சிவாலய ஓட்டம். எல்லோரும் சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வது வழக்கம். நெல்லை மாவட்டத்தில் மற்றும் பிற மாவட்டங்களில் நவ கைலாசம் என்ற பெயரில் சிவன் கோவில் செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் சிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருந்து 12 சிவன் கோவிலுக்கும் கோபாலா கோவிந்தா என கோஷம் இட்டு கொண்டு ஓடுவார்கள். இது ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும்.
இதற்குப் பின்னணியில் ஒரு கதை உள்ளது. ஆதிகாலத்தில் புருஷா என்ற மிருகம் உள்ள மனிதன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வந்தான். பாதி மனிதனாகவும் பாதி புலி உருவத்திலும் அவன் இருப்பான். இவன் சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டான்.
விஷ்ணுவை வெறுத்து வந்தான். பாண்டவர்கள் நடத்திய குருஷேத்திரப் போரில் இந்த மனித அசுரன் உதவி தேவைப்பட்டது. விஷ்ணு இவனை அடக்க பீமன் தான் சரியான நபர் என பீமனை அழைத்து பீமன் கையில் 12 ருத்ராட்சங்களை கொடுத்து புருஷா என்ற மனிதனை பார்க்கச் சொன்னார்.
'அந்த மனித மிருகம் உன்னை துரத்தும் போது நீ முதலில் ஒரு ருத்ராட்சத்தை கீழே போடு' என்று கிருஷ்ணர் பீமனிடம் கூறினார். அதேபோல் பீமன் ருத்ராட்சத்தை போடும்போதும் புருஷா மிருகம் சற்று தயங்கி நின்றது. அந்த நேரத்தில் அந்த இடத்தில் ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. புருஷா மிருகம் சிவனை வழிபடத் தொடங்கியது. பின்னர் மீண்டும் பீமனை துரத்த தொடங்கியது. பீமன் கையில் இருந்த இரண்டாவது ருத்ராட்சத்தை சிறிது தூரம் தள்ளி போட்டான்.
அந்த இடத்தில் சிவனாக மாறிய ருத்ராட்சத்தை மீண்டும் புருஷா மிருகம் வழிபட்டது. இப்படியாக 12 வது ருத்ராட்சத்தை போட்ட இடம் தான் நட்டாலம் என்ற இடமாகும். இந்த இடத்தில் சங்கரநாராயணர் அவதரித்தார். புருஷா என்ற மிருகத்திற்கு அரியும் சிவனும் ஒன்று தான் என்பதை உணர்த்தினார். பாண்டவர்கள் நடத்திய குருசேத்திரப் போரில் புருஷா மிருகத்தின் பங்கு முக்கிய பங்கு வகித்தது.
அந்தப் 12 ருத்ராட்சங்கள் விழுந்த இடங்கள் 11 இடங்கள சிவனாகவும் கடைசி 12 வது இடம் அரியும் சிவனும் இணைந்த சங்கரநாராயணராகவும் விளங்குகிறது.
இந்த சிவாலய ஓட்டம் முன்சிறை என்ற இடத்தில் உள்ள மகாதேவர் கோவிலில் ஆரம்பித்து கடைசியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் முடிவடைகிறது.
அந்தப் 12 இடங்களில் முன்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கனி, பொன்மனை, திருபன்னிப்பாக்கம், கல்குளம் மேலங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்னிகோடு, நட்டாலம் என முடிகிறது. சிவராத்திரிக்கு ஒரு வாரம் முன்பாக பக்தர்கள் விரதம் இருந்து சிவராத்திரி அன்று அதிகாலை தங்கள் ஓட்டத்தை தொடங்கி இரவில் ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு புனித சடங்காக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவது சிறப்பு அம்சமாகும். ஒரு வாரத்திற்கு முன்பாக பக்தர்கள் காலையில் இளநீர், நுங்கு இரவில் துளசி இலை சாறு, இதை மட்டுமே உணவாக அருந்துகிறார்கள்.
2014ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சிக்காக குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
திருமலை, சூல பணி திக்குளம் மகாதேவர் திருப்பரப்பு, ஜடாதேவர் திருநந்திக்கரை, நந்திகேஷன் பொன்மனை, இன்பிலேஸ்வர் பன்னி பாகம், கிராத மூர்த்தி கல்குளம், நீலகண்டன் மேலம் கோடு, கால காலன் திருவிடைக்கோடு, ஜடையப்பர் திருவிதாங்கோடு, அரசு பாணி திருப்பணிக்கோடு, பக்தவல்சன் திருநட்டாலாம் சங்கரநாராயணர் ஆகிய 12 இடங்களாகும்.
இந்தப் 12 இடங்களுக்கும் முன்சிறை மகாதேவர் கோவிலில் ஆரம்பித்து நட்டாலம் சங்கரநாராயணன் கோவிலில் முடியும் தூரம் சுமார் 102 கிலோமீட்டர். இந்த தூரத்தை பக்தர்கள் விரதம் இருந்து அதிகாலை தொடங்கி நள்ளிரவில் ஓட்டமும் நடையுமாக கையில் பனை ஓலை விசிறி உடன் வீசிக்கொண்டே செல்வது மிகவும் அருமையாக இருக்கும்.
பார்ப்பதற்கு கோடி கண்கள் வேண்டும். இந்த அற்புத நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் ஓடும் போது கோபாலா கோவிந்தா என கோஷமிட்டு கொண்டு ஓடுகிறார்கள். இந்த நிகழ்ச்சி சிவராத்திரி அன்று பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவது சிறப்பு அம்சமாகும்.