழ்வியல் தத்துவத்தையும், உங்கள் அடுத்த புனே பயணத்தின்போது தவறவிடக் கூடாத தரிசன வழிகாட்டலையும் தடையின்றிப் பெற முடியும்.

அமைவிடம்: புனேவின் மையப்பகுதியான புத்வர் பேத் (Budhwar Peth) என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com