

அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆட்சி புரிந்த இச்சுவாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தான் கல்ம ஷபாதன். ஒரு நாள் காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தான் கல்ம ஷபாதன். அவ்வாறு நடந்து வந்த பாதையில், அவருக்கு எதிராக வசிஷ்ட முனிவரின் மகன் சக்தி முனிவர் வந்தார்.
அந்தப் பாதை குறுகக இருந்த காரணத்தினால் மன்னன் கல்ம ஷபாதன் சக்தி முனிவரை வழி விடுமாறு கூறினான். ஆனால் சக்தி முனிவரோ தர்மத்தின் படி முனிவர்களுக்கு முதலில் வழி விட வேண்டும் என்று மன்னனிடம் கூற, இதனால் பெரும் சினம் கொண்ட கல்ம ஷபாதன் தன் கையில் இருக்கும் ஆயுதத்தை கொண்டு சக்தி முனிவரை தாக்கினான்.
இதனால் கோபம் கொண்ட சக்தி முனிவர் "சிறிதும் பொறுமை இல்லாமல் மிருகங்களைப் போல் நடந்து கொள்ளும் நீ மனிதர்களை உண்ணும் அரக்கனாக மாறுவாய்" என்று கல்ம ஷாபாதனுக்கு சாபம் விட்டார்.
இச்செயல் நடந்து கொண்டிருக்கும்போது அந்த இடத்திலிருந்து வசிஷ்ட முனிவரிடம் தீராத பகை கொண்ட விசுவாமித்திரர் அந்த சாபத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார். அவர் கல்ம ஷபாதன் உடம்பில் கிந்திரன் என்ற அரக்கனை புகச் செய்தார்.
கல்ம ஷபாதன் உடம்பில் கிந்திரன் என்று அரக்கன் புகுந்தவுடன் சக்தி முனிவர் கொடுத்த சாபத்தின் காரணமாக அவன் ஒரு பெரும் அரக்கனாக மாறி சினம் கொண்டு சாபம் கொடுத்த சக்தி முனிவரையே உணவாக உண்டு விட்டான். இருப்பினும் அவனுடைய பசி தீறாமல் வசிஷ்ட முனிவரின் அனைத்து மகன்களையும் அவன் உணவாக உண்டு விட்டான். இதனால் வசிஷ்ட முனிவர் மிகுந்த மனவேதனை அடைந்து தீராத துன்பத்தில் இருந்தார்.
பல ஆண்டுகளாக கல்ம ஷபாதன் அரக்க உடம்பிலேயே காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு பசி அதிகமாக ஏற்பட்டது. ஒரு நாள் அவன் வசிஷ்டரை பார்த்து அவரையும் அடித்து உணவாக உண்ண வேண்டும் என்று நெருங்கினான்.
ஆனால் வசிஷ்டரின் தவ வலிமையால் கல்ம ஷபாதானால் வசிஷ்டரை உண்ண முடியவில்லை. பின் அவர் பல ஆண்டுகளாக கல்ம ஷபாதன் அனுபவித்த சாபத்தை நீக்கி அவனை மீண்டும் மனிதனாக மாறச் செய்தார். அவன் மீண்டும் மனிதனாக மாறி வசிஷ்டரிடம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கூறி தன்னுடைய நாட்டிற்கு திரும்பி மீண்டும் நல்லாட்சி புரிந்தான்.
மன்னனாகவே இருந்தாலும் அகந்தை மற்றும் ஆணவத்தை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் அது நம்மையே அழித்துவிடும் பெரும் தீச் செயலாக மாறிவிடும். இவ்வாறு கல்ம ஷபாதன் மன்னனாக இருந்து சக்தி முனிவர் அளித்த சாபத்தின் பெயரால் மனிதர்களின் மாமிசத்தை உண்ணும் அரக்கனாக மாறிப் போனான். கல்ம ஷபாதன் அரக்கனாக மாறி தன்னுடைய மகன்களை உண்டதையும் மன்னித்து பின் வசிஷ்ட முனிவரரே கர்ம ஷபாதானனுக்கு சாப விமோசனம் அளித்தார்.
எவ்வளவு பெரிய மன்னனாகவே இருந்தாலும் மனதில் ஒழுக்கம் மற்றும் தன்னடக்கம் இருக்க வேண்டும் இல்லையேல் வாழ்க்கை பெரும் சீரழிவையே சந்திக்க நேரிடும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.