

சிலநேரங்களில் நமக்கு ஏதோகுறை இருப்பது போலத் தோன்றும். நல்ல குடும்பம், வசதி நல்ல இறைநம்பிக்கை இவை இருந்தும் மனதில் மற்றும் அமைதி இருக்காது. இப்படிப்பட்ட ஒரு மனநிலை நாரதருக்கு ஒருமுறை ஏற்பட்டது. எப்போதும் 'நாராயணா நாராயணா' என்று பாடிக்கொண்டு உலகம் முழுவதும் திரியும் நாரதர் ஒருநாள் கவலையுடன் இருந்தார். அவர் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. அவரது மனதில் ஏதோ ஒரு பாரம் இருந்தது.
வைகுந்தத்தில் இருந்த அன்னை மகாலக்ஷ்மி இதைக் கவனித்தாள். அவள் அன்போடு நாரதரை அழைத்து அவரது கவலைக்கான காரணத்தைக் கேட்டார். அவரின் கருணையை நினைத்து நாரதரின் கண்கள் கலங்கின.
"தாயே நான் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு கலகம் நடக்கிறது. நான்பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன. இறுதியில் எல்லாம் நன்மையாக தான் முடிகிறது என்றாலும் அந்த இடைக்காலத் கலகங்களுக்கு நான்தானே காரணம். இதை நினைத்தால் என் மனம் வருந்துகிறது," என்றார்.
அவர் வார்த்தைகளில் உண்மையான வருத்தம் இருந்தது. அன்னை அவரிடம் அவர் மனம் தெளிவு பெற ரிஷிகேசம் சென்று கங்கையில் நீராடச் சொன்னார். நாரதரும் அன்னையின் வார்த்தையின் படி ரிஷிகேசத்தை அடைந்தார்.
அதிகாலை நேரம். கங்கை நதி வெள்ளி ஓடைபோல் மின்னியது. இமய மலையிலிருந்து வீசும் காற்று மனதை வருடியது. பறவைகளின் கீச்சொலி இயற்கையின் இசையாக ஒலித்தது. அந்த அமைதியான சூழலில் நாரதர் கங்கையில் இறங்கி நீராடலுக்குத் தயாரானார்.
அப்போது நதியின் நடுவில் வண்ணமயமான ஒளி ஒன்று மின்னியது. அதைப்பார்த்து நாரதர் ஆச்சர்யமடைந்தார். அது ஒரு விசித்திரமான மீனாக இருந்தது. அதன் உடல் பல வண்ணங்களில் ஜொலித்தது. அது மெதுவாக நீந்தி நாரதரை நோக்கி மனிதரைப் போல் பேசி, "நாரதரே சௌக்கியமா?" எனக் கேட்டது.
உடனே பேசும் மீனை பார்த்து வியந்த நாரதர், "நான் சௌக்கியமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?" எனக் கேட்டார்.
"நானும் நன்றாகத்தான் இருக்கிறேன்," என்று மீன் சலிப்புடன் கூறியது.
அதன் சலிப்பை கவனித்த நாரதர் அதற்கு என்ன குறை என்று கேட்க, தனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது என்று மீன் கூறியது. "தாகமா?" என்று வியந்து நாரதர் கேட்க, மீனும், "தண்ணீர் கிடைக்கவில்லை. அதான் கவலை," என்றது மீன்.
உடனே நாரதர், "தண்ணீருக்குள்ளேயே நீயிருக்க, தாகம் என்று சொல்கிறாயே... ஏன்?" என்றார். உடனே மீன் "நாரதரே நான் தண்ணீருக்குள் இருந்து கெண்டே தாகம் என்று சொன்னால் அதை முட்டாள்தனம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?பேரானந்தத்தைத் தரும் நாராயண நாமம் உங்கள் உள்ளத்தில் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள்?" என்று அவரைக் கேட்டது.
அந்த கேள்வி நாரதரை துளைத்தது. அவர் பதில் கூற முடியாமல் நின்றார். பிறகு அந்த வண்ணமயமான மீன் விஷ்ணுவாக மாறி நாரதரிடம், "நாரதா நீ செய்யும் கலகங்கள் நன்மையில் தானே முடிகின்றன. நீ தவறு ஏதும் செய்யவில்லையே.
மேலும் என் நாமத்தை தினமும் உச்சரிக்கும் உனக்கு என்ன கவலை வரப்போகிறது. நீ நல்லது தான் செய்கிறாய். அனாவசியமாக குழப்பி கவலைப்படாதே. உன் பக்தியால் நீ உலகிற்கு நன்மையே விளைவிப்பாய்," என்று கூறியதும், நாரதர் மனம் தெளிவானது.
நாரதரைப் போல் நாமும் சில சமயங்களில் கவயையைக் தேடி வரவழைக்கக் கூடாது. தெளிவடைந்த நிலையில் இருக்க வேண்டும்.