
வழக்கமாக பெருமாள்தானே சயனக் கோலத்தில் இருப்பார். சிவபெருமான் லிங்க வடிவிலோ நடராஜராகவோ அருள்பாலிப்பார். “இது என்ன புதுசா இருக்கே, பள்ளி கொண்ட சிவன் எங்கே இருக்கார்னு கேட்கிறார்களே,” என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
வெகு அழகாக அம்பாளின் மடியில் தலை வைத்துப் படுத்து அருள்புரியும் பள்ளி கொண்டீஸ்வரர் கோயிலைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஊத்துக்கோட்டையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில், ஆந்திர மாநிலம் சித்தூர் எல்லையில் சுருட்டப்பள்ளி என்னும் இடத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டீஸ்வரராக அருள்புரிகிறார்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை ஒன்றாகத் திரட்டி சிவபெருமான் உட்கொண்டார். உலக உயிர்களைக் காத்தருள்வதற்காக எல்லாம்வல்ல இறைவன் விஷத்தை உட்கொண்டதைக் கண்ட பார்வதி தேவி பதறினார்.
விஷம் மேற்கொண்டு உள்ளே செல்லாதபடி, தன் கையால் சிவபெருமானின் கண்டத்தை அழுத்திப் பிடிக்க, விஷம் தொண்டையோடு நின்றுவிட்டது. அதனாலயே சிவபெருமானுக்கு நஞ்சுண்டன் என்றும் திருநீலகண்டன் என்றும் பெயர் ஏற்பட்டது.
கொடிய விஷத்தை உண்டதால் ஏற்பட்ட களைப்பு நீங்குவதற்காக உமை அம்மையின் மடியில் தலை சாய்த்து இளைப்பாறுகிறார் சிவபெருமான். பரமேஸ்வரனின் இந்த சயனக் கோலத்தை வேறு எங்கும் காண முடியாது. அதனால் இதைப்பற்றி கேள்விப்பட்ட அனைத்து தேவர்களும் முனிவர்களும் அவரைத் தரிசிக்க விரைந்து வந்தனர்.
இறைவன் இளைப்பாறிக் கொண்டிருப்பதால் அனைவரையும் சற்று நேரம் காத்திருக்கச் சொல்கிறார் நந்தி தேவர். அவ்வாறே அனைவரும் காத்திருந்து பள்ளிகொண்டீஸ்வரரைத் தரிசிக்கின்றனர்.
மாலையும் இரவும் இணையும் நேரத்தில் பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், சப்தரிஷிகள் என அனைவரையும் ஒருங்கே பார்த்த சிவபெருமான் மகிழ்ந்து, நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்தக் கூத்தாடினார்.
இதுவே ப்ரதோஷ காலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்தது சனிக்கிழமை என்பதால்தான் சனிக்கிழமைகளில் வரும் ப்ரதோஷம் சனி மகா ப்ரதோஷம் என்று கொண்டாடப்படுகிறது.
பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலில், உலக அன்னை ஸ்ரீ சர்வ மங்களாதேவியின் மடியில் தலை வைத்து நான்கு கரங்களுடன் சயனக் கோலத்தில் ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அவரைச் சுற்றி பிருகு முனிவர், நாரதர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், சந்திரன், சூரியன், குபேரன், அகத்தியர், கௌதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்ரர், வால்மீகி, இந்திரன், விநாயகர், முருகன் என அனைவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்கலாம்.
சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் வால்மீகி ஈஸ்வரர் மிகவும் பழமை வாய்ந்தவர் என்றும், அவர்தான் மூலவர் என்றும் சொல்கின்றனர். வால்மீகி முனிவர் வழிபட்ட லிங்கம் என்பதால் வால்மீகி ஈஸ்வரர் என்று வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள் இக்கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள்.
ராமபிரான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ராமலிங்கேஸ்வரர், ஏகபாத மூர்த்தி (பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் இணைந்து ஒரே சிற்பமாக அழகாக வடித்துள்ளனர்), வால்மீகி மகரிஷி, சாளக்கிராம விநாயகர், தம்பதி சமேத தக்ஷிணாமூர்த்தி என பல அதிசயங்களை இக்கோவிலில் காணலாம்.
சயனக் கோலத்தில் பள்ளி கொண்டீஸ்வரராக சிவன் அருள்புரிந்து பாத தரிசனம் கொடுப்பதால், பெருமாள் கோவிலில் தருவது போல் இங்கும் பக்தர்களுக்கு சடாரி வைத்து தீர்த்தப் பிரசாதம் வழங்குகிறார்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு கொண்டாடப்படுவதற்கு மூல காரணமாக இத்தலம் விளங்குவதால் இக்கோவிலை ப்ரதோஷ க்ஷேத்திரம் என்றும் அழைக்கிறார்கள். ப்ரதோஷ வழிபாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
சென்னையில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இந்த க்ஷேத்திரம் இருக்கிறது.