குடும்ப சாபங்கள் தீர்த்து மோட்சம் தரும் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் ரகசியம்!

Thirukalar Temple - பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
Thirukalar Temple - பாரிஜாதவனேஸ்வரர் கோயில்AI Image
Updated on

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் மற்றும் அழகேஸ்வரி அருளும் பாரிஜாதவனேஸ்வரர் ஆலயம். மன்னார்குடியில் இருந்து தெற்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் திருக்களர். திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காவிரியின் தென் கரையில் உள்ள தலங்களில் ஒன்றான பாரிஜாதவனேஸ்வரர் ஆலயம், ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்தருளினார். இதனைக் கேள்விப்பட்ட துர்வாச முனிவர், தானும் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ விரும்பினார். எனவே இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைப் பூஜிக்க விரும்பினார்.

தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத மரத்தை இங்கு கொண்டுவந்து வளர்த்தார். பாரிஜாத மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் பூஜித்து வந்தார். நாளடைவில் இங்கு பாரிஜாத மரங்கள் பெருகி, பாரிஜாத வனமாகியது. துர்வாசரும் தேவதச்சனைக் கொண்டு இங்கு ஆலயம் எழுப்பி, அம்மனையும் பிரத்ஷ்டை செய்து இடைவிடாது பூஜித்தார்.

துர்வாசரின் கோரிக்கையை ஏற்று, சிவபெருமான், இத்திருத்தலத்தில் துர்வாசருக்கு பிரமதாண்டவத்தைக் காட்டி அருளினார். இப்போதும் இவ்வாலயத்தில் துர்வாசர் இறைவனின் பிரமதாண்டவத்தைத் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப, இவ்வாலயத்தில் நடராஜர் பிரமதாண்டவத்தில் அருளும் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும் எதிர் எதிரே உள்ளன.

Thirukalar Temple - பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
Thirukalar Temple - பாரிஜாதவனேஸ்வரர் கோயில்AI Image

இப்போதும் இத்தல விருக்ஷமாக பாரிஜாத மரம்தான் உள்ளது. இறைவன் சந்நிதிக்கும் அம்பிகையின் சந்நிதிக்கும் இடையே பாரிஜாத மரம் (பவழமல்லி) இருப்பதைக் காணலாம். துர்வாச தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.

பாரிஜாதவனம், கற்பகவனம் போன்ற புராணப் பெயர்கள் இத்தலத்திற்கு உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது பாடியுள்ள பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

பாரிஜாதவனேஸ்வரரை வணங்குவோருக்கு இறைவன் அருள் நிச்சயம் என்று அந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பத்தியிலும் போற்றிப் பாடியுள்ளார் சம்பந்தர்.

கேது தோஷ பரிகாரத் தலங்களுள் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இத்தல இறைவனுக்கு களர்முளைநாதர் என்றும், அம்பிகைக்கு அமுதவல்லி, இளம்கொம்பன்னாள் போன்ற திருநாமங்களும் உள்ளன. இங்குள்ள கல்வெட்டில் ஈசனின் பெயர் களர் முளைத்த நாயனார் என்றும், அடைந்தார்க்கு அருள்செய்த நாயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரும் தன் பதிகத்தில் “அடைந்தார்க்கு அருளாயே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மதிய நேரத்தில் கோவில் நடை சாத்தப்படுவது ஏன்? அறிவியலும் ஆன்மிகமும் கூறும் ரகசியங்கள்!
Thirukalar Temple - பாரிஜாதவனேஸ்வரர் கோயில்

இத்தல இறைவனை வழிபட்டால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் கேது தோஷங்கள் மற்றும் பித்ரு சாபங்களுக்கான சரியான பரிகார தலத்தை அறிந்துகொள்ளலாம். இறைவனின் பிரமதாண்டவ தரிசன பலன்களையும், உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மோட்சம் அடைவதற்கான ஆன்மீக வழியையும் உணர்ந்து, வாழ்வில் மனஅமைதியும் பரமபத நற்பேறும் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com