ஏப்ரல் 24: பகவான் பாபா மஹாசமாதி தினம்!

Sri Sathya Sai Baba
Sri Sathya Sai BabaImg Credit: Wikimedia Commons
Updated on
deepam strip
deepam strip

உலகத்திலுள்ள பல நாடுகளிலும் மதம், மொழி, ஜாதி, இனம்,பால், வயது, அந்தஸ்து ஆகிய எல்லாவற்றையும் தாண்டி பல லட்சம் மக்களுக்கு அருள் பாலித்து அவர்களை உயரத்தில் ஏற்றிய சமீப காலத்திய அவதாரம் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா என்னும் மஹா அவதாரமாகும்.

ஷீர்டி சாயி, சத்ய சாயி, பிரேம சாயி என்ற மூன்று அவதாரங்களில் இது இரண்டாவதாக உதித்த அவதாரமாகும்.

அனைவரையும் ஒரு நொடியில் கவர்ந்து ஆட்கொண்ட ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் எல்லையற்றவை. அற்புதங்கள் எனது விஸிடிங் கார்ட் (Miracles are my Visiting cards) என்று அவர் நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.

பக்தர்களுக்கு அவ்வப்பொழுது அவர் அங்கையை அசைத்து விபூதியைத் தந்து அருள் பாலிப்பது வழக்கம். இந்த விபூதி எங்கிருந்து எப்போது வருகிறது என்பதை விஞ்ஞானிகளாலும் விளக்க முடியவில்லை.

வேடிக்கையாக 1966ம் ஆண்டிலேயே கணக்குப் போட்ட ஒரு பக்தர் ஒரு நாளைக்கு ஒரு பவுண்ட் விபூதி இவர் அங்கை அசைவிலிருந்து வருவதாக வைத்துக் கொண்டல் கூட இது வரை 4 டன் விபூதி வந்திருக்கும் என்றார். இங்கிலாந்திற்கு மேல் படிப்புக்காகச் சென்ற பக்தர் ஒருவருக்கு ஒரு வெள்ளி டப்பாவை அளித்த பகவான் இந்த விபூதி குறையவே குறையாது என்றார். அது குறையவே இல்லை. விபூதி மட்டுமல்ல, பகவானின் கைக்குள் படங்கள், மோதிரம், சங்கிலி, மெடல்கள், புத்தகங்கள் என்று அனைத்துமே அடக்கம்.

ஏன், தாலியையை சிருஷ்டித்து, அதை மணமகனிடம் கொடுத்து மணமகளிடம் அணிவிக்கச் சொல்லி அவர் ஆசீர்வதிப்பதும் உண்டு.

சாமான்யனிலிருந்து நாட்டுத் தலைவர்கள் வரை – பிரதமர்கள் மன்மோகன் சிங், நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பாயி, நரேந்திர மோடி, ஜனாதிபதிகள் சங்கர்தயாள் சர்மா, அப்துல்கலாம் மற்றும் சோனியா காந்தி, பல மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், மந்திரிகள் நேபாள பிரதமர் என்று எண்ணற்ற தலைவர்கள் – அவரின் அருளாசி பெற்று மகிழ்ந்தனர், பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞர்கள் – மைசூர் சௌடையா, பாரதரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி, பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர், காப்டன் கவாஸ்கர் என்று ஆயிரக்கணக்கான பல்துறை நிபுணர்கள் அவரிடமிருந்து ஆசி பெற்று உயர்ந்தனர். உலகெங்கிலுமிருந்து தினமும் சுமார் 50000 பக்தர்கள் இப்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்திக்கு வருகை புரிவது வழக்கம்.

இப்படிப்பட்ட ஒரு பெரும் அற்புத புருஷரை விஞ்ஞான யுகத்தில் அறிவியல் பூர்வமாக ஆராயாமல் விஞ்ஞானிகள் சும்மா இருப்பார்களா என்ன?

ஒவ்வொரு மனிதனையும் சுற்றி இருக்கும் அவுரா எனப்படும் ஒளிவட்டத்தை தன் வெறும் கண்களாலேயே பார்க்கும் திறமை பெற்றிருந்த விஞ்ஞானி பாரனோஸ்கி 1976ம் ஆண்டு இந்தியா வந்தார்; பகவானை தரிசித்தார். பகவானைச் சுற்றி ஆகாயம் வரை எழும்பும் இளம் சிவப்பு நிறம் அவருடனேயே நடக்கும் போதும் தொடர்கிறது என்ற அவர், பகவானை 'நடமாடும் அன்புருவம்' (Love Walking on two feet) என்று பிரமித்துக் கூறினார்.

