
அது அடர்ந்த காடு. ஒரு முனிவர் கடுமையாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த அரசமரத்தின் அருகில் ஒரு அதிசயமான மாமரம் இருந்தது. ஆம், ஆண்டு முழுவதும் தினமும் ஒரு பழம் அந்த மரத்தில் பழுத்துத் தொங்கும்.
அந்த மாமரத்தில் வாழ்ந்த ஒரு குரங்கு, முனிவர் கடும் தவம் செய்வதைக் கண்டு அவர்மீது பக்தி செலுத்தியது. அது தினமும் பழுத்துத் தொங்கும் அந்த ருசிமிக்க மாம்பழத்தை எடுத்து, முனிவர் முன் வைத்துவிட்டு, அதுவும் கண்மூடி அமர்ந்திருக்கும்.
தியானம் முடிந்து எழுந்த முனிவர், குரங்கையும் பழத்தையும் பார்த்து விவரம் புரிந்துகொண்டு மகிழ்ச்சியடைவார். "குரங்கே, நீ கொண்டு வந்த பழம். இதை நீயே உண்டு மகிழ்வாயாக," என்றார்.
அதற்கு குரங்கு, "தவ முனிவரே, நீங்கள் காற்றை உண்டே கடும் தவம் செய்கிறீர்கள். உங்கள் வலிமையால் நானும் பலம் பெறுகிறேன்," என்றது. பின் முனிவர் ஆசி கூறக் குரங்கு தன் இருப்பிடம் சென்றது.
தினமும் அது மாம்பழத்தை முனிவருக்குக் கொடுக்கும். ஆனால், அவர் அதைத் தொட்டுத் திரும்பவும் குரங்குக்கே கொடுத்துவிடுவார்.
அன்று ஒரு சிங்கம் பாய்ந்து வந்து முனிவரை வணங்கிவிட்டுச் சென்றது. மற்றொரு நாள், கடும் சினத்துடன் வந்த புலியோ அடக்கத்துடன் முனிவரை வலம் வந்து சென்றது. ஒரு சிறுத்தை முனிவருடன் குரங்கைப் பார்த்தபோது, குரங்கு அச்சத்துடனே பழத்தை வைத்திருந்தது.
ஆனாலும், சிறுத்தை குரங்கை எதுவும் செய்யாமல், முனிவருடன் அதையும் வணங்கிவிட்டுச் சென்றது. இது குரங்குக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. முனிவரின் தவ வலிமையை வியந்து, குரங்கு அவரை வணங்கி, அவர் திரும்பக் கொடுத்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு மரம் சென்றது.
அன்று மரத்தில் இருந்த குரங்குக்கு பேரதிர்ச்சி. காரணம், மன்னன் பெரும் படையுடன் வேட்டையாட வந்தான். இதனால் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற முக்கிய விலங்குகளுக்கு ஆபத்து என்று குரங்கு உணர்ந்தது.
மன்னன் அருகில் வந்தபோது, விலங்குகள் கோபத்துடன் பாய்வதற்குத் தயாராக இருந்தன. 'மொத்த காட்டுக்கும் ஆபத்து!' என்று அஞ்சிய குரங்கு, உடனே முனிவரிடம் சென்று, "மன்னர் வேட்டையாட வந்துள்ளார். புலி, சிங்கம், சிறுத்தை கோபத்தில் உள்ளன. இவை இல்லாவிட்டால் காடே அழிந்துவிடும். தங்கள் தவ வலிமையால் அவைகளைக் காக்க வேண்டுகிறேன்," என்று கும்பிட்டது.
முனிவர் தவத்தில் இருந்ததால் எதுவும் பேசவில்லை.
"முனிவரே, இது நியாயமா? தினமும் சிங்கமும், சிறுத்தையும், புலியும் தங்களை வணங்கிச் செல்கின்றன. ஆனால் தாங்கள் ஏன் பாராமுகமாக இருக்கிறீர்கள்?" என்று கோபத்துடன் கூறியது குரங்கு.
அதே சமயம், மன்னன் சிங்கத்தைப் பார்த்தான். "அடேடே, மகாராணிக்கு இந்தக் காட்டில் என்ன வேலை?" என்றார் மன்னர். காரணம், சிங்கம் அவர் கண்களுக்கு நாட்டின் மகாராணியைப் போலவே தெரிந்தது. இது குரங்குக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்போது புலி பாய்ந்து வர, மன்னர் ஆச்சரியம் அடைந்து, "அடே, இது இளவரசன். நான் வேட்டைக்கு வருவதற்குள் இவன் வந்துவிட்டான்," என்று புலியைத் தன் இளவரசன் என்று மற்றவர்களிடம் காட்டி பெருமையுடன் பேசினார் மன்னர்.
"ஆனாலும் நம் இளவரசன் மிகவும் கைதேர்ந்தவன்," என்று தளபதி கூற அனைவரும் மகிழ்ந்தனர்.
அடுத்து சிறுத்தைப் புலி வந்தது. "அடாடா, இது என் அன்பு இளவரசியாயிற்றே! இவளும் கானகம் வந்திருக்கிறாள், பாருங்கள்!" என்று சிறுத்தையைத் தட்டிக்கொடுத்த மன்னன், சிங்கம், புலி மற்றும் சிறுத்தையைத் தன் மகாராணி, இளவரசன், இளவரசி வடிவில் பார்த்தபடி அங்குத் தவம் செய்த முனிவரைக் காணச் சென்றார்.
