

வாழ்க்கையின் விதியை நாம் செய்யும் பாவங்கள் தீர்மானிக்கின்றன. நான் தற்போது அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் தான் காரணம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் தற்போது தெரியாமலே செய்தாலும் மூன்று பாவங்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவற்றை இப்பதிவில் காண்போம்.
கர்வம்
அனைத்து பாவங்களுக்கும் தொடக்க புள்ளியாக இருக்கும் கர்வம், ஆன்மீக ரீதியாக பாவங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. தன்னுடைய திறமைகள் மீது அதிக நம்பிக்கை ஏற்படும் போது தொடங்கும் கர்வம் மற்றவர்களின் மீதான வெறுப்புக்கு காரணமாக அமைகிறது. கடவுளின் கருணை இல்லாமல் அவர்கள் திறமையை பெற்றிருக்க முடியாது என்றாலும் கர்வம் காரணமாக கடவுள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு குறைகிறது. கர்வம் கொண்டவர்கள் அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அவமானப்படுத்துவர்.
ஆகவே கர்வத்தை விட்டொழித்து மற்றவர்களின் திறமையையும் நல்லொழுக்கங்களையும் பாராட்டும் போது மனநிறைவும் பணிவும் ஏற்பட்டு கர்வம் அழிந்து விடும். ஒருவரிடம் இருந்து கர்வம் அழிந்து விட்டாலே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி பாவத்திற்கு இடமில்லாமல் போய்விடும்.
பொறாமை
நமக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கும் போது ஏற்படும் கோபம் அல்லது அதை இழந்து அவர்கள் நிற்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியே பொறாமையாக உருவெடுக்கிறது. பொறாமை மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை சிதைக்கிறது. இரக்கமும், கருணையும் இருந்தால் உதவும் எண்ணம் ஏற்பட்டு அதன் மூலம் பொறாமை அழிகிறது. கூடி வாழ்வதே சொர்க்கத்தை அடையும் ஒரே வழி என நமது புராணங்கள் கூறியுள்ளன. ஆகவே மற்றவர்கள் வெற்றி அடையும் போது உங்களுக்கு கோபம் ஏற்பட்டு பொறாமை ஏற்பட்டு இருந்தால் அவர்கள் வெற்றி பெற என்ன முயற்சி செய்தார்கள் எனக் கேட்டு தெரிந்து கொண்டு செயலாற்றினால் உங்கள் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்பட்டு பொறாமை தீ அகன்று விடும்.
கோபம்
இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது கட்டுப்படுத்த முடியாத கோபமாகும். கோபத்தை வெளிப்படுத்தினாலும் மனதிற்குள்ளேயே வைத்திருந்தாலும் அது இருக்கும் இடம் அழிந்து விடும். ஆன்மீக ரீதியாக பார்த்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தாலும் கோபம் அழிவுக்கான வழி என்பதால் அதனை கட்டுப்படுத்த பொறுமை மிகவும் அவசியமாகும். ஆகவே கோபத்திற்கான பரிகாரமாக இருக்கும் பொறுமையை கையாண்டு எத்தகைய கோபத்தையும் அழித்து விடலாம். மேலும் கோபத்தை பொறுமை கொண்டு கட்டுப்படுத்தினால் பாவத்திலிருந்து தப்பித்து விடலாம்.
கர்வம், பொறாமை, கோபம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால் இம்மூன்றையும் நம்மிடமிருந்து அகற்றி விட்டால் பாவங்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.