அமெரிக்க உளவியல் விஞ்ஞானியான டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் 1972ல் பங்களூர் வந்து பாபாவின் அற்புதங்களை நேரடியாகக் கண்டு அனுபவித்தார். AMAZING! UNBELIEVABLE! UNTHINKABLE! என்று வியந்து கூறிய அவர் இனி உலகில் PSYCHIATRY இல்லை; SAICHIATRYயே உலகை ஆளும் என்றார்.

டாக்டர் கார்லிஸ் ஓஸிஸ் மற்றும் டாக்டர் எர்லெண்டர் ஹரால்ட்ஸன் என்ற இரு விஞ்ஞானிகள் அற்புதங்களைப் பற்றிய தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினர். பாபாவை வந்து சந்தித்தனர்.

அவரது பக்தர்கள் பலரிடமும் சென்று தங்கள் ஆய்வை நடத்தினர். 1975 கலிபோர்னியாவில் நடந்த பல்கலைக் கழக அதீத உளவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மநாட்டில் அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர். ”இப்போதைய நிலையில் அறிவுபூர்வமாக அற்புதங்களை ஏற்கப் போதுமான அடிப்படை இல்லை என்றாலும் இந்த அற்புதங்களில் எந்த வித மோசடியும் இல்லை” என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

பாபாவின் அருகில் இருக்கும் நல்வாய்ப்பைப் பெற்ற இந்திய விஞ்ஞானிகளான டாக்டர் பானர்ஜி, டாட்கர் பி.கே.பட்டாசார்யா, டாக்டர் பகவந்தம், டாக்டர் வி.கே. கோகக் உள்ளிட்டோர் பாபாவைப் பற்றி வியந்து போற்றியதோடு பாபா கூறிய பல பணிகளையும் ஆற்ற முன் வந்தனர்.

ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த பிரபல திரைக்கதை ஆசிரியர் ஆர்னால்ட் ஷூல்மன் பங்களூரில் ஒய்ட்பீல்டில் பாபாவை தரிசித்தார். பாபாவுடனான அவரது அனுபவங்கள் அவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கின. அவர் பாபாவிடமே நேரடியாக ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி: “நீங்கள் யார்? உங்கள் உண்மைத் தன்மை என்ன?”

இதற்கு மந்திரம் போன்ற ஒரு பதிலை அளித்தார் பாபா. அது உலகிற்கே பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
உண்மையான பக்திக்கு முதன்முதல் தேவை எது? – பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
Sri Sathya Sai Baba

பாபா கூறினார்: “ஒரு மீனால் வானத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?"

மும்பையில் சாயி பக்தர்களின் முதலாவது உலக மநாட்டில் பாபா தன்னைப் பற்றி இப்படிக் கூறினார்: “ஒட்டு மொத்த மனிதகுலமும் சேர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முயற்சி செய்தாலும் என் மர்மத்தை அவிழ்ப்பதில் வெற்றி பெற முடியாது.”

பாபாவின் உச்சகட்ட அற்புதமாக உலகம் கொண்டாடிய ஒரு அற்புதம் 1971ல் நிகழ்ந்தது. அமெரிக்க உயர் நிறுவனம் ஒன்றின் நிர்வாகியான வால்டர் கோவான் தன் மனைவி எல்ஸியுடன் சென்னைக்கு சாய் நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். வந்த இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரை நன்கு சோதித்த டாக்டர் அவர் இறந்ததை உறுதிப்படுத்தி அவர் காதுகள், நாசி துவாரங்களில் பஞ்சை வைத்து சவத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். ஆனால் அவர் தன் அலுவலை முடித்து மீண்டு வந்த போது கோவான் உயிருடன் இருந்தார். அவர் காது, நாசித் துவாரங்களில் வைக்கப்பட்டிருந்த பஞ்சும் அகற்றப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரி பணியாளர்கள், சிவப்பு அங்கி அணிந்திருந்த ஒருவர் கோவானைப் பார்க்க வந்தார் என்றும் உடனே அவர் உயிர் பிழைத்தார் என்றும் கூறினர்.

கோவான் நடந்ததைப் பின்னர் கூறினார். தான் இறந்தது உண்மை தான் என்றும், வெகு உயரத்தில் இருந்த ஒரு இடத்திற்குத் தான் சென்றதாகவும் அங்கு வந்த பகவானை அங்குள்ளோர் மரியாதையுடன் வரவேற்றதாகவும் பாபா அவர்களிடம் கோவானுக்குப் பல வேலைகளைத் தான் அளிக்கவிருப்பதாகவும் அவரைத் தன்னுடன் அனுப்ப வேண்டுமென்று கூறியதாகவும் அவர்களும் சம்மதித்தனர் என்றும் உடனே தான் பாபாவுடன் வந்ததாகவும் கூறினார்.

