

சதாசிவம் பட்டம் வாங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டன. சென்னையில் வேலை தேடினார். ம்ம்ம்… கிடைக்கவில்லை. வேலை வாய்ப்புத் தேர்வுகளையும் எழுதினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்கி ஆபிஸர் வேலைக்குத் தேர்வு எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெற்றார். நேர்காணலும் முடிந்தது. நேர்காணல் நன்றாகவே செய்தார். ஆனால், இரண்டு மாதம் ஆகியும் பதில் வரவில்லை.
மனம் உடைந்துபோனார். அவர் அப்பாவிடம் ரூபாய் 1000 கேட்டார்.
“எதற்காக?” என்று அவர் கேட்க, “புனித யாத்திரை செல்ல ஆசைப்படுகிறேன்,” என்றார்.
“எந்த ஸ்தலம்…?” எனக் கேட்டார் அப்பா.
சதாசிவம், ‘‘பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை செல்ல பிரியப்படுகிறேன். ஒரு வாரம் விரதம் இருந்து புறப்பட உள்ளேன்,” என்றார்.
“விரதம் என்றால்…?”
“மதியம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன்… தினமும் வடபழனிக்குச் சென்று வடபழனி முருகனை தரிசனம் செய்வேன். மதியச் சாப்பாடு வடபழனி கோயில் அன்னதானம்தான். சரியாக 6 நாட்கள். பின்னர் கிளம்பிவிடுவேன்…!”
“சரி... உன் இஷ்டம்…!”
“தேங்க்ஸ் ப்பா…!”
ஆறு நாட்களும் ஒரு வேளைதான், அதுவும் வடபழனி கோயில் அன்னதானத்தில்தான்… முருகன் என்றால் சதாசிவம் துள்ளிக் குதிப்பார். அவர் காலுக்குக்கூட செருப்பு போட்டுக்கொள்ளவில்லை.
ஆறு நாட்கள் ஆனதும் அவர் அம்மா, அப்பாவிடம், “போய் வருகிறேன்…!” என்றார்.
“உனக்கு மஞ்சள் வேஷ்டி நன்றாகவே உள்ளது. செருப்பு போட்டு போவாய் இல்லையா..?”
“இல்லை அப்பா... நான் எல்லா ஸ்தலங்களையும் செருப்பு போடாமல் வெறும் காலுடனும்தான் தரிசிக்கப் போகிறேன்…!”
“உன் இஷ்டம்… பணம் போதுமா…?”
“போதும் அப்பா. நான் சேமித்துவைத்த ரூபாய் 1000 என்னிடம் உள்ளது; உங்கள் ரூபாய் 1000 வேற இருக்கு…! நான் வரேன்…!”
சதாசிவம் புனித யாத்திரை கிளம்பினார்; காலில் செருப்பு அணியவில்லை. முதலில் பழனி சென்றார். முருகனிடம் பயபக்தியுடன் வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். கோயில் முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்தார். மதியம் அன்னதானம்; சாப்பிட்டுவிட்டு மதுரை கிளம்பினார். மீனாட்சி தரிசனம் செய்துவிட்டு முருகனை பார்க்க திருப்பரங்குன்றம் சென்றார். இங்கும் மனம்விட்டு முருகனிடம் பேசினார். இரவு ஹோட்டலில் தங்கினார்.
மறுநாள் விடியற்காலை 4 மணிக்கே சுவாமிமலை சென்றார். முருகனை தனது இஷ்டம்போல் கும்பிட்டார்; அங்கப்பிரதட்சணம் செய்தார். மதியம்வரை கோயிலில் தியானம் செய்தார். பின்பு அன்னதானத்தில் சாப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை அது முருகனின் பிரசாதம்; விரும்பி சாப்பிட்டார். அவரது புனித யாத்திரை முடிந்தது.
சுவாமிமலையில் ஒரு முருகன் டாலர் வாங்கி கயிற்றில் போட்டு, தனது கழுத்தில் போட்டுக்கொண்டார். அம்மா - அப்பா இருவருக்கும் சேர்ந்து சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் இருக்கும் குடும்பப் போட்டோவை வாங்கினார். அவர் மனநிலை நன்றாகவே இருந்தது.
மஞ்சள் வேஷ்டியுடன் சென்னை திரும்பினார். விரத காலத்தில் டீ, காபி இல்லை; ஒருவேளை மட்டுமே உணவு. வீட்டிற்கு வந்தவுடன் ஒரு காபி குடித்தார்.
“அம்மா…! அப்பா எங்கே…?”
“'வேலை இருக்கிறது, சீக்கிரமே போகிறேன்…' என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்குப் போய்விட்டார்.”
”நீ கிளம்பிய உடன் இந்தக் கடிதம் வந்தது. இன்னும் பிரிக்கவில்லை, நீயே பிரி…!” என்றாள்.
சதாசிவம் ‘முருகா’ என்று சொல்லிக்கொண்டே கவரைப் பிரித்துப் படித்தார். “முருகா… முருகா…!” என்று கத்தினார்.
அம்மா, “என்ன ஆச்சு…?” என்றாள்.
“ம்மா… எனக்கு வங்கியில் ஆபிஸர் வேலை கிடைத்து உள்ளது. எல்லாம் அவன் செயல்…!” சொல்லிவிட்டு அம்மாவிற்கு முத்தம் கொடுத்தார்.
“ஆமாம், எங்கே…? எப்போது சேரவேண்டும்…?”
“அம்மா… ஊட்டியில்தான் வேலை. 2 அல்லது 3 வருடங்கள் கழித்துத்தான் சென்னைக்கு வர முழுவாய்ப்பு உள்ளது!”
“ஆமாம்... சம்பளம் எவ்வளவு…?”
“துவக்கத்தில் ரூபாய் 22,000…...!”
“நீ கும்பிட்ட முருகன் உன்னைக் கைவிடவில்லை, என் கண்ணா…! முதலில் அப்பாவிடம் போன் மூலம் நல்ல செய்தியைச் சொல்… சந்தோஷம் அடைவார்…!”
“இதோ இப்பவே பண்றேன்...!”
ஓம் முருகா…! ஓம் சரவணபவ…!