இராமனதீச்சரம் ஆலயத்தின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

இராமனை அனுமதிக்காத நந்தி - அம்பிகையின் உதவியுடன் சிவனைப் பூஜித்த இராமபிரான் – ராமர் வழிபட்ட பிரம்மாண்ட சுயம்பு லிங்கம், அம்பாளே நேரில் வந்து பிரசவம் பார்த்த அதிசயம்... இன்னும் இன்னும் அதிசயம்!
Ramanatheeswaram shiva temple
Ramanatheeswaram shiva templeImage credit: AI Image
Updated on
Deepam strip
Deepam strip

திருக்கண்ணபுரம் என்று தற்போது அறியப்படும் தலத்திற்கு மிக அருகிலேயே இராமனதீச்சரம் ஆலயம் உள்ளது. இராவணனைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமர் ஈசனை வழிபட்ட திருத்தலம் இது.

இத்தல இறைவன் மிகப்பெரிய லிங்க மூர்த்தி. இராமர் சீதையை மீட்க இராவணனை வதம் செய்தபின், அந்தப் பாவம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார். அயோத்தி திரும்பும் வழியில் பல சிவதலங்களில் வழிபட்டார். கண்ணபுரம் அருகே செண்பக வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டார்.

சிவபெருமானை வணங்கி பூஜை செய்ய விரும்பினார். ஆனால் நந்திபகவான் அவரை நெருங்கவிடாமல் தடுத்தார். பார்வதிதேவி நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, இராமபிரான் சிவபூஜை செய்ய உதவினார். இதனால் இத்திருத்தலம் இராம நந்தீச்சரம் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி இராமனதீச்சரம் என்றானது. பிற்காலத்தில் சோழர்களால் இங்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

இத்தலத்தின் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் அம்பாளின் திருக்கரத்தில் இருப்பார். (இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இம்மூர்த்தி திருப்புகலூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளார்.)

இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இறைவனின் பெயர் ‘இராமனதீச்சரமுடையார்’ என்று காணப்படுகிறது. மிகப்பெரிய சுயம்புலிங்கமாக அருளும் ஈசனுக்கு தீபாராதனை செய்யும்போது, லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது அற்புதமானது.

இத்தல அம்பிகை சரிவார்குழலி என்னும் திருநாமத்தோடு அருள்கிறார்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னருக்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை. சிவபக்தரான மன்னன் மக்கட்பேறு வேண்டி யாகம் செய்தார். அம்பிகையே மகளாகப் பிறப்பார் என்று சிவபெருமான் அசரீரியாக அருளினார்.

இதையும் படியுங்கள்:
குழந்தை வடிவில் விநாயகர்: அனைத்து தோஷங்களையும் நீக்கும் மகாகாளநாதர் – எங்கே அருள்கிறார்?
Ramanatheeswaram shiva temple

ஒருமுறை மன்னன் வேட்டைக்குச் சென்றபோது, ஓரிடத்தில் நான்கு பெண் குழந்தைகளைக் கண்டார். அக்குழந்தைகளை அன்போடு வளர்த்துவந்தார். தீவிர சிவபக்தைகளாக வளர்ந்தனர் அப்பெண்கள். மணப்பருவம் வந்ததும் அவர்களை மணந்துகொள்ளும்படி ஈசனிடம் மன்னர் வேண்டவே, சிவனும் மணந்துகொண்டார்.

இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு திருத்தலங்களில் அருள்புரிகின்றனர். திருச்செங்காட்டங்குடியில் திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகலில் வண்டார்குழலி, இராமனதீச்சரத்தில் சரிவார்குழலி என அருள்கின்றனர்.

ஒரு சமயம் இப்பகுதியில் வசித்த ஏழைப்பெண் ஒருத்திக்கு பிரசவ சமயம், அவளின் தாயார் ஆற்றைக் கடந்து வெளியே சென்றிருந்தார். திடீரென மழை பெய்யவே, அந்தத் தாயால் ஆற்றைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது இந்த நான்கு தலங்களிலும் உறையும் அம்பிகையர் ஒன்றாக இணைந்து, சூலாம்பாளாக வந்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். எனவே ‘சூலாம்பாள்’, ‘கருகாத்த அம்மன்’ என்ற பெயர்களும் அன்னைக்கு உண்டு.

பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாகத் திரும்பியதால், நால்வரும் கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே தங்கிவிட்டனர். அதனால், இப்போதும் அம்பாள் சந்நிதி வெளியே தனியாக அமைந்துள்ளது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி சாதம், மிளகு சீரகம், உப்பு நெய் கலந்த பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com