

பள்ளிக்கூடப் பரீட்சை வந்தாச்சு. படிப்பும் மும்முரமாச்சு. நல்ல தேர்ச்சி பெற இறையருளும் அவசியம்தானே? அவ்வாறு அருள் புரியும் திருவஹீந்திரபுரம் பரிமுகப் பெருமாளை வேண்டிக் கொள்வோமா?
திருவஹீந்திரபுரம் திருத்தலம், நூற்று எட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று.
போரில் மயக்கமுற்றிருந்த லட்சுமணனைக் காக்க, அனுமன் சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது அதிலிருந்து ஒரு பகுதி இங்கே விழுந்து சிறு குன்றாக நிலைத்தது. இந்த குன்று, ‘ஔஷதாசலம்‘ அதாவது மருத்துவ மலை என்று பெயர் பெற்றது.
கோயிலுக்குள் வலம் வருவோமா?
அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காத்தருளிய கார்வண்ணன், கருவறையில் தெய்வநாயகனாக, நின்ற கோலத்தில், கரங்களில் பஞ்சாயுதங்கள் ஏந்தி, மார்பில் சாளக்ராம மாலை அணிந்து அழகு நம்பியாகக் காட்சி தருகிறார். உற்சவருக்கு தேவநாதன் என்று திருப்பெயர்.
ஒரு காலத்தில், பிருகு மஹரிஷி இந்த மலையில் பூதீர்த்தம் என்ற தடாகத்தை உருவாக்கி, பரந்தாமனைக் குறித்துக் கடும்தவம் புரிந்தார். மஹரிஷி கண் விழித்த போது, பூதீர்த்தத்தில் ஆயிரம் தளங்களுடன் கூடிய பொற்றாமரையில் மஹாலக்ஷ்மி குழந்தை வடிவமாக தவழ்ந்திருப்பதைக் கண்டார். குழந்தையைப் பிரியமுடன் எடுத்து வளர்த்தார்.
அவள் வளர்ந்து மஹாவிஷ்ணுவான தேவநாதனையே விரும்பி திருமணம் புரிந்து கொண்டாள். பிருகு மஹரிஷியின் மகள் என்பதால் பார்கவல்லி என்றும், பொற்றாமரையில் உதித்ததால் ஹேமாம்புஜநாயகி என்றும் தாயாருக்கு திருநாமங்கள்.
ஒரு சமயம் பரந்தாமனின் தாகம் தீர்ப்பதற்காக கருடன் விரஜா நதியையும், ஆதிசேஷன் கங்கை நதியையும் இத்தலத்திற்குக் கொண்டு வந்தார்கள். ஆதிசேஷன் கொண்டு வந்த தீர்த்தத்தை தமக்கு தினசரி நிவேதனத்துக்கான பிரசாதங்கள் தயாரிக்கவும், கருடன் கொணர்ந்த தீர்த்தத்தை தனது அபிஷேகத்துக்கும் பயன்படுத்த விதி செய்தார், பெருமாள்.
ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து கொணர்ந்த சேஷ தீர்த்தம், தாயார் சந்நிதிக்கு முன்னால் கிணறு வடிவில் அமைந்துள்ளது. பக்தர்கள் பிரார்த்தனையாக இதில் உப்பு, வெல்லம், மிளகு, பால் ஆகியவற்றை சேர்த்து, வேண்டிக்கொண்டு, அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறுகிறார்கள்.
கருடன் கொண்டுவந்த தீர்த்தம் கருட நதியாக ஆலயத்துக்கு மேற்கில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆலயத்துக்கு முன்னால் மூலிகைகள் நிறைந்த ஔஷதகிரி அமைந்துள்ளது. தான் கொண்டுவந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதிதான் அது என்பதால், அதன் அடிவாரத்தில், சந்நதித் தெருவில் கோயில் கொண்டிருக்கிறார் அனுமன். இவர், தன்னை வணங்குவோரின் கிரக தோஷங்ளை நீக்கி அருள்கிறார்.
ஔஷதமலை மீது தனிச் சந்நிதியில் ஹயக்ரீவரையும், கருடாழ்வாரையும், ஸ்ரீவேதாந்த தேசிகர் பிரதிஷ்டை செய்தார். அதோடு ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட தண்டகம், மும்மணிக்கோவை, நவரத்தினமாலை போன்ற பல நூல்களை இயற்றினார். இந்த மலையின் மீதே நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்தவர் என்பதால் அந்த இல்லம், ‘தேசிகன் திருமாளிகை’ என்ற பெயரில், இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்குள் ஸ்ரீதேசிகனின் விக்ரகத்தைக் காணலாம்.
ஒருமுறை மது, கைடபர் என்ற அரக்கர்கள், குதிரை வடிவில் வந்து, பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்றனர். பிரம்மன், மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டார். அரக்கர்கள் பாதாளத்தில் ஒளிந்திருப்பதை அறிந்த மஹாவிஷ்ணு அவர்களைப் போலவே தானும் குதிரை முகமும் மனித உடலும் கொண்ட ஹயக்ரீவராக மாறினர். அரக்கர்களை மாய்த்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார். சரஸ்வதி தேவியின் கணவரான பிரம்மனுக்கு இவ்வாறு வேதங்களை மீட்டுத் தந்ததால் ஹயக்ரீவர், சரஸ்வதிக்கும் குரு என்று போற்றப்படுகிறார்.
கல்வி தொடங்கவும், கல்வியில் சிறக்கவும், குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை போன்ற ஆவணங்களை அர்ச்சகரிடம் கொடுத்து ஹயக்ரீவர் பாதத்தில் வைத்து பூஜித்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறார்கள். இப்படி மாணவர்கள் தவிர, அலுவலகத்தில் உயர் பதவிக்கான தேர்வு எழுதுபவர்களும் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். தேர்வில் வெற்றி கண்டபின், மீண்டும் கோவிலுக்கு வந்து ஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.
திருப்பதி வேங்கடேச அஷ்டோத்தர தசநாமார்ச்சனையை இங்கே, தேவநாதப் பெருமாளுக்கும் செய்கிறார்கள். திருப்பதி போல சித்ரா பௌர்ணமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
கடலூரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது திருவஹீந்திரபுரம்.