

செல்வங்களின் அதிபதியான குபேரனின் செல்வங்களைப் பிடிங்கிக் கொண்டு துரத்தி விட்டான் ராவணன். செல்வங்களையெல்லாம் இழந்த குபேரன் வந்து சேர்ந்த இடம் தான் அரிகேசவநல்லூர். அனைத்தையும் இழந்த குபேரன் தன் கையால் இந்த அரியநாத சுவாமியைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து இழந்த செல்வங்களையெல்லாம் மீண்டும் பெற்றான்.
அப்பேர்பட்ட இறைவனான அரியநாதர், திருநெல்வேலியில் இருந்து ஒரு மணிநேர பயணத்தில் தான் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி சமேத ஶ்ரீ அரியநாத சுவாமி திருக்கோவிலைத்தான் (Arianatha Swamy Temple) இக்கட்டுரையில் தரிசனம் செய்யப் போகிறோம்.
மிகப்பழமையான புராதனமான இந்தத் திருக்கோவிலில் காணக் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் ஜடாவர்மன் அரிகேச பாண்டியன் கல்வெட்டுதான் காலத்தில் பிந்தையது. இந்தப் பாண்டிய மன்னன் தான் இப்போதிருக்கும் இக்கோவிலைக் கட்டியிருக்கிறான் என்பது வரலாற்றுச் செய்தி. அதன்படிப் பார்த்தால் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இதுவாகும். அவன் பெயராலேயே இவ்வூரும் ‘அரிகேசநல்லூர்’ என்று அழைக்கப்படுகிறது.
குபேரன் நிறுவிய இந்த அரியநாத சுவாமி கோவிலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
1. ஸ்ரீருத்திரத்தில் வரும் சிவநாமம்
சிவபெருமானுக்கான சக்தி வாய்ந்த ஸ்ரீருத்ரத்தின் சமகம் பகுதியில் மூன்று முறை வரும் ஒரே சிவநாமம், அரிகேசா என்பதாகும். இந்த நாமத்துக்கான மூர்த்தி அருள்பாலிக்கும் தலமாகும் இந்த அரிகேசவநல்லூர். மூலவரான அரியநாதர் இழந்த நற்பெயர், இழந்த புகழ், இழந்த செல்வம், இழந்த ஆரோக்கியம், இழந்த செல்வாக்கு இதயெல்லாம் திரும்பப்பெற அருள்பவராக வீற்றிருக்கிறார்.
2. சுரதேவர்
குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருகிறதென்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தக் கோவிலுக்குத்தான் வர வேண்டும். மூலவரைத் தரிசித்துவிட்டு பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும்போது முதலில் நிற்கிறார் இந்த சுரதேவர். கோவில்களில் எளிதாக காணக்கிடைக்காத இந்த சுரதேவரை வணங்கினால் அடிக்கடி ஜுரம் வந்து தொல்லை தராது என்பது நம்பிக்கை.
3. சப்த மாதர்கள்
இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் சிறுதெய்வ வழிபாடு தமிழக பகுதிகளில் பிரபலமாக இருந்தது என்பதற்குச் சான்றாக, சுரதேவருக்கு அடுத்தபடியாக பிராமி, மகேந்திரி, கௌமாரி, சாமுண்டி, வாராகி, இந்திராணி, வைஷ்ணவி ஆகிய சப்த மாதர்கள் கொலுவிருக்கிறார்கள்.
4. பஞ்ச குரு தலங்களில் ஒன்று
சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி பஞ்ச குருக்களில் ஒருவராவார். வியாழக்கிழமைகளில் இவரை வணங்குவது மிகச்சிறப்பாகும்.
5. காசி விஸ்வநாதர்
குருவை வணங்கி நகர்ந்தால் கன்னி கணபதி வீற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அரியநாதருக்கு நேர் பின்னால் காசியின் தெய்வங்களான விஸ்வநாதர் - விசாலாட்சி அருள்பாலிக்கிறார்கள். முருகரும் தன் மனைவியரோடு அடுத்தபடியாகக் காட்சியளிக்கிறார்.
6. மாந்தன் மாந்தியுடன் மூத்தவள்.
கருவறை உள்ள மகா மண்டப பிரகாரத்தில் முருகரைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரரிடம் வெறுங்கைகளைக் காட்டிவிட்டு நகர்ந்தால் நீதி வழங்கும் கிரகத்துக்கான மூர்த்தி சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். அவரிடம் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு வெளிப்பிரகாரம் வந்தால் சனியின் பிள்ளைகளான மாந்தனையும், மாந்தியையும் மடியில் அமர்த்தியபடி சனியின் மனைவியான ஜேஷ்டா தேவி சந்நிதானம் உள்ளது. இது மிகவும் அரிதான சந்நதியாகும். இங்கே விளக்கிட்டு வேண்டுகிறார்கள் பக்தர்கள்.
7. முக்ருணி விநாயகர்
மதுரை மீனாட்சி கோவிலைப்போல் இங்கும் ஒரு பிரும்மாண்ட முக்ருணி விநாயகர் நம்மை அசத்துகிறார். வெளிப் பிரகாரத்தில் உள்ள இவரைத் தொடர்ந்து ஆறுமுகர் சந்நதி உள்ளது. வெளிப்பிரகாரம் முழுக்க அழகிய நந்தவனம் பராமரிக்கப்படுகிறது.
8. ஜன்னல் வழி பேசிக்கொள்ளும் நண்பர்கள்
வெளிப் பிரகார முடிவில் இக்கோவிலின் இறைவனை நிறுவிய குபேரர் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் கல்லிலேயே ஒரு ஜன்னல் உள்ளது. அதன்வழி அவர் அரியநாதரைத் தரிசிப்பாராம். குபேரரும், அரியநாதரும் நண்பர்களாம். இருவரும் இந்த ஜன்னல் வழி பேசிக்கொள்வார்களாம்.
9. பெரியநாயகி
இந்த சுவாரஸ்யமான பின்புல தகவல் கொண்ட குபேரனையும் அந்த அழகிய குட்டிக் கருங்கல் சாளரத்தையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால் இடப்புறத்தில் தனி கோவிலில் பெயருக்கேற்றபடி 7அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பேரழகியாய்க் காட்சி தருகிறாள் பெரியநாயகி அம்பாள். தரணியில் பெயற்பெற்ற பெரியநாயகி அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு அரியநாதரின் அருளையும் பெற்று இழந்தவற்றை மீட்டுக்கொள்வோம்.
இக்கோவிலுக்குக் கோபுரம் இல்லை. வெளியில் மலர்கள், அர்ச்சனை பொருட்கள் வாங்கிக்கொள்ள சிறு கடை உள்ளது. வாகனம் நிறுத்த தாராளமான இடமும் உள்ளது.
புராதனமான, சக்தி வாய்ந்த அரியநாதரையும் அவரின் நண்பர் குபேரரையும் பெரியநாயகி அம்பிகையையும் வணங்கி அருள்பெற ஒருமுறை போய் வாருங்களேன்.