

சமயபுரம் பூச்சொரிதல் விழா (Poochoriyal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும்.
தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்று, பூச்சொரிதல் விழா (Poochorithal). குறிப்பாக சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிபாடாகும். மூலவர் அம்மன் மீது பூக்களைக் குவித்து, குளிர்விக்கும் நோக்கில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும், அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வாழ்வில் வளம் பெருகுவதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
சக்தி வழிபாடு தமிழகத்தில் பிரசித்தமானது. அதிலும் சமயபுரம் மாரியம்மன் கோவில், அம்மன் கோவில் களுக்கெல்லாம் தலைமைப் பீடம் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிக முக்கிய கோவிலான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் புகழ்பெற்றது. 'தாய் வீடு சமயபுரம்’ என்று புகழப்படும் இந்த ஆலயத்தில் எல்லா நாள்களுமே திருவிழாக் கோலம்தான்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. பூச்சொரிதல் விழாவைத் தொடங்கும் விதமாக சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் 'பச்சைப் பட்டினி விரதம்' மேற்கொள்வார். பொதுவாக பக்தர்கள், கடவுளை நோக்கி விரதம் இருந்து வழிபடுவார்கள். ஆனால் உலக நன்மைக்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் சமயபுரம் மாரியம்மனே 28 நாள் விரதம் இருப்பார். இது ‘பச்சை பட்டினி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி, பங்குனி மாதக் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் இந்த விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அந்த சமயத்தில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் (சமைத்த உணவு) படைக்கப்படாது. நீர் மோர், துள்ளு மாவு, இளநீர், பானகம், போன்றவை மட்டுமே படைப்படும். பக்தர்களும் விரத உணவை மட்டுமே உண்கிறார்கள். இதனால், இந்த சமயத்தில் கோவிலில் அன்னதானம் செய்யும் சடங்கு நடைபெறுவதில்லை.
அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த 28 நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அம்மனின் விரதம் நல்லபடியாக நிறைவு பெறவும், அம்மனை குளிர்விக்கவும் பக்தர்கள் கூடை கூடையாக விதவிதமான மலர்களைத் தலையிலும், யானை மீதும் சுமந்து வந்து அம்மனுக்குச் சாற்றி வழிபடுகின்றார்கள். இந்த விழாவுக்காக, அனைத்து மாவட்ட ஊர்களிலிருந்தும் விதவிதமான மலர்கள் வண்டிகளில் கொண்டு வரப்படுகிறது. ஜாதி, மத பேதமில்லாமல் எல்லா மக்களும் பூக்களை வாங்கி அம்மனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்.
திருவிழா முதல் நாளில் கோவில் நிர்வாகம் சார்பில் யானை மீது பூக்கூடைகள் வைத்து மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கநாதர் அனுப்பிவைக்கும் மலர்களே அம்மனுக்கு முதன்முதலில் சமயபுரம் அன்னையின் மீது சொரியப்படுகிறது.
என்ன இருந்தாலும் அண்ணன் வீட்டுச் சீதனம் என்றால் பெண்களுக்கு ஓர் அபிமானம் இருக்கும்தான் இல்லையா?
மல்லிகை, ரோஜா, முல்லை, செவ்வந்தி போன்ற பலவகையான நறுமணமிக்க மலர்கள் அம்மன் மீது சமர்பிக்கப்படுகிறது. பூக்களால் அம்மன் முழுமையாக மூடப்பட்டு காட்சியளிப்பது இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகும். அப்படி மலர்கள் சூழ்ந்து காணப்படும் சமயபுரம் மாரியம்மனை காண்பதற்கு கண்கோடி வேண்டும். பூச்சொரிதல் விழாக்காலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அவளது அருளை பெற்று செல்கிறார்கள்.
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு பக்தர்கள் மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இவள் எளிய மக்களின் காவல் தெய்வமாக, நீதி வழங்கும் நீதி தேவதையாக, எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லும் பேரரசியாக எப்போதும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு துணையிருக்கிறாள்.
விமான நிலையத்திலிருந்து சமயபுரம் சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து டாக்ஸி அல்லது கார் மூலம் கோயிலை அடையலாம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் சமயபுரத்திற்கு அடிக்கடி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளன.
சமயபுரம் டோல்கேட் (Samayapuram Tollgate) அல்லது சமயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள கோயிலுக்கு ஆட்டோக்கள் மூலம் செல்லலாம்.