மன்னன் முனிவரை வணங்கி, "என் மகாராணி, இளவரசன், இளவரசி என் வேட்டையைக் காண வந்துவிட்டார்கள். நீங்கள் அவர்களை ஆசிர்வதிக்க வேண்டும்," என்று வேண்டினான்.
"மன்னா, என் ஆசீர்வாதம் உண்டு. ஆனால் நீ நான் கூறுவதை ஏற்க வேண்டும்," என்றார் முனிவர்.
"சொல்லுங்கள் முனிவரே. தாங்கள் எது சொன்னாலும் அதை நிறைவேற்றத் தயாராக உள்ளேன்," என்றான் மன்னன்.
"காட்டில் இருந்து நாடு வெகு தொலைவில் உள்ளது. இருட்டவும் தொடங்கிவிட்டது. எனவே, நான் முதலில் மகாராணி, இளவரசன் மற்றும் இளவரசியை அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறேன். பிறகு என் ஆசீர்வாதம் உனக்கும் உன் பரிவாரத்துக்கும் தருகிறேன்," என்றார் முனிவர்.
"சரி," என்றான் மன்னன்.
"மகாராணி, இளவரசன் மற்றும் இளவரசி ஒரு சிங்கம், புலி, சிறுத்தையைப் போல் பாய்ந்து செல்லுங்கள்," என்று முனிவர் கூறியதும், அவர்கள் அவ்வாறே சென்றதை மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். பின் இருட்டிவிட்டதால், வேட்டையாடாமல் மன்னன் முனிவரிடம் ஆசி பெற்று நாடு திரும்பினான்.
அவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த குரங்கு, "முனிவரே, இன்றுதான் தங்கள் தவ வலிமை கண்டேன். ஆனால், இந்த உண்மை நாளை மன்னனுக்குத் தெரிந்துவிட்டால் ஆபத்தாயிற்றே," என்றது. முனிவர் பதில் பேசாமல் சிரித்தார்.
"எனக்கு அச்சமாக இருக்கிறது, முனிவரே," என்ற குரங்கிடம், "நாளை நடப்பதைப் பார்," என்று முனிவர் நம்பிக்கை அளித்தார். குரங்கு தன் இருப்பிடம் சென்றது.
மறுநாள் மன்னன் மட்டும் வந்தான். "முனிவரே, நேற்று எனக்கு உண்மை புரிந்தது. என் ராணியோ, இளவரசரோ காட்டுக்கு வரவில்லை. அவர்களை அப்படி காட்டியது தாங்கள்தான். என் வேட்டையைத் தாங்கள் கெடுக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர், "ஒரு மன்னன் இல்லை என்றால் நாடு என்ன ஆகும்?" என்று கேட்டார்.
மன்னன், "மக்கள் தறிகெட்டு வாழ்வார்கள்," என்று பதிலளித்தான்.
"அதே போல்தான் காடும். சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை இல்லை என்றால், மனிதன் மதிப்புமிக்க மரங்களை வெட்டுவான். அப்பாவி முயல், மான் போன்ற சின்ன விலங்குகளை வேட்டையாடுவான். பேராசையால் யானைகளைக் கொன்று தந்தங்களை விற்பான். ஆக, காடு ஒட்டுமொத்தமாக அழியும். எஞ்சிய விலங்குகள் நாட்டிற்குள் வரும். இயற்கையும் பொய்த்துவிடும்.
எனவேதான், காடு செழிக்க இந்த விலங்குகள் அவசியம் வாழ வேண்டும். நீ இல்லாத உன் நாட்டை நினைத்துப் பார்த்தால், காட்டின் விலங்குகளின் அவசியம் உனக்குப் புரியும்," என்றார் முனிவர்.
தன் நிலையைப் புரிந்துகொண்ட மன்னன், தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். மேலும், "இனி வேட்டையாட மாட்டேன். மாறாக, இயற்கைத் தந்த செல்வமான காட்டை இன்னும் வளப்படுத்துவேன்," என்று உறுதி கூறி முனிவர் பாதங்களில் விழுந்தான்.
இப்போது குரங்கு கொண்டு வந்த மாம்பழத்தைக் கண்ட மன்னனிடம், முனிவர் அதைக் கொடுத்துச் "சாப்பிடு," என்றார். அதை உண்ட மன்னன், "அமிர்தம் போல் அல்லவா இருக்கிறது!" என்று ஆச்சரியப்பட்டான்.
"மன்னா, நீ கொடிய விலங்குகளை வேட்டையாடினால், முடிவில் இந்த மரங்கள் எல்லாம் மனிதனால் மொத்தமாக அழிக்கப்பட்டுவிடும்," என்றார் முனிவர்.
தன் நிலை உணர்ந்த மன்னன், "நாட்டுக்கும், காட்டுக்கும் நான்தானே மன்னன்? மனிதர்கள் நலன் பேணும் நான், விலங்குகளின் நலனையும் இனி பேணுவேன்," என்று சபதம் செய்து நாடு திரும்பினான்.
குரங்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது முனிவரை வலம் வந்து வணங்க, அவர் நல்லாசி கூறித் தவத்தில் ஆழ்ந்தார்.
நீதி: நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் முக்கியமானது.