
ஏழைகளின் கண்கண்ட தெய்வம் மாரியம்மன். அவளுக்கு ராகி கூழ் ரொம்பப் பிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்து வைத்து இருந்தார்கள்.
சென்னை ஆழ்வார் திருநகரில் வேம்புலி அம்மன் கோயில் இருக்கிறது. வாராவாரம் ஜெகன் மற்றும் துர்கா வேம்புலி அம்மன் கோயிலுக்கு வெள்ளி அன்று செல்வார்கள். கல்யாணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லையே என இருவருமே வருத்தம் அடைந்தார்கள். ஆனால், கடவுள் மீது குறிப்பாக மாரியம்மன் மீது அபார நம்பிக்கை வைத்து இருந்தனர்.
மாதாமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவேற்காடு கோயிலுக்குச் சென்று விடுவார்கள். பிறகு வருடாவருடம் ஆடி மாதத்தில் எல்லோருக்கும் கூழ் கொடுப்பார்கள். ஆம், வேம்புலி அம்மன் கோயிலிலும் கொடுப்பார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றுவார்கள்.
ஒரு நாள் கூழ் ஊற்ற கோயிலுக்கு ₹ 500 தர வேண்டும். இந்த வருடம் ஜெகன் - துர்கா ₹ 500 கட்டினார்கள். வரும் வெள்ளிக்கிழமை அவர்கள் பெயரால் கூழ் ஊற்றப்படும்.
இருவருமே அம்மனிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். வெள்ளிக்கிழமை வந்ததும் இருவருமே அம்மனை வேண்டி பிராகாரத்தை அங்கப் பிரதட்சணம் செய்தார்கள்.
பின்னர் கூழ் ஊற்ற ஆரம்பித்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், பொறுமையாக இருவருமே எல்லோருக்கும் கூழ் ஊற்றினார்கள். தாங்களும் கூழை அம்மன் பிரசாதமாக நினைத்துக் குடித்தார்கள். காலை கூழ் ஊற்றுதல் முடிந்தது. இனி மாலை 6 மணிக்கு மீண்டும் கூழ் ஊற்றுதல் தொடர்ந்தது.
ஜெகன் - துர்கா பயபக்தியுடன் வந்திருந்தவர்களுக்கு கூழ் ஊற்றினார்கள். மனதார அம்மனை குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு வருடம் முடிந்தது. நாட்கள் பறந்தன. மாதங்கள் ஓடின. வருடம் நகர்ந்தது. ஆடி மாதத்திற்கு இன்னும் 4 மாதங்கள் இருந்தன. இந்த வருடம் திருவேற்காடு கோயிலிலும் கூழ் ஊற்ற முடிவு செய்தனர்.
அங்கு ஒரு நாளுக்கு ₹ 1,000. இப்போதே புக் செய்ய வேண்டும். ஜெகன் - துர்கா ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திருவேற்காடு சென்று ஆடி மாதம் கூழ் ஊற்ற ₹ 1000 கொடுத்து பதிவு செய்தார்கள். தேதி நிச்சயம் ஆனது.
வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாதம் கட்டினால் போதும். ஆடி மாதம் வர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் துர்கா முழுகாமல் இருந்தார். டாக்டரிடம் சென்றார்கள்.
ஆம், துர்கா 2 மாச கர்ப்பிணியாக உள்ளார் என்று டாக்டர் சொன்னார்.
ஜெகன் - துர்கா சந்தோஷம் அடைந்தார்கள். அம்மன் தங்களைக் கைவிடவில்லை என்று நம்பினார்கள்.
ஆடி மாதம்…!
முதலில் வேம்புலி அம்மன் கோயில். ஜெகன் மட்டுமே அங்க பிரதட்சணம் செய்தார். துர்கா 3 மாத கரப்பணியாக இருந்தார். இருவருமே மிகுந்த சந்தோஷத்துடன் எல்லோருக்கும் கூழ் ஊற்றினார்கள்.
பிறகு அதே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருவேற்காடு சென்று எல்லோருக்கும் கூழ் ஊற்றினார்கள். அவர்களுக்கு ஆனந்தம். அம்மனுக்கு நன்றி சொன்னார்கள்.
7 மாதம் எப்படி போனது என்றே தெரியவில்லை. துர்கா பிரசவவலியுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.
வெள்ளிக்கிழமை காலை துர்காவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஜெகன் துள்ளிக் குதித்தார். மாரியம்மன் தங்களைக் கைவிடவில்லை என்று உணர்ந்தார்.
துர்காவிற்கு ஒரே சந்தோஷம். இரண்டும் பெண் குழந்தைகள்தான். அம்மனே தமக்கு வந்து பிறந்து உள்ளதாக நினைத்தார்.
மகப்பேறு முடிந்தது. வீட்டிற்கு வந்தார் துர்கா. ஜெகன் - துர்கா குழந்தைகளுக்கு என்ன பேர் வைக்கலாம் என்று யோசித்தார்கள். பின்னர் இருவருமே சேர்ந்து பெயர் தேர்வு செய்தார்கள்.
ஆம், அம்பாள்..! சக்தி….!!