ஒரே திவ்யதேசத்தில் 4 பெருமாள் கோலங்கள்! சென்னைக்கு அருகில் இருக்கும் அதிசய திருநீர்மலை மகாத்மியம்!

Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்
Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்AI Image
Updated on

நான்கு கோலங்களில் அருளும் திருநீர்மலை பெருமாள் வரலாறு;

ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக அருள்கிறார். நின்ற கோலத்தில் அருளும் தலங்கள், சயனக்கோலத்தில், அமர்ந்த கோலத்தில், உலகளந்த பெருமாளாக எனப் பல நிலைகளில் அருள்கிறார் திருமால். ஆனால் அனைத்து நிலைகளிலும் திருமால் அருளும் ஆலயம் சென்னை பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலையில் உள்ளது.

இங்கே நீர்வண்ணப் பெருமாளாக நின்ற கோலத்திலும், நரசிம்மராக அமர்ந்த கோலத்திலும், ரங்கநாதனாக கிடந்த கோலத்திலும், உலகளந்த பெருமாளாக நடந்த கோலத்திலும் திருமால் அருள்கிறார்.

பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசித்துவிட்டு, மற்ற திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தனர். திருநீர்மலை வழியாக வந்தபோது, திருமாலின் சயனக் கோலத்தை மீண்டும் தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஸ்ரீரங்கத்தில் தரிசித்த சயனக்கோலம் கண்களுக்குள்ளேயே இருந்ததால், மீண்டும் சயனக் கோலத்தில் கண்டு மகிழ விரும்பினர்.

இருவரும் திருமாலை வேண்டிநிற்க, அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, திருமால் திருநீர்மலையில் போக சயனத்தில் ரங்கநாதராக காட்சி கொடுத்து அருளினார். இந்த ரங்கநாதப் பெருமாளே இந்தத் திருநீர்மலையில் மலைக்கோயில் மூல மூர்த்தியாக அருள்கிறார். இவர் அருகே பிருகு முனிவரும் மார்க்கண்டேயரும் இருப்பதை இப்போதும் காணலாம்.

மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் இத்தலத்திற்கு ஒருமுறை வந்தபோது, மலைமீது ஏறி, அங்கே அருளும் ரங்கநாதரையும், அமர்ந்த கோலத்தில் அருளும் நரசிம்மரையும், நடந்த கோலத்தில் அருளும் திரிவிக்கிரமரையும் தரிசித்தார். ஆனாலும் அவர் மனதில் ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தோன்றியது. மலை மீதிருந்து இறங்கி வரும்போதும் நிம்மதி இல்லாத ஒரு உணர்வு. மூன்று கோலத்தில் திருமாலை வணங்கி வந்தபிறகும் மனதில் குறை இருக்கக் காரணம் என்ன என்று ஆராய்ந்தார்.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்

அப்போதுதான் அவருக்கு தன் மனம் கவர்ந்த ராமபிரான் அங்கில்லையே என்பது புரிந்தது. தன் மனம் ராமரைத் தரிசிக்க ஏங்குகிறது என்பது புரிந்தபோது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ராமபிரானை உடனே தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. மனம் உருகி இறைவனைப் பிரார்த்தித்தார்.

அவர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த திருமால், நீர்வண்ணனாகக் காட்சி தந்தார். சீதாதேவி, லக்ஷ்மணன், பரத சத்ருக்னன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமபிரானாக திருமால் அவருக்குக் காட்சிகொடுத்தார்.

வால்மீகி மகரிஷி மனம் குளிர்ந்தார். அதே திருக்கோலத்தில் அங்கே கோயில் கொண்டருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் அப்படியே இத்தலத்தில், மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீ ராமராக, நீர்வண்ணப் பெருமாள் என்ற திருநாமத்தோடு தங்கிவிட்டார். தாயார் அணிமாமலர் மங்கை என்ற திருநாமத்தில் தனிக்கோவில் நாச்சியாராக அருள்கிறார்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!
Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்

இத்தலத்து இறைவனைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் ஒருமுறை வந்தார். அப்போது இந்த மலையைச் சுற்றி அகழி போல் நீர் தேங்கியிருந்தது. அவரால் நீரைக் கடந்துசெல்ல முடியவில்லை. திருமாலைத் தரிசிக்காமல் திரும்பிச்செல்ல அவருக்கு மனமில்லை. தண்ணீர் வடிந்து பெருமாளைத் தரிசித்தபிறகே திரும்பிச் செல்வது என்று தீர்மானித்தார். கோவில் எதிரே உள்ள சிறிய மலையில் தங்கினார்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஆறு மாதங்கள் காத்திருந்தார். தொடர் மழை காரணமாக தண்ணீர் வற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் நாராயணனைத் தரிசிக்கும் ஆவலில் காத்திருந்தார் ஆழ்வார். அவர் எண்ணம் ஈடேறியது. தண்ணீர் வற்றியதும், ஆர்வமுடன் கண்களில் நீர் பெருக, ஓடோடி வந்து திருமாலின் நான்கு திருக்கோலங்களையும் தரிசித்து மகிழ்ந்து பாசுரங்கள் பாடினார்.

திருமங்கையாழ்வார் வந்தபோது மலையைச் சுற்றி நீர் தேங்கியிருந்ததால் இத்தலத்திற்கு திருநீர்மலை என்ற பெயர் வந்தது. அதற்கு முன் ‘காண்டவ வனம்’ ‘தோயாத்ரி மலை’ போன்ற பெயர்களாலேயே வழங்கப்பட்டன.

Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்
Thiruneermalai Temple - திருநீர்மலை பெருமாள்

நரசிம்மர் அநேகமாக எல்லாத் தலங்களிலும் உக்கிரமாகக் காட்சி தருவார். ஆனால் இங்கே சாந்தமாக, பால நரசிம்மராக அருள்கிறார். இரணியனை வதம் செய்ய உக்கிரமாகத் தோன்றிய நரசிம்மரைக் கண்டு பிரகலாதன் பயந்தான். அதனால் தன் பக்தனுக்காக, அவனைப் போலவே பாலகனாக, சாந்த ஸ்வரூபியாக தரிசனம் தருகிறார் நரசிம்மர். ‘பால நரசிம்மர்’ என்று இவரை அழைக்கின்றனர். சங்கு சக்கரம் இன்றி பாலகனாக அருளும் நரசிம்மருக்குப் பின்புறம் நரசிம்மர் சுயரூபம் காட்டி அருள்கிறார்.

திருமால் தானாகத் தோன்றிய தலங்கள் எட்டு. இவை ‘ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப் படுகின்றன. அவற்றில் திருநீர்மலையும் ஒன்று.

 ஸ்ரீரங்கம்

 ஸ்ரீமுஷ்ணம்

 திருப்பதி

 சாளக்கிராமம்

 நைமிசாரண்யம்

 புஷ்கரம்

 நாராயணபுரம் ஆகியவை மற்ற ஏழு தலங்களாகும்.

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை, திருமணத் தடைகள் நீக்கவும், ஆயுள் ஆரோக்கியம் அருளும் ப்ரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com