இதைக்கேட்டால் மெய் சிலிர்க்கும்! முருகனுக்கும் ஐயப்பனுக்கும் இப்படி ஒரு ரகசியத் தொடர்பா?

தமிழ் கடவுள் முருகனுக்கும், கலியுக வரதன் ஐயப்பனுக்கும் இடையே மறைந்திருக்கும் ஆன்மீகத் தொடர்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similarities
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similaritiesImage credit: Gemini
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் கார் மேகங்கள் கறுப்பு வண்ணத்தில் வானில் திரள்கின்றனவோ இல்லையோ, கரும் ஆடை அணிந்து, மாலையிட்டுக் கொண்டு, மனுதாபிமானம் மேலோங்க வலம் வரும் ஐயப்ப பக்தர்களை நாடெங்கும் அதிகமாகக் காணலாம். கோபம் கொப்பளிக்கக் கொந்தளிக்கும் மனிதர்கள்கூட, மணிகண்டனின் மாலையை மணிக் கழுத்தில் சுமந்திட, அமைதிப் பூங்காவாய் ஆகிப்போவதே ஐயனின்  திருவிளையாடல்.

சிக்கலில் வேல் வாங்கிய சிங்கார வேலர், சினம் மிகக் கொண்டு திருச்செந்தூரை அடைந்தாலும் போர் நெறி பிறழாது சூரனைச் சொற்களால் ஆற்றுப்படுத்தவே, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, முடியாது போனதால்தான் மனவிரக்கத்தோடே சூரனைச் சம்ஹாரம் செய்கிறார்.

கந்தனின் கடாட்சத்தைப் பெற மலைகளிலும்,மகிழ்வான பள்ளத்தாக்குகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் இருந்தாலும், அறுபடை வீடுகளின் மகிமை அதிக மகத்துவம் பெறுகிறது. அதிலும் ஓர் ஆர்டரும் உண்டு. முதலாவது படை வீடாக முன்னிற்பது திருப்பரங்குன்றம். அடுத்து வருவது சூரசம்ஹாரப் புகழ் பெற்ற திருச்செந்தார்.

மூன்றாவது இடத்தில் முத்தாய் நிற்பது ஆண்டிக் கோலத்தில் அருந்தமிழ் முருகக் கடவுள் நிற்கும் பழனிமலை. நான்காவதாக இடம் பெற்று நம்மை யெல்லாம் உய்விப்பது சுவாமிமலை. ஐந்தாவதாக நின்று அகில உலகுக்கும் அருள் பாலிப்பது திருத்தணி. ஆறாவது படை வீடாக நம் அகங்களில் இனிப்பது பழமுதிர்ச்சோலை. இவற்றைத் தொடர்ந்து மருத மலையும், சிக்கல், எட்டுக்குடி, எண்கண் போன்ற  திருக்கோயில்களும் முருகன் புகழை முழுதாய்ப் பரப்பி வருகின்றன.

கார்த்திகேயனின் கருணை இவ்வாறிருக்க, ஐயப்பனுக்கும் சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் ஆறு என்பது, இருவருக்குமுள்ள ஒற்றுமையைப் பறை சாற்றுகிறது.

தமிழ்க் கடவுளுக்கு நம் தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது போலவே, ஐயனுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஆறு திருத்தலங்கள் உள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறார்கள் குவலய பக்தர்கள். ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை ஆகியவையே அவை.

சுப்ரமணியரோ, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய மூன்று படை வீடுகளிலும் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அதிலும் பழமுதிர்ச்சோலையில் மூலவராகவே தேவியர் இருவருடனும் உடனமர்ந்து அருள் பரப்புகிறார்.

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை: ஆன்மிகப் பயணம் தந்த ஆனந்த அனுபவம்!
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similarities

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் காட்சி தரும் அவர், பழனியில் ஆண்டிக் கோலத்தில் தனியாக இருப்பது போலவே சுவாமி மலையிலும் தனியாகககுரு கோலத்தில் கொலுவிருக்கிறார். பழமுதிர்ச் சோலை தவிர்த்து மற்ற அனைத்துப் படை வீடுகளும் ‘திரு’விலேயே தொடங்கும் பெயர்களைக் கொண்டுள்ளதும் தெய்வானைக் கணவனின் சிறப்பாகும்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவா வினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), மற்றும் திருத்தணி. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு பெயருடன் பக்திமான்களால் அழைக்கப்படுகிறார்.

ஆரியங்காவுவில் புஷ்கலை தேவியுடன் அரசராகக் காட்சி தரும் ஐயப்பன்,அச்சன் கோவிலில் வனராஜனாகக் கையில் அமுதமும், கருப்பனின் காந்த மலை வாளும் ஏற்றுத் தோன்ற, தேவியர் பூர்ணாவும், புஷ்கலையும் இரு புறமும் நின்று மலர் தூவி மகிழ்விக்கின்றனர். இங்கு, ’கல்யாணசாஸ்தா’வாக, இளைஞர்களின் திருமண வாழ்வைத் திருப்தியாக நிறைவேற்றி வைக்கும் தொண்டினைச் செய்கிறார்.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similarities

குளத்துப் புழாவில் ‘பால சாஸ்தா’வாக-குழந்தையாகத் தோன்றுகிறார் மணிகண்டர்.

