

ஆனந்த் சிறுவனாக இருந்தபோதே, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அவர்கள் குடும்பத்தில் ஒரு சித்தப்பா எப்பொழுது பார்த்தாலும் பொது நலப் பணிகளுக்காக அலைந்து கொண்டேயிருந்தார். உள்ளூர்ப் பிரச்னை ஒன்றுக்குத் தக்க தீர்வு கிடைத்த பிறகே, தான் திருமணம் செய்து கொள்வதாக அவராக உறுதி எடுத்து, அதை நடத்தியும் காட்டினார்!பாவம்! தீர்வு கிடைக்கக் காலதாமதம் ஆனதால் 35 வயதைக் கடந்த பிறகுதான் அவருக்குக் கல்யாணம் ஆயிற்று!
அதற்காகக் கவலைப்படாமல் மணம் புரிந்த பிறகும் பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். சித்தாப்பாவுக்கு முருகர்தான் இஷ்டக் கடவுள். ஒவ்வொரு நாளும் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்லாமல் உறங்கச் செல்லமாட்டார்.
ஆனந்த், சித்தப்பா பிள்ளையாக வளர்ந்ததால் அவனுக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவ வேண்டுமென்ற ஆவல் சிறு வயதிலிருந்தே மனதில் கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டது! சித்தப்பாவின் தொண்டு உள்ளமும், அதனுள்ளே உறைந்து கிடந்த முருக பக்தியும் அவனுள்ளேயும் வளர ஆரம்பித்தது.
அவன் கையெழுத்து முத்து முத்தாகத் தெளிவாக இருக்குமாதலால், அவன் வீட்டுப் பாட நோட்டு எப்பொழுதும் வகுப்பு மாணவர்களிடந்தான் இருக்கும். உயர் நிலைப் பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் கூட அவனைத்தான் கரும்பலகையில் எழுதச் செய்வார்கள். அதோடு மட்டுமல்ல. உள்ளூரில் தேர்தல் நேரத்தில் போர்டு எழுத அவனைத்தான் கூப்பிடுவார்கள். எல்லோருக்கும் பாகுபாடு பார்க்காமல் உதவுவான். அதனாலேயே சின்னப் பிள்ளையானாலும் ஊராரின் செல்லப்பிள்ளை ஆகிப்போனான்!
துள்ளல் கவிஞர் வாலியின் துடிப்பான பாடல் வரிகள் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
‘உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ?’
என்ற பல்லவியும், அதனைத் தொடர்ந்து வரும் சரணமும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தன.
‘தரைமேல் பிறக்க வைத்தான்-எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்!’
அந்தப் பாடலே அவனை நீர் மீதும் நீரால் நிரப்பப்பட்ட கடல் மீதும் ஆர்வம் கொள்ளச் செய்தது. கடல்களைப் பற்றிய ஆர்வம் மிகுந்தெழ அதனையே பாடமாகப் படிக்கும் எண்ணமும் மேலோங்க, அவன் கடலியலை (Oceanography) யே பாடமாக எடுத்துப் படித்துப் பட்டம் வாங்கினான்.
கடல்களின் பௌதிக உயிரியல் தன்மைகளைக் கண்டறியும் அந்தப் படிப்பை லயித்துப் படித்ததோடு, அது குறித்த ஆய்வுகளிலும் பங்கேற்றதால் சென்னை வானிலை மையத்தில் பணிக்குச் சேர்ந்தான்.
தீபாவளி நாள் தொடங்கி வரும் சஷ்டி விரதத்தையும், ஒவ்வொரு மாத கார்த்திகை விரதத்தையும் அவன் பல வருடங்களாக அனுஷ்டித்து வந்தாலும், சூர சம்ஹார விழாவை திருச்செந்தூர் சென்று நேரில் காணப்பல வருடங்களாக முயன்றாலும் பணி நிமித்தமாக அது தடைப்பட்டுக்கொண்டே சென்றது. சரி! ஆறுமுகன் அந்தப் பாக்கியத்தை என்ன காரணத்தாலோ இன்னும் வழங்கவில்லை என்று ஆறுதலடைந்து வந்தான்.
இந்த வருடம் சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை வருவதால் எப்படியும் சென்று வந்து விடுவதென்ற முடிவுடனே அலுவலகம் புறப்பட்டவன், விடுப்பையும் எழுதிக் கொடுத்து விடுவது நன்று என்றெண்ணினான். அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததுமே ஹாலில் நண்பர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்க, என்னவென்று அறிந்துகொள்ளும் நோக்கில் அவசரமாக அவர்களை அணுகினான். அவனைப் பார்த்ததும் நண்பர் சுப்பையாதான் பேசினார்.
”அது ஒண்ணுமில்லப்பா! வானிலை மோசமாகிக்கிட்டு வர்றதால இன்னும் ஒரு மாதத்திற்கு யாரும் லீவு எடுக்கக் கூடாதாம்.
அதோடு மட்டுமில்லாம நாம சில குழுக்களாப் பிரிஞ்சி சில நாட்கள் கடற்கரை மாவட்டங்களுக்குக் கேம்ப் போக வேண்டியிருக்குமாம்! அதற்கும் தயாராயிருக்கணுமாம். அதைத்தான் நோட்டீஸ் போர்டுல ஒட்டியிருக்காங்க!
யார் யாரு எந்தெந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டு மென்பது இனிதான் தெரியுமாம். அதையும் நோட்டீஸ் போர்டுல போடுவாங்களாம். ”சுப்பையா பேசிக் கொண்டேயிருக்க, ஆனந்த்தின் உற்சாகம் திடீரென்று வெடித்த டியூப்போல ஆனது.
‘திருச் செந்தூராரே! உங்கள் சூரசம்ஹாரத் திருவிழாவை நேரில் கண்டு களிக்கும் ஆனந்த அனுபவத்தை இந்த ஏழைக்கு எப்பொழுதுதான் வழங்கப்போகிறீர்கள், ’என்று சற்றே கனத்த மனத்துடன் வேண்ட, சுவரில் இருந்த காலண்டரில் மாறாத புன்னகையுடன் இருந்தார் தமிழ்க்கடவுள்!
அவரவர் இந்த மழைக்காலத்தில் குடும்பங்களைத் தனியாக விட்டுச்செல்ல, செய்யவேண்டிய முன் ஏற்பாடுகளை மனதிற்குள்ளாகக் கணக்குப் போட்ட படியே பணிகளில் மூழ்க, ஆனந்த்தும் ஒருவாறான சலிப்புடனே பணிகளில் ஈடுபட்டான்.
‘என்ன வாழ்க்கை இது!விரும்பியதைச் செய்ய முடியாமல், விடுமுறை நாட்களில் கூட விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியாமல்! ’என்று உள்ளுக்குள் புலம்பியபடியே உற்சாகமிழந்து நின்றான்!
அனைவரும் லஞ்சுக்கு எழும்பியபோதுதான் யார் யார் எந்தெந்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.
ஆனந்த்திற்கு ஒதுக்கப்பட்ட மாவட்டம் எது தெரியுமா? திருச் செந்தூர்! அதுவும் செந்தூரார் கோயில் அருகில்!
திரும்பி காலண்டரைப் பார்த்தான் ஆனந்த்! இப்பொழுது முருகன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவனை நோக்குவதாகவே அவன் உணர்ந்தான்!
முருகா! உனதருளே அருள்! உன் கருணையே கருணை!
அவனையுமறியாமல் அவன் கண்கள் பணித்தன! பக்திக் கண்ணீர் அது!