சித்தர்களின் ஜீவசமாதி, ஜலசமாதி பற்றித் தெரியுமா?

Jeeva samadhi and jala samadhi
Jeeva samadhi and jala samadhi
Published on

தங்களின் இறப்பினை முன்பே அறிந்து கொள்ளும் சித்தர்கள். அக்காலம் நெருங்கியதும் தங்களின் பக்தர்களுக்கு குறிப்பால் அதனை தெரிவித்துவிட்டு சமாதி நிலையை அடைகின்றார்கள். சித்தர்கள் சமாதி நிலையை அடைய ஜீவசமாதி, ஜலசமாதி என்று இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள்.

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள்படும். அதாவது மனம் + ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதேத் தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாகதான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி, பல பாவங்களைச் செய்கிறோம். ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கைக் கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானுக்கு உகந்த மலர் எது தெரியுமா?
Jeeva samadhi and jala samadhi

ஜீவசமாதி செய்வது என்பது சாதாரணமானதல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள் என கடுமையான மனநிலைகளைக் கடந்துதான் இந்த ஜீவசமாதியை அடைய முடியும். ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது, அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றிப் போகும்; கெட்டுப் போகாது என்கின்றனர். ஜீவசமாதியடைபவர்கள், சுவாச பயிற்சி எனும் காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.

சித்தர்களாக இருந்த பலர் ஜீவசமாதி அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஜீவசமாதியடைந்த இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சித்தர்களின் ஜீவசமாதிகளில் சிவலிங்கம் நிறுவப்பட்டு, அச்சிவலிங்கத்திற்கு முன்பு நந்தியும் வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!
Jeeva samadhi and jala samadhi

பதினெண் சித்தர்களில், அகத்தியர் - திருவனந்தபுரம், கொங்கணர் - திருப்பதி, சுந்தரனார் - மதுரை, கரூவூரார் - கரூர், திருமூலர் - சிதம்பரம், தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில், கோரக்கர் - பொய்யூர், குதம்பை சித்தர் - மாயவரம், இடைக்காடர் - திருவண்ணாமலை, இராமதேவர் - அழகர்மலை, கமலமுனி - திருவாரூர், சட்டமுனி - திருவரங்கம், வான்மீகர் - எட்டிக்குடி, நந்திதேவர் - காசி, பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில், போகர் - பழனி, மச்சமுனி - திருப்பரங்குன்றம், பதஞ்சலி - திருப்பட்டூர் ஆகிய இடங்களில் ஜீவ சமாதியடைந்திருக்கின்றனர்.

ஜீவ சமாதியைப் போன்று, சில சித்தர்கள் ஜலசமாதி அடைகின்றனர்.

சித்தர்கள் தங்களின் இறப்புக்கான நேரத்தில், நீர்நிலைகளில் இறங்கி தங்களைக் கரைத்துக் கொள்கின்றனர். வெகு சில சித்தர்களே நீர்நிலைகளில் இறங்கி ஜலசமாதி அடைந்துள்ளார்கள். புதுச்சேரியில் வாழ்ந்துவந்த கம்பளிச் சித்தர் என்பவர் 1847 ஆம் ஆண்டில், சித்திரை மாதத்தில் ஜலசமாதி அடைந்துள்ளார். இவருடைய அசரீரி நீரிலிருந்து கேட்டமையால் இவர் ஜலசமாதி அடைந்துவிட்டதை மக்கள் அறிந்து கொண்டார்கள். இதேப் போன்று, கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் அழகர்சித்தர் என்பவர் ஜலசமாதி அடைந்துள்ளார். இவர் கிணற்றில் இறங்கிய பின்பு அதைக் கண்ட மக்கள் அவரை கிணற்றில் தேடியுள்ளனர். ஆனால் அவர் உடல் கிடைக்கவில்லை. எனவே சித்தர் கிணற்றில் தன்னை கரைத்துக் கொண்டு ஜலசமாதி அடைந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.

ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் சமாதியடைந்தவர்களின் எண்ணங்களின் அதிர்வுகள் எதிரொலித்து கொண்டே இருக்கும். அவ்விடங்களில் வழிபடும் போது, நம் மனம் தூய்மையடைவதுடன், நல்ல சிந்தனைகளையும் நமக்குள் தோற்றுவிக்கும். அதனைத் தொடர்ந்து நம் செயல்பாடுகளும் நல்லவைகளாகவே அமையும். நல்ல பலன்களும் கிடைக்கும் என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com