இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்ற மரம் எது தெரியுமா?

Ravanan and Indian jujube tree
Ravanan and Indian jujube tree
Published on
deepam strip

இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற போது, அங்கிருந்த மரம் ஒன்று சீதையைக் காப்பாற்ற முயன்றது. ஆனால், அதனுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. அந்த வழியாக இராமனும், இலட்சுமணனும் சீதையைத் தேடிச் சென்ற போது, அந்த மரம் இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்றதையும், தன்னால் அதனைச் செய்ய முடியவில்லை என்பதையும் சொல்லி வருத்தமடைந்தது.

இராவணனால் வெட்டுப்பட்ட அந்த மரத்தின் துணிவைப் பாராட்டியதுடன், அதற்கு ஆறுதலும் சொன்ன இராமன், அந்த மரத்திற்கு 'அழியாமை' எனும் வரத்தைத் தந்தார். அந்த மரம் உறுதியானதுடன், அடிப்பகுதியில் வெட்டப்பட்டாலும் அதிலிருந்து உயிர்த்தெழும் தன்மையைப் பெற்றது.

இராமனிடமிருந்து அழியா வரம் பெற்ற அந்த மரம் எதுவென்று அறிய விரும்புகிறீர்களா? அந்த மரம் இலந்தை மரம் தான். கம்பராமாயணத்திலும், இலந்தை மரத்தின் பழங்களைச் சபரியம்மையார் இராமனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

இலந்தை மரம் வயல்களிலும், திறந்தவெளிகளிலும் புதர்களைப் போன்று வளரும் தன்மை கொண்டவையாகும். ரம்னேசியத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தை Ziziphus mauritiana Lamk Syn Z. Jujuba Lamk எனும் தாவரப் பெயர்களால் குறிப்பிடுகின்றனர். மலையாளத்தில் எலந்தா என்றும், கன்னடத்தில் எலஞ்சி என்றும், தெலுங்கில் கங்கரீகு என்றும், ஆங்கிலத்தில் Indian Jujube, Common Jujube எனும் பெயர்களிலும் இம்மரம் குறிப்பிடப்படுகிறது.

இம்மரம் சிறிய பசுமையான மரம் அல்லது புதர் போன்று அடர்த்தியாக வளரக்கூடிய மரம் என்று சொல்லலாம். 3 முதல் 9 மீட்டர் வரை உயரமாக வளரும் இம்மரம் முட்கள் கொண்டவை. இலைகள் நீள் வட்டமாகவோ அல்லது நீள்வட்ட முட்டை வடிவமாகவோ, அடிப்பகுதியில் வெள்ளை அல்லது மங்கலான பழுப்பு முடிகளுடன், 3 நரம்புகளுடன் தெளிவாகத் தெரியும்.

இம்மரத்தின் மலர்கள் 5 முதல் 6 மி.மீ விட்டம், பச்சை மஞ்சள் நிறத்தில் கொத்துக்களில் இருக்கும். மார்ச் முதல் ஜூன் மாதங்களில் இம்மரம் பூக்கும் தன்மையுடையது. அதன் பிறகு நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் பழங்களைத் தரும். இப்பழங்கள் பொதுவாக 1 முதல் 2 செ.மீ விட்டம், நீள்வட்டம் அல்லது கோள வடிவமாக இருக்கும். பழுத்தவுடன் மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக இருக்கும்.

வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில், இம்மரம் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளில் இடம் பெற்றிருக்கிறது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இம்மரம், துக்கத்தை நீக்கும் மரமாக, 'துக்பஞ்சனி' எனும் பெயரில் சீக்கியர்களால் போற்றப்படுகிறது. அந்தக் கால முனிவர்கள் மற்றும் பக்தர்கள், பத்ரிநாத் புனிதப் பயணம் செல்லும் காலத்தில், இந்த மரத்தின் பழங்களையே உண்டு செல்வர். இந்த மரம் பொத்குவாக, வீடுகளின் வளாகத்திற்குள் நடப்படுவதில்லை. இது, குடியிருப்பாளர்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைக்கும் என்று கருதப்படுகிறது.

ராஜஸ்தானில் 'பிரஹ்லாதனின்' சிலைகள் இம்மரத்தால் செய்யப்பட்டு ஹோலியின் போது நெருப்பில் வைக்கப்படுகின்றன. விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமாகாத இளைஞர்கள் அந்தச் சிலையினை நெருப்பிலிருந்து எடுக்க முயற்சி செய்யும் நம்பிக்கையுள்ளது.

இதையும் படியுங்கள்:
தீப்பிடித்து எறிந்த அர்ஜுணனின் தேர்...சாரதி கண்ணனின் விளக்கம்
Ravanan and Indian jujube tree

வங்காளத்தில் கருணைக் கடவுளான குலுய் சண்டிக்கு, இம்மரத்தின் கிளையைக் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. தெய்வத்தை அடையாளப்படுத்தும் கிளை இரண்டு புனித மண் பானைகளுடன் வைக்கப்படுகிறது. ஒரு ஜோடி பழுத்த வாழைப்பழம், ஒரு ஜோடி இலந்தைப்பழம், தட்டையான அரிசி, சிறிது நெல் மற்றும் துர்வா புல் ஆகியவை தெய்வத்திற்குப் படைக்கப்படுகின்றன.

அங்கு பயன்பாட்டிலிருக்கும் அக்ரஹிண மாதத்தில் (நவம்பர் - டிசம்பர்) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குலுய் சண்டி வழிபாடு செய்யப்படுகிறது. இந்தத் தெய்வம் குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்றும், இம்மரம் குடும்பத்தின் பாதுகாவலர் என்றும் அங்கிருப்பவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

இதேப் போன்று சத்யநாராயண விரதத்தில் இறைவனுக்கும், ஸ்ரீ சித்தி விநாயக விரதத்தில் கணபதிக்கும் இலந்தை மர இலைகள் சமர்பிக்கப்படுகின்றன. மகாசிவராத்திரி அன்று இந்துக்களால் சிவனுக்கு இலந்தைப் பழங்கள் சமர்பிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
'ஆதிமூலமே' என்று அழைத்த யானை... 'கஜேந்திர மோட்ச பரிகாரத் தலம்' எங்கிருக்கிறது தெரியுமா?
Ravanan and Indian jujube tree

இலந்தைப் பழங்கள் அனைவராலும் உண்ணக்கூடிய பழம்தான். வைட்டமின் சி மற்றும் சர்க்கரைகளின் வளமான ஆதாரங்கள். அவை வெயிலில் உலர்த்தப்பட்டு, அனைத்து பருவங்களுக்கும் வைக்கப்படுகின்றன. மேலும் இக்காய்கள் ஊறுகாய்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இலைகள் கால்நடைகளுக்கான தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com