
சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தலம். திருவேற்காடு என்றால் தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் எனப் பொருள். இக்கோவிலின் புராணப் பெயர் வேலங்காடு. இக்கோவிலை அடைய எல்லா இடங்களில் இருந்தும் பேருந்து வசதியும், அருகில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையமும் உள்ளது. இத் திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
சுயம்பு அம்மன்:
மூலவர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன். தல விருட்சம் கருவேல மரம். தீர்த்தம் வேலாயுத தீர்த்தம். பூஜைகள் காமீகம் ஆகமப்படி நடைபெறுகின்றன. ஐப்பசி பௌர்ணமியில் இங்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தை மாதம் பிரம்மோற்சவம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் என விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
மாரி என்றால் மழை. கருமாரி என்றால் கரிய நிறத்து மழை மேகத்தைப் போன்று அருளை வாரி வழங்குபவள் எனப் பொருள். மூலவரான அன்னை சுயம்புவாக அருள்கிறாள். இவளுக்கு பின்புறம் இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காட்சி தருகிறாள். பிரகாரத்தில் உற்சவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சியளிக்கிறாள். மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தரும் இவள் சாந்த சொரூபியாக பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் வீற்றிருக்கிறாள்.
63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய வேதபுரீஸ்வரர், பாலாம்பிகை கோவிலும் அருகிலேயே உள்ளது. அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளிய தலம் இது. திருவேற்காடு தேவாரம் என்ற பாடலில் சம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இக்கோவில் குறித்து தனது பாடலில் பாடியுள்ளார்.
பதிவிளக்கு:
சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக வேப்பிலையும், சாம்பலும் பிரசாதமாக தரப்படுகிறது. அம்பாளின் சன்னிதியில் ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதை 'பதிவிளக்கு' என்கிறார்கள். அம்மனையும் இந்த விளக்கையும் தரிசிக்க மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிர் எதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு என்று கூறுகிறார்கள்.
மரச்சிலை அம்மன் சன்னதி:
இக்கோவிலில் மரச்சிலை அம்மன் என்ற சன்னதி உள்ளது. இங்கு மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இவளை பக்தர்கள் 'மரச்சிலை அம்மன்' என்றே அழைக்கின்றார்கள். இவளிடம் வேண்டிக் கொள்ள, வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அத்துடன் அருகில் உள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கமும் இங்குள்ளது. இங்கு ரூபாய் நோட்டுகள் மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இவளை வேண்ட, செல்வ வளம் பெருகும்.
இங்கு சீனிவாச பெருமாள் தெற்கு திசை நோக்கி நின்றபடி அருளும் சன்னதியும் உள்ளது. கோவிலுக்கு வெளியில் 'திருச்சாம்பல் பொய்கை தீர்த்தம்' உள்ளது. அம்பாள் சன்னதிக்கு எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்மன் தலங்களில் திருவிழாவின்போது காப்பு கட்டித் தான் விழா நடத்துவார்கள். ஆனால் இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடத்தப்படுகிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோவில் பிரசாதமாக தருகின்றனர்.
தல வரலாறு:
முற்காலத்தில் இந்தப் பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. மக்கள் அதை அம்பிகையாக பாவித்து வணங்கி வந்தனர். ஒரு சமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை புற்று இருந்த இடத்தில் கோவில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோவில் எழுப்ப புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு வடிவில் எழுந்தருளி இருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது. அம்பிகை தானாக தோன்றியதால் இவளுக்கு 'கருவில் இல்லாத கருமாரி' என்ற பெயரும் உண்டு.
பால ரூபத்தில் சிம்ம வாகனத்தில் பால பிரத்யங்கிரா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்படுகிறது. பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் அழகாக காட்சி தருகிறாள்.
புற்று சந்நிதி:
முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம் கோவில் கட்டும்பொழுது கோவிலை விட்டு வெளியேறியது. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இந்த இடத்தில் பெரிய புற்று ஒன்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வேண்ட, ராகு கேது தோஷம் நீங்கும் என நம்புகின்றனர். முக்கிய நேர்த்தி கடன்களாக குங்கும அபிஷேகம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை பக்தர்களால் பக்தியுடன் செய்யப்படுகின்றன.
பொதுவாகவே அம்மன் கோவில்களில் ஆடி மாதம் விசேஷம். இங்கும் 1008 பால்குட அபிஷேகமும், திருத்தேர் பவனியும், இசைக் கச்சேரிகளும் நடைபெறும். தை மாதம் பிரம்மோற்சவமும், தீர்த்த வாரியும், தெப்ப உற்சவமும் நடைபெறும். பௌர்ணமி தோறும் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய உதயத்தின் போது சூரியனின் கதிர்கள் அம்பிகையின் சிரசில் படுவதை காண பக்தர்கள் கூட்டம் அலையெனக் கூடுகிறது.