அதற்கேற்பவே,கோயிலின் நுழைவாயில் குழந்தைகள் செல்லும் அளவுக்குச் சிறியதாகவே உள்ளது. எருமேலியிலோ, வேட்டைக்காரராக கைகளில் வில் அம்புகளுடன் அசத்துகிறார் ஐயன். பந்தளத்தில்தான் மன்னன் ராசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டாராம். மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட ஐயன் கோயிலும் இங்குள்ளதுடன், மணிகண்டருக்கான மகத்தான ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் உள்ளனவாம். சபரி மலையில் சகலருக்கும் அருள் வழங்கும் ஐயப்பன், யோக சின் முத்திரை தாங்கி நிற்கிறார்.

ஆறுமுகக் கடவுளின் அறுபடை வீடுகளோடு மருத மலையையும் மகத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதைப் போலவே, தமிழகத்தின் பாபநாசத்திலுள்ள சொரிமுத்து ஐயனார் கோயிலும் ஐயப்பனின் அறுபடை வீடுகளோடு சேர்ந்துபுகழ் பெறுகிறது.

 கார்த்திகேயரைப் போலவே பால சாஸ்தாவும் சிவனின் குழந்தையே! சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணு) அவதரித்ததாய் வரலாறு பகிர்கிறது.இருவருக்குமே நாமகரணங்கள் ஏகப்பட்டவை உண்டு. கந்தன், கார்த்திகேயன், சுவாமி நாதன், சுப்பிரமணியன், முருகன், செந்தில் நாதன் என்றெல்லாம் முருகனை அழைப்கது போலவே, ஐயனும் மணிகண்டன், பூத நாதன், பூலோக நாதன், எருமேலி வாசன், கலியுக வரதன், பாம்பாவாசன், சபரிவாசன் என்று பல பெயர்களால் விளிக்கப்படுகிறார்.

அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similarities
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similaritiesImage credit: Gemini

ஹரிகரசுதன் என்ற பெயரின் மூலம் சிவனையும், விஷ்ணுவையும் இணைக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். ’ஹரி’ என்பது சிவனையும், ’ஹரன்’என்பது விஷ்ணுவையும் குறிக்கும் சொற்களாம்.

ஐயனின் வரலாறு மிகச் சுவாரஸ்யமானது. பந்தள அரசனுக்கோ ‘எல்லாம் இருந்தும் இல்லையே குழந்தை’ என்ற ஏக்கமே மேலோங்கிக் கிடக்க,வேட்டைக்குச் சென்ற மன்னனுக்குக் காட்டில் கிடைக்கிறது கைக்குழந்தை!மகிழ்ச்சி மனதை நிறைக்க, மணிகண்டனை மகத்தான சக்தியாக உருவெடுக்க வைக்கிறார்.

பருவம் எய்தியதும் பட்டாபிஷேகம் செய்யவும் முற்படுகிறார். ராணிக்கோ, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசாள வேண்டுமென்ற ஆசை மிகுவதால், கைகேயி ஆகி விடுகிறாள்.

நோயுற்றவளாக நடித்து, அதனைப் போக்கப் புலிப்பால் வேண்டுமென்றும் அதனை மணிகண்டனே கொண்டு வர வேண்டுமென்றும் விரும்புவதாகக் கூறுகிறாள். புலியிடம் சென்று பால் பீய்ச்சி வருவது புவியில் நடக்காத செயலென்பதை தேவி மட்டும் உணராதவளா என்ன?

எப்படியோ…மணிகண்டனுக்கு அரசாட்சி கிடைக்கக் கூடாது என்பதே அரசியின் நோக்கம். உடன்பாடு இல்லையென்றாலும் அவளின் விருப்பினை மன்னனால் புறக்கணிக்க முடியாத சூழல். காட்டில் அரக்கி மகிஷியை வதம் செய்த மணிகண்டர் புலி மேலேயே ஏறி அரண்மனை திரும்புகிறார். அனைவரையும் ஆச்சரியத்திலும், அரசியை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறார்.

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் முருகன், தந்தை, தாயைச் சுற்றி வந்த கணேசருக்குத் தந்தை மாம்பழத்தைக் கொடுத்ததால் ,கோபித்துக் கொண்டல்லவா வந்து பழனியில் அமர்கிறார்?

இப்படி ஐயப்பனுக்கும் ஆறுமுகனுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இளங்கி வருகின்றன. இருவருமே உலகம் அமைதியுற, மக்கள் இன்புற்று வாழ, பக்தி மார்க்கத்தில் அருள்பாலித்து வரும் கண் கண்ட தெய்வங்கள்.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
அறுபடை வீடுகள் - Murugan Ayyappan similarities

முடிந்தவர்கள் இருவரின் அறுபடை வீடுகளையும் நேரில் சென்று தரிசித்து நிம்மதி பெறலாம். முடியாதவர்கள், இதயக்கோயிலில் இருவரையும் பூஜித்து, அமைதியான வாழ்வை ஆனந்தமாக வாழலாம்!