

அந்த வீட்டில் ஈஸிச் சேரில் சாய்ந்து படுத்திருந்தார் அனந்த கிருஷ்ணன். அவரிடம் மெல்ல நெருங்கினான் பேரன் ஆதித்யா.
"தாத்தா எனக்கொரு சந்தேகம்” என்றான்.
"என்ன டா?" என்றார் தாத்தா.
"பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துட்டு பெருமாள் வந்தாராமே? அது மாதிரி, நாம யாராவது கூப்பிட்டா ஸ்வாமி வருவாரா தாத்தா? இல்லை, அதெல்லாம் வெறும் கதைதானா? சும்மா சொன்னதா?!" என்றான்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் கேள்வியில் அப்படியே கொஞ்சம் விக்கித்துப் போய் நிற்கையில், அருகில் ஒரு காலை நீட்டி மறுகாலை மடக்கி அரிவாள் மனைமேல் முட்டுக் கொடுத்து உட்கார்ந்து காய் நறுக்கிட்டிருந்த பங்கஜம் பாட்டி பேரனை அழைத்தாள்.
"தோ ஆதித்யா… நீ கேட்ட கேள்விக்கு பதிலை நான் சொல்றேண்டா!” என்றாள்.
"சொல்லு பாட்டி," என்று பாட்டியை இப்போ நெருங்கினான் பேரன் ஆதி.
பாட்டி தன் அருகிலிருந்த செல்போனில் யூடியூபில் ஒரு பாட்டைத் தேடி ஆன் செய்து…
'அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்'... என்ற பாட்டை ஓட விட்டாள் பாட்டி.
பேரன் ஆதியைப் பார்த்து, “கேட்டயாடா?" என்றாள்.
"ம்ம்..கேட்டேன்!....கேட்டேன்! கேட்டதுனாலதானே சந்தேகமே கேட்டேன்," என்றான் விரக்தியாக.
"வருவேன்னு தானே பாட்டுல இருக்கு?"
"பாட்டி பாட்டுல இருக்கறதெல்லாம் வேண்டாம்! நேர்ல காட்டு..!" என்றான்.
அப்போது அவன் தங்கை சுவத்தைப் பிடிச்சுட்டு, தளிர்நடையிட்டு உள் ரூமிலிருந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த ரூமுக்கு த்த்தக்கா பித்தக்கா என்று பாட்டியை நெருங்கி வந்து கொண்டிருந்தது. நடைக் கதவைத் தாண்டுகையில் சுவரில் பிடித்திருந்த அதன் கைப்பிடி நழுவ தொபுக்கடீர்னு விழப் போக, பாட்டி, “எம்மா என்புள்ளை!"ன்னு அலறினாள்.
பதைத்து அவசர அவசரமாய் எழப் போகையில் விழுந்த குழந்தை எதுவுமே நிகழாதது போல எழுந்து நடக்க ஆரம்பித்தது. அம்மாடி என்று பாட்டி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்!
கொஞ்சம் பிசகி இருந்தாலும் குழந்தையின் தலை நடை நிலை மரத்தில் மோதி அடிபட்டிருக்கலாம்.
"அப்பாடி அம்மா காப்பாத்தீட்டா" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே பேரனைப் பார்த்துப் பாட்டி சொன்னாள்.
"பாத்தியாடா.. அழைச்சதும் பகவான் வந்துட்டார்!"னாள்.
‘எங்க பாட்டி, நீ என்ன சொல்றே?’ விவரமாச் சொல்லு," என்றான் பேரன்.
"நீ கேட்டியேடா அதுக்கு பதிலை பகவான் நேர்லயே ஒனக்குக் காம்பிச்சிட்டான் புரியலையா?" கேட்டாள் பாட்டி.
அவன் ‘இல்லை’ என்று தலையாட்ட .. பாட்டி விளக்கம் சொன்னாள்.
"இரணியன் தன் வீரர்களிடம் பிரகலாதனை மலையிலிருந்து தூக்கி எறியச் சொன்னபோது, கீழே விழுகையில் பிரகலாதன் “ஓம் நமோ நாராயணா” என்று கூப்பிட்டிட்டே விழுந்தானாம்.
ஓடிவந்து அவனைத் தாங்கினவள் பூமாதேவி. அவள் பிரகலாதனைப் பார்த்து ‘உனக்கு என்ன வரம் வேணும்னு’ கேட்க, அவன்,
'அம்மா.. இப்ப நான் மேல இருந்து கீழ விழ, நீங்க வந்து தாங்கி காப்பாத்தினீங்க!. இதே மாதிரி எந்தக் குழந்தை கீழ விழுந்தாலும் ‘யாராவது.. அம்மா.. என் புள்ளைனு அலறினா’.. ஓடிவந்து நீங்க காப்பாத்தணும்!' னு வேண்டிக்கிட்டானாம். அவளும் சரின்னாளாம்.
இப்பவும் பாரு எந்தக் குழந்தை கீழ விழுந்தாலும் மொதல்ல ஓடி வந்து தாங்கறது பூமா தேவிதான்.
அழைத்தவர் குரலுக்கு வருவான்டா கொழந்தே கண்ணன்! என்ன ஒரு விஷயம்னா நாம உண்மையான பக்தியா இருக்கணும்! அது ஒண்ணுதான் தேவை. மலையிலிருந்து கீழ ‘முருகா!’ன்னு விழுந்த அருணகிரியாரைக் காப்பாத்த முருகன் ஓடி வரலை?. அப்படி பகவான் ஓடிவந்து காப்பாத்தத் தயாரா இருக்கான், எதுவும் கட்டுக் கதை இல்லை!" என்றதும் பேரன் அமைதியானான்.