
மனித உடல் பஞ்ச பூதங்களுடனும், நவகிரகங்களுடனும் தொடர்புடையது. இவ்வுலகமே பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை நாம் அனைவருமே அறிவோம். நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் தொகுப்புதான் இப்பூவுலகம்! தொகுப்புக் கூட்டணியில் ஒற்றுமை நிலவும் வரை ப்ராப்ளம் ஒன்றுமில்லை. ஒத்துப் போகாமல் ஒன்றுக்கொன்று முறுக்கிக் கொண்டால்தான் எல்லோருக்கும் பிரச்சனை!
பஞ்ச பூதங்களுடன் நெருக்கமான தொடர்பையும், ஆதிக்கத்தை அவற்றின் மீது செலுத்தும் வலுவையும் பெற்றவை நவ கிரகங்கள்! அது போலவே தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களை ஆற்றுப் படுத்தும் ஆற்றலையும் அவை பெற்றுள்ளன. எனவேதான் நவ கிரகங்களையும் அமைதிப் படுத்தும் விதமாக ஆலயங்களில் நவகிரகங்களுக்கென்று தனி பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பக்தர்கள் அனைவரும் சுற்றி வந்து வணங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஒருமுறை சுற்றி வந்து வணங்குபவர்களும் உண்டு. மூன்று முறை சுற்றுபவர்களும் உள்ளனர். ஒன்பது முறை (9x1) வலம்வருபவர் பலர்.
பதினெட்டு முறை வலமும், இடமுமாகச் சுற்றுபவர்களும் (9x2) உண்டு. ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 சுற்று என்ற முறைவைத்து, 27 சுற்றுக்கள் (9x3)சுற்றுவோரும் உள்ளனர். ஒரு கிரகத்திற்கு ஒரு டஜன் சுற்று என்று கணக்கிட்டு,108 (9x12) தடவை வலம் வருபவர்களும் உண்டு.
இந்த ஆறில் ஏதாவது ஒன்றில்தான் ஒவ்வொருவரும் அடக்கம்.
நவகிரகங்கள் எவையெவை என்பதை எல்லோரும் அறிவோம்தானே!
-சூரியன்
-சந்திரன்
-செவ்வாய்
-புதன்
-குரு
-சுக்கிரன்
-சனி
-ராகு மற்றும்
-கேது
என்பவைதான் அவை!
சரி! ரகசியத்திற்கு வருவோம். கொஞ்சம் இன்னும் பக்கத்தில் வாங்க! ரகசியம் பேசறது பகல்னா, பக்கம் பார்த்துப் பேசணுமாம். ராத்திரின்னா…வாயையே திறக்கக் கூடாதாம்! இது பகலா? இல்ல இரவா? எதுவா இருந்தாலும், மெல்லவே பேசுவோம்!
இந்தக் காலத்துல இன்னொரு தொந்தரவு என்னன்னா, ஒவ்வொருத்தரும் காதில மெஷினை வெச்சுக்கிட்டுப் பாட்டு கேட்கறாங்களா... மொறைக்காதீங்க! சீக்ரெட்டை சொல்லிடறேன்!
உங்க ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் எவ்வளவு ஜம்முன்னு ஃபேவரான இடங்களில் இருந்தாலும், நீங்க உச்சக்கட்ட உயர்ந்த பலன்களை அனுபவிக்கக் கீழ்க்கண்ட அணுகு முறைகள் ரொம்பவும் முக்கியம்!
சூரியனை வசியப்படுத்துவது மிக எளிது. நீங்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உங்கள் தந்தையை மதியுங்கள்! அவருக்கு உரிய மரியாதையை அளித்து, அவர் ஆசீர்வாதத்தை அனைத்துக்கும் பெறுங்கள். அவர் ஆலோசனைகளைப் பொறுமையுடன் கேட்டு, அவர் மன நிம்மதிக்கு வழி கோலுங்கள்! அப்பா ஸ்தானத்தைக் குறிப்பது சூரியன்! உங்கள் வாழ்வில் அனைத்தும் முறையாக நடக்க அருள்பவர் சூரியன். தக்க வயதில் திருமணம், தொழிலில் முன்னேற்றம் போன்றவை பாதிக்கப்படாமல் இருக்க சூரியன் உதவுவார்!
அம்மாவை வணங்கி, வாழ்த்தி, போற்றி, பாதுகாத்திடுங்கள்! சந்திரனை வசியப்படுத்த அம்மாவே பிரதானம்! அம்மா ஸ்தானத்துக்கு உரியவர் சந்திரன்! அழகு கூடும்; அறிவாற்றல் பெருகும்; குழப்பங்களை விலக்கி மனது குதூகலிக்கும். மாறினால், அனைத்தும் நெகட்டிவ் ஆகும்.
மனைவி இடத்தைக் குறிப்பது சுக்கிரன் என்பதால், மனைவியை மரியாதையுடன் நடத்த வேண்டியது ஒவ்வொரு கணவனின் கடமையாகும். மனைவிதான் மகாலட்சுமி என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
மனைவிகள் கணவனைக் கண்ணியமாக நடத்துவதுடன், அவர்களுடன் இணங்கி வாழ வேண்டும். ஏனெனில் கணவன் இடத்தைக் குறிப்பவர் குரு.
செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் கிடைக்க, சகோதர, சகோதரிகளை நல்லமுறையில் பேண வேண்டும். அவர்கள் தான் செவ்வாயின் ஸ்தானத்தில் இருப்பவர்கள். அவர்கள் மகிழ்ந்தால், செவ்வாய் மகிழ்ந்து அருளுவார்!
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, இன்ப துன்பங்களில் துணை நின்று எப்பொழுதும் அன்பு பாராட்டினால், கிரகங்களும் மகிழ்ந்து நல்லது செய்வார்கள்!
எல்லோர் வாழ்வும் சிறக்கும்! உலகில் அமைதி நிலவும்!