இறந்தவரை உயிர்ப்பித்த இந்த சம்பவம் உலகின் சமீப கால அதிசயங்களுள் தலையாய சம்பவமாகும்.

லட்சக்கணக்கான பக்தர்களை ஆன்மீக சிகரத்திற்கு ஏற்றிய பணியே பாபாவின் அவதாரத்தின் முக்கியப் பணியாகும். தினசரி பஜனைகள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சாயி சமிதி மூலமாகவும் தனிப்பட்ட பக்தர்களின் இல்லங்களிலும் தொடர்ந்து நடைபெறலாயின.

அத்தோடு ஆன்மீக அடிப்படையிலான நவீன பாடத்திட்டத்தை மேற்கொண்ட கல்லூரிகள் ஆங்காங்கே அவரால் ஸ்தாபிக்கப்பட்டன. சூபர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் என்ற மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் அமைக்கப்பட்ட அற்புதமான மருத்துவமனை 1991, நவம்பர் 2ம் தேதியன்று பாபாவின் அருளாசியால் துவங்கப்பட்டது.

சின்ன கிராமமாக இருந்த புட்டபர்த்தியில் விமான நிலையம், பிளானிடோரியம் என பல வசதிகள் வந்து சேர்ந்தன.

இதையும் படியுங்கள்:
"உங்கள் இதய ஊஞ்சலில் ஆடவே எனக்கு விருப்பம்!" - ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
Sri Sathya Sai Baba

சுவாமியின் உரைகள் சுமார் 43 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அத்துடன் அவரே எழுதியுள்ள கீதா வாஹினி, ஞான வாஹினி, தியான வாஹினி, பிரேம வாஹினி, தர்ம வாஹினி, பிரசாந்தி வாஹினி, சூத்திர வாஹின், பாகவத வாஹினி, ப்ரச்னோத்தர வாஹினி, ராமகதா ரஸ வாஹினி, சத்யசாயி வாஹினி, உபநிஷத் வாஹினி, வித்யா வாஹினி உள்ளிட்ட நூல்கள் விளக்கும் ரகசியங்கள் பிரமிக்க வைப்பவை. அவை வேத, உபநிடத சாரமாக எளிய நடையில் அமைந்துள்ள நூல்களாகும்.

பாபாவைப் பற்றிய நூல்கள் பல மொழிகளிலும் ஆயிரக் கணக்கில் வெளியாகி விட்டன.

அவரைப் பற்றி யாரால் முழுவதுமாகக் கூற முடியும்!

1958ல் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு அது பாபாவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வந்தது.

அப்போது கமிஷனுக்கு அவரே தன்னைப் பற்றி அளித்த விளக்கத்தைப் பார்ப்போம்:

கமிஷன் கேட்ட கேள்விகளும் அதற்கு பாபா அளித்த பதில்களும் இதோ:

“உங்கள் பெயர் என்ன?”

“எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சரியே.”

“நீங்கள் பிறந்த தேதி?”

“பிறக்கவே இல்லை.”

“வயது?”

“யாராலும் வகுக்க முடியாது. அனாதி.”

“பெற்றோர் பெயர்?”

“பெற்றோரே இல்லை; ஸ்வயம்பு.”

“இருப்பிடம்?”

“எல்லா இடத்திலும் இருப்பேன்”

கமிஷனுக்கு அவர் அளித்த இந்த பதில் அவரின் எல்லையற்ற இறைத்தன்மையை விளக்குகிறது, அல்லவா!

சரி, பாபா உலகிற்கு தரும் செய்தி என்ன?

அவரே கூறியுள்ளார்: “என் வாழ்க்கையே எனது செய்தி” – MY LIFE IS MY MESSAGE.” என்று!

அன்பின் திருவுருவமாய், பெருங்கருணைப் பேராறாய் தோன்றி கருணை வெள்ளத்தை மனித குலத்தின் மீது பாய்ச்சும்- தெய்வத்தைப் போற்றுவோம். போற்றி! போற்றி!

இந்தக் கட்டுரை ஆசிரியர் அற்புத அவதாரம் ஶ்ரீ சத்யசாயிபாபா என்ற நூலை எழுதியுள்ளார்.

சேவாதள் உறுப்பினர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்று பகவானின் திருக்கரங்களிலிருந்து பரிசை சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த விழாவில் பெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com