41 நாள் மண்டல விரதம்: சபரிமலை யாத்திரை நம் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது தெரியுமா?

கார்த்திகை முதல் மகரஜோதி வரை ஐயப்ப விரதத்தின் ஆன்மிக ரகசியங்களும் மனக்கட்டுப்பாடும்.
சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra
சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்களின் இல்லங்களில் பக்தி மணம் கமழத்தொடங்கிவிடும். கழுத்தில் மணிமாலை, நாவில் சரண கோஷம், உள்ளத்தில் ஐயனைத் தரிசிக்கும் ஆவல் என பக்தர்கள் விரதத்தைத் தொடங்குவார்கள்.

மாலை அணிவது முதல் மகரஜோதி தரிசனம் வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஆன்மிக அனுபவம்தான்!

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சபரிமலை ஐயப்பன் வழிபாடுதான். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கும் பக்தர்கள், 41 நாட்கள் கடுமையான நியமங்களைக் கடைப்பிடித்து ஐயனைத் தரிசிக்கத் தயாராகிறார்கள். இது ஒரு சாதாரணப் பயணம் அல்ல; மனதையும் உடலையும் பக்குவப்படுத்தும் ஆன்மிகப் பயணம்.

மாலை அணிவது என்பது விரதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. துளசி அல்லது ருத்ராட்ச மணிகளால் ஆன மாலையை, குருசாமி அல்லது கோவில் அர்ச்சகரின் வழிகாட்டுதலுடன் அணிவது வழக்கம். மாலை அணிந்த பிறகு பக்தர்கள் ஒருவரையொருவர் சுவாமி என்று அழைத்துக்கொள்வார்கள். இதன் மூலம் அனைவரும் சமம் என்ற உயர்ந்த எண்ணமும் உருவாகிறது.

விரதக் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயப்பனை வழிபட வேண்டும். சிலர் காலையிலும் மாலையிலும் நீராடி வழிபடுவார்கள். எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, ஆடம்பரங்களைத் தவிர்த்து, தரையில் உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதேபோல், வீட்டிலும் தினமும் ஐயப்பனுக்குப் பூஜை செய்து, மலர் சாத்தி, நெய்வேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. சரண கோஷம் எழுப்பி, ஐயப்பன் பாடல்களைப்பாடி மனதை இறைச்சிந்தனையில் ஈடுபடுத்துவார்கள்.

விரதத்தின் மிக முக்கியமான அம்சம் மனக்கட்டுப்பாடு. அசைவ உணவு, மது, புகை போன்றவற்றைத் தவிர்த்து, கோபம், பொறாமை, பொய் பேசுதல் போன்ற தீய குணங்களையும் கைவிட வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, பிறரிடம் அன்புடனும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய நியமங்களே 41 நாட்கள் மண்டல விரதத்தின் அடிப்படையாகும்.

சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra
சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra

விரதம் நிறைவடைந்ததும் குருசாமியின் வழிகாட்டுதலுடன் இருமுடி கட்டி, சபரிமலைக்குப் புறப்படுவார்கள். பம்பையில் நீராடி, பதினெட்டாம் படியேறி ஐயப்பனைத் தரிசிப்பது பக்தர்களின் வாழ்நாள் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இதைக்கேட்டால் மெய் சிலிர்க்கும்! முருகனுக்கும் ஐயப்பனுக்கும் இப்படி ஒரு ரகசியத் தொடர்பா?
சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra

ஐயப்ப விரதத்தில் இன்னொரு சிறப்பான அம்சம் அன்னதானமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஆகும்.. விரதம் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது , ஆதரவற்றவர்களுக்கு உதவுவது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பக்தி என்பது இறைவனை வழிபடுவதோடு நின்றுவிடாமல், சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதிலும் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

மேலும் சபரிமலைக்குச் செல்லும் வழியில் பக்தர்கள் மேற்கொள்ளும் பேட்டைத் துள்ளல், எருமேலி வழிபாடு போன்ற பாரம்பரிய நடைமுறைகளும் இந்த யாத்திரையின் தனிச்சிறப்புகளாக விளங்குகின்றன. ‌பயணத்தின்போது பக்தர்கள் ஒன்றாகச் சரண கோஷம் எழுப்பிக் கொண்டு செல்வது மனதுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. சபரிமலை யாத்திரையில் வயது, வசதி, அந்தஸ்து என எந்த வேறுபாடும் இல்லை. அனைவரும் ஐயப்பனின் பக்தர்கள் என்ற ஒரே உணர்வுடன் பயணிப்பதுதான் இந்த வழிபாட்டின் மகத்துவம்.

கார்த்திகை மாதம் தொடங்கியதும் பல வீடுகளில் ஐயப்பன் படத்திற்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபடுவதைப் பார்க்க முடியும். மாலை அணிந்த பக்தர்களுக்கு வீட்டில் உள்ளவர்களும் உறுதுணையாக இருந்து விரத நியமங்களைக் கடைப்பிடிக்க உதவுவார்கள். சில இடங்களில் பக்தர்கள் குழுவாகப் பஜனை பாடி ஐயப்பன் நாமத்தை சொல்லி வழிபடுவார்கள்.

சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவை அனைத்தும் குடும்பத்தினரிடமும் சமூகத்தினரிடமும் ஒற்றுமையையும் பக்தியையும் வளர்க்கின்றன. குறிப்பாக சிறு வயதிலிருந்தே ஐயப்ப விரதத்தின் ஒழுக்கங்களையும் சரண கோஷத்தின் மகத்துவத்தையும் அறிந்து கொள்ளும் குழந்தைகள் ஆன்மிகப் பண்புகளுடன் வளர்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

ஐயப்பனைத் தரிசிக்க செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் அந்த பயணம் மறக்க முடியாத அனுபவமாக அமைகிறது. மலையேற்றத்தின் சிரமங்களைக் கூட ஐயனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்.

மாலை அணிவதன் மகத்துவம்:

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்த பிறகு தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது கோபம், பொறாமை, ஆடம்பரம் போன்றவற்றைத் தவிர்த்து பொறுமை, எளிமை , சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பழகுகிறார்கள். இவ்வாறு ஐயப்ப விரதம் என்பது ஒரு புனிதப் பயணம் மட்டும் அல்ல; மனதையும் வாழ்க்கை முறையையும் செம்மைப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சியும் ஆகும்.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
சபரிமலை யாத்திரை - Sabarimala Yatra

கார்த்திகை மாதத்தில் தொடங்கும் இந்த விரதம் வெறும் மலைப்பயணம் அல்ல; நம்முடைய மனதிலுள்ள தீய எண்ணங்களை அகற்றி, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி. அதனால்தான் ஐயப்ப பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா! என்று பக்திப் பரவசத்துடன் சரணமடைகிறார்கள்.