புராணத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் வானில் திகழும் நட்சத்திரங்களே என்பதை புராணத்தையும் வானவியலையும் நன்கு தெரிந்து ஆராய்ந்து உணர்ந்த வானவியல் ஆர்வலர்கள் அறிவர்.
இவர்களில் பலரும் நட்சத்திர மர்மங்களை அபூர்வமாகவே புத்தக வாயிலாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நட்சத்திர மர்மங்களுள் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது ரிஷி விஸ்வாமித்ரர் பற்றித்தான்!
வானில் திகழும் லுப்தகா (LUBDHAKA) நட்சத்திரமே விஸ்வாமித்ரர் ஆவார். இதை ஆங்கிலத்தில் சிரியஸ் என்று கூறுவர்.
சிரியஸ் நட்சத்திரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வியந்த ராபர்ட் கே. ஜி. டெம்பிள் (Robert K.G. Temple) தி சிரியஸ் மிஸ்ட்ரி (The Sirius Mystery) என்ற அற்புதமான நூலையே எழுதியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டோகோ பழங்குடியினர் பல்வேறு பிரபஞ்ச ரகசியங்களை இந்த சிரியஸ் மூலமாகவே அறிந்திருந்தனர் என்பதை அவர் சுவையான விவரங்களுடன் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சிரியஸின் சிவப்பு வண்ணம் செவ்வாய் கிரகத்தின் சிவப்பு வண்ணத்தை மிஞ்சியது என்று செனேகா (கி.மு.67) கூறியுள்ளார்.
சிரியஸின் சிவப்பு வண்ணம் கார் ஸ்கார்பி நட்சத்திரத்தின் (cor scorpi) வண்ணத்தைப் போல அதே சிவப்பு என்று தாலமி (கிபி.150) கூறுகிறார். கார் ஸ்கார்பியை நாம் பாரிஜாத நட்சத்திரம் என்று கூறுகிறோம்.
இந்த வண்ணம் பற்றிய விவரங்கள் சிரியஸ் அல்லது லுப்தகா எனப்படும் விஸ்வாமித்திர நட்சத்திர விவரங்களோடு ஒத்துப் போகின்றன.
லுப்தகா நட்சத்திரம் திஷ்யா (எரிவது அல்லது மிகவும் பிரகாசமானது) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
ரிக் வேதம் ப்ருஹஸ்பதி, திஷ்யா, ருத்ரா ஆகிய மூவரையும் ருத்ரர்களிலேயே வலிமை மிக்கவர்கள் என்று கூறி அவர்களைத் தொழுகிறது.
லுப்தகா என்ற இந்தப் பெயரிலேயே ஏராளமான வார்த்தை ஜாலங்கள் உள்ளன.
கோஷ்டா நட்சத்திரம் என்றால் நரி என்று பொருள். ஓரியன் எனப்படும் பன்றி நட்சத்திரம் கிழக்கு வானத்தில் இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் எழும்போது, நரியானது பன்றியைத் துரத்துகிறது என்று ரிக் வேதம் கிண்டலாகக் கூறுகிறது.
லுப்தகா நட்சத்திரம் சூரிய மண்டலத்தை விட 500 மடங்கு கன அளவில் (Volume) பெரியது!
லுப்தகா சூரியனை விட 26 மடங்கு அதிக கனமானது.
இது 6,25,000 மடங்கு சூரியனிலிருந்து பூமிக்கு உள்ள தூரத்தை விட அதிகமானது!
அடேயப்பா! விஸ்வாமித்திரர் எங்கு இருக்கிறார் என்பதை எண்ணி எண்ணி நாம் மலைக்கலாம்!
பூமியை விட சூரியன் 13 லட்சம் மடங்கு பெரியது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் சூரியனை விட 500 மடங்கு அதிகம் பெரியவரான விஸ்வாமித்திரரின் பெருமையையும் வலிமையையும் நாம் நன்கு உணர முடியும்.
அதனுடைய திசைவேகம் எனப்படும் வெலாசிடி மணிக்கு 32 மைல்கள் ஆகும்!
இந்த விஸ்வாமித்திர நட்சத்திரமே தெற்குப் பகுதியில் உள்ள நட்சத்திரங்களை உருவாக்கியது என்று ராமாயணமும் மஹாபாரதமும் கூறுகிறது.
திரிசங்கு நட்சத்திர மண்டலத்தை வானில் நிறுத்தியவர் விஸ்வாமித்திரர் என்ற புராணக் கதையை நாம் நன்கு அறிவோம்.
இந்த நட்சத்திர மண்டலங்களை நாம் சரியாக அறிந்து கொண்டால் திரிசங்கு வானில் பாதியிலேயே ஏன் அப்படியே நிற்கிறார் என்பது உள்ளிட்ட புராணக் கதைகள் நன்கு விளங்கும்.
இதை ராமானுஜாசாரியார் சரியாக விளக்கியதோடு இந்த நட்சத்திர மண்டலம் எங்கு இருக்கிறது என்பதையும் அழகுறக் கூறுகிறார்!
இப்படி ஏராளமான விஷயங்கள் நமது வேதங்கள், ராமாயண, மஹாபாரத இதிஹாசங்கள் மற்றும் வான சாஸ்திர நூல்களில் உள்ளன.
காலத்திற்கேற்றபடி அதை எடுத்துச் சொல்வோர் தான் அதிகமாக இல்லை!