எல்லோரும் திருப்பதியில் உள்ள பெருமாளைதான் வேண்டிக் கொண்டு வருகிறோம். அவரின் மறு உருவமாக தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் கருங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள பெருமாளை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருநெல்வேலி திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. கருங்குளம் என்ற ஊரில் மலை மீது அமைந்துள்ளது. ஒருபுறம் தாமிரபரணி நதியும் மறுபக்கம் வாழை மரங்களும் நிறைந்த சிறப்பான மலைப்பகுதியில் இக்கோவில் உள்ளது.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் இங்கும் பெருமாள் சித்ரா பௌர்ணமி அன்று தாமிரபரணி ஆற்றில் இறங்குவது கண்கொள்ளா காட்சியாகும்.
ஒரு சமயம் வடநாட்டில் சுபகண்டன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு கண்டமாலை என்ற தீராத வியாதி வந்தது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. அந்த மன்னன் திருப்பதி சென்று மனமுருக வேண்டிக் கொண்டான்.
அன்று இரவு பெருமாள் கனவில் தோன்றி, "சுபகண்டா எனக்கு சந்தன கட்டையை கொண்டு ஒரு தேர் செய்ய வேண்டும் அதில் ஒரு கட்டை கூட மிஞ்ச கூடாது. அதன் பிறகு உனக்கு நல்ல தீர்வு சொல்கிறேன்," எனக் கூறி மறைந்தார்.
மன்னனும் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க சிற்பிகளை கொண்டு சந்தன கட்டையில் பெருமாளுக்கு அழகிய தேர் ஒன்றை செய்தார். முடிவில் ஒரு கட்டை மீதமாகி விட்டது. மன்னன் மீண்டும் பெருமானிடம் வேண்டி நின்றான்.
பெருமாள் சுபகண்டன் கனவில் மீண்டும் தோன்றி, "தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியை ஒட்டி வகுளகிரி ஷேத்திரம் என்ற இடத்தில் நான் மக்களுக்கு அருள் புரிய இருக்கிறேன். அங்கே இந்த உருவமற்ற சந்தன கட்டையை பிரதிஷ்டை செய். உன் நோய் தீரும்," என்று சொல்லி மறைந்தார்.
மன்னன், "அந்த இடத்தை நான் எப்படி அறிவேன்?" என்றதற்கு பெருமாள், "தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் ஒரு பசுவும் கன்றும் இருக்கும். அதன் பின்னால் செல். அது எந்த இடத்தில் மறைகிறதோ, அந்த இடத்தில் எனக்கு சந்தன கட்டை மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்,"என்றார்.
மன்னனும் தன் பரிவாரங்களுடன் தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையை அடைந்து பசுவும் கன்றும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதன் பின்னால் செல்ல அது ஒரு மலைப்பக்கம் சென்று மறைந்தது. அந்த இடத்தில் மன்னர் கோவில் கட்டி சந்தன கட்டையை பிரதிஷ்டை செய்து, பால், நெய், சந்தனம் இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்தார். மன்னரின் தீராத நோயும் மறைந்தது. பின்னர் மன்னர் வடநாட்டிற்கு சென்றுவிட்டார்.
பல ஆண்டுகளாக இந்த சந்தன கட்டைக்கு தினசரி அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால் ஒன்றுமே ஆவதில்லை. இதுவரை எந்த சேதாரமும் ஏற்பட்டது இல்லை. இந்த உருவமற்ற சந்தன கட்டை தான் வெங்கடாஜலபதி என அழைக்கப்படுகிறார்.
உற்சவரராக சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாககாட்சி அளிக்கிறார்.
இங்குள்ள புளியமரம் உறங்கா புளி என அழைக்கப்படுகிறது. இந்த மரம் பூக்கும். ஆனால் காய்க்காது. இரவில் இலைகள் உறங்குவதில்லை. எனவே இதற்கு உறங்கா புளி என பெயர் வந்தது. இதுவே கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. மலைமீது உள்ள பெருமாளை வணங்குவதற்கு முன்பு அடிவாரத்தில் உள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டு மேலே செல்ல வேண்டும். இந்த சிவன் கோவிலில் என்ன விசேஷம் என்றால் நவகிரகங்கள் தங்கள் தம்பதி சகிதம் காணப்படுகிறார்கள்.
மலை மீது உள்ள பெருமாளுக்கு நீராஞ்சனம் செய்து வழிபடுவது மிகுந்த நன்மை பயக்கும். தீராத நோய்கள் தீரும். அரசு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு வேண்டியும் திருக்கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். நினைத்த காரியம் நடக்கும்.
இங்குள்ள நேர்த்திகளை திருப்பதியில் செய்ய இயலாது. ஆனால், திருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இந்த கோவிலில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
புரட்டாசி சனியன்று கருட சேவை மிக சிறப்பாக நடைபெறும். இரவு 11 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் கிரிவலம் வருவார். அப்போது பக்தர்கள் அனைவரும், "கோவிந்தா..! கோபாலா..! என்று கோஷமிட்டுக்கொண்டு பின் செல்வார்கள். இந்த விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இறுதி நாளில் பெருமாள் மலையை விட்டு கீழே இறங்கி தாமிரபரணி நதிக்கரையில் மீன் விளையாட்டு விளையாடுவார். மறுநாள் பச்சை சாத்தி மீண்டும் மலை ஏறுவார்.
மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இணையாக இந்த நிகழ்ச்சி கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று காலை பகல் நேரத்தில் பெருமாள் மலையை விட்டு கீழே இறங்கி வருவார். வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பரமபத வாசல் என்று தனியாக எதுவும் கிடையாது. வெங்கடாஜலபதி உருவமற்ற நிலையில் சந்தன கட்டையாக மூலவராக இருக்கிறார். சீனிவாச பெருமாள் தம்பதி சமேதராக, உற்சவமூர்த்தியாக இக்கோவிலில் தனி சன்னதியுடன் காணப்படுகிறார்.
தினசரி காலை ஏழு மணி முதல் 10 மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை நடை திறந்திருக்கும். படி ஏற முடியாதவர்கள் கோவிலில் பின்பக்கம் கார் வழியாக மலை மீது வரலாம். ரோடு வசதி உள்ளது. அக்காலத்தில் மரங்கள் நிறைந்து குளத்தை கருமையாக மாற்றியதால் கருங்குளம் எனப் பெயர் பெற்றது.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டு நன்மை அடையலாம். சிறந்த பரிகாரத்தலமாக விளங்கும் இத்திருக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.