
'உள்ளம் உருகுதையா முருகா!" என்ற டி.எம்.எஸ்ஸின் பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் உருவான விதத்தை ஜான்துரை ஆசிர் செல்லையா என்பவர் எழுதி இருக்கிறார்.
பழனியில் ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்ற டி.எம்.எஸ் அங்கு வேலை பார்த்த சிறுவன் இப்பாட்டை முணுமுணுக்க, அதை கேட்டு பாட்டாக எழுதி பாடுகிறார். 'எழுதியது யார்?' என தெரியாமலே பாட்டு சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.
அதன்பின் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு போன டி.எம்.எஸ், அந்த பாடலை எழுதியது ஆண்டவன் பிச்சை என்னும் பெண் என்று அறிகிறார். இந்த ஆண்டவன் பிச்சை பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை உத்தரபிரதேச மாநிலம் சிவானந்த நகரில் வசிக்கும் Dr. கிருஷ்ணா ராவ் தம்பதிகள் எழுதியுள்ளனர்.
மரகதவல்லி என்ற இயற்பெயர் கொண்ட ஆண்டவன் பிச்சை 1899ல் மயிலாப்பூரில் வசதியான குடும்பத்தில் பிறக்கிறார். மூன்று ஆண்டுகளில் தாய் இறந்துவிட, தந்தை மறுமணம் செய்துகொள்ள, சித்தப்பா வெங்கட சுப்பையரிடம் வளர்கிறார்.
ஒன்பது வயதில் 20 வயது நரசிம்மன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து, இரு பங்களாக்களை வரதட்சணையாக கொடுக்கிறார்கள். அதே ஒன்பது வயதில் முருகன் இவர் கனவில் தோன்றி தன்னை பாடுமாறு கேட்க முருகன் பாடல்களை இயற்றி பாடுகிறார். குடும்ப வாழ்க்கையும் தொடர்கிறது. அடுத்தடுத்து ஐந்து பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஒரு நாள் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனை பற்றி 600 பாடல்களை பாடும்போது மெய் மறந்து விடுகிறார்.
இவரது மாமியார் "இப்படி ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனை பற்றி பாடிக்கொண்டே இருந்தால், குடும்பமே ஆண்டி ஆகிவிடும். இனிமேல் முருகனை பற்றி பாடமாட்டேன் என சத்தியம் செய்துகொடு" என சத்தியம் வாங்கி விடுகிறார்.
இவரை மீட்க அப்படி செய்தாரா, இல்லை நிஜமாகவே அப்படி ஒரு நம்பிக்கையா?' என தெரியவில்லை. ஆனால், கொடுத்த வாக்கை மரகதவல்லி மீறவில்லை. முருகனைப்பற்றி பாடுவதை நிறுத்திவிட்டார். அதன்பின் குடும்ப வாழ்க்கை தொடர்கிறது. மேலும் மூன்று பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
சத்தியம் செய்தபின் இவருக்கு அடிக்கடி கனவில் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த முருகன் வருவது இல்லை. மாமியார் காவேரியம்மா 1930ல் இறக்கிறார். அதன் பின்னர் தான் மீண்டும் கனவில் முருகன் வர ஆரம்பிக்கிறான். "மீண்டும் பாடு" என்கிறான். "நான் தான் பாடமாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்துவிட்டேனே?"
"பாடபோவது நீ அல்ல, நான் தான். பாடு!" கனவில் இருந்து விழித்து எழுந்தவர் மீண்டும் பாட ஆரம்பிக்கிறார். தான் எழுதிய பாடல்களை எல்லாம் திருப்புகழ் மணியிடம் கொடுக்க, 1948ல் அதை நூலாக வெளியிடுகிறார்.
அதன்பின் ரமண மகரிஷியை சந்திக்கிறார். 1950க்களில் சென்னையில் இவரது பாடல்களை பாட பஜனைக் குழுக்கள் நிறைய உருவாகின்றன. வீட்டில் பாட்டும், பஜனையுமாக இருந்ததால் கோபமடைந்த கணவர் டெல்லியில் இருக்கும் சொந்தகாரர்கள் வீட்டுக்கு போய் இருக்க சொல்கிறார்.
அதன்பின் குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என திருப்புகழ் மணியை குருவாக ஏற்று சன்னியாசம் பெறுகிறார். ரிஷிகேஷ் செல்கிறார். அதன்பின் வரலாற்றில் இருந்தும், மக்களின் நினைவுகளில் இருந்தும் மெதுவே காணாமல் போகிறார் ஆண்டவன் பிச்சை. 85வது வயதில் முருகன் அடி சேர்ந்ததாக தெரிகிறது.