
கேரளாவில் திருச்சூரில் நடைபெறும் சித்திரை மாதத்தின் பூரம் விழா மற்ற ஊர்களில் நடக்கும் பூரம் விழாவுக்குத் தாய் விழா எனப் போற்றப்படுகிறது. இம்மாதம் 6ஆம் நாள் பூரம் விழா நடைபெறும்.
வரலாறு:
1798 ஆம் ஆண்டு கேரளாவில் பெரிய மழை பெய்ததால் ஆறாட்டுப் புழா பூரம் விழா கொண்டாட முடியவில்லை. அப்போது கோவில் நிர்வாகிகள் கொச்சி மன்னரிடம் வந்து அடுத்து எப்போது கொண்டாடலாம் என்று தங்கள் குறையை முறையிட்டனர். அவர் அனைத்துத் தெய்வங்களுக்கும் தான் புதிதாகக் கட்டிய திருச்சூர் வடக்கு நாதன் கோவிலுக்கு வந்து அங்கேயே பெரிய விழாவாகக் கொண்டாடலாம் என்றார். கொச்சி மன்னர் ராமவர்மா குஞ்ஞிபிள்ளை தம்புரான் (1751-1805) காலம் முதல் பூரம் விழாக் கொண்டாட்டங்கள் தற்போதுள்ள புதிய முறைக்கு மாறின.
கிழக்கும் மேற்கும்:
மேற்குப் பகுதியில் இருப்பவர்களையும் கிழக்குப் பகுதியில் இருப்பவர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து யானைகளின் மேல் சாமியை வைத்து கொண்டு வரும்படி கூறினார்.
இதுவே திருச்சூர் விழாவில் இரண்டு பிரிவாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் வந்து நிற்பதற்கு காரணமாகும். திருவம்பாடி கிருஷ்ணர் கோயில் மற்றும் பரமேக்காவு பகவதி கோயிலைச் சேர்ந்தவர்கள் இரு புறமும் நின்று மாறி மாறி இரவு முழுக்க இசை முழக்கம் செய்வதையும் வெடி வெடிப்பதையும் மக்கள் மிகவும் ரசிப்பர்.
எல்லாம் புதுசு:
திருச்சூரைச் சுற்றி இருக்கும் பத்து சிவன் கோவில்களையும் இணைத்து திருச்சூரில் பெரிய விழாவாக நடத்துகின்றனர். இவ்விழாவில் யானைகளுக்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் புதிதாக அந்தந்த ஆண்டு தயாரிக்கப்படுகின்றது அல்லது வாங்கப்படுகின்றது. எனவே இதற்கு செலவு அதிகம். யானைகளுக்கான நெற்றிப் பட்டம் மற்றும் அதற்கு மேல் சாமி வைத்து சுமந்து வரும் குடைகள் ஆகியன புதிது புதிதாக தயாரிக்கப்படும்.
பூர விலாம்பரம்:
சிவன் கோவில் திருச்சூரில் கட்டப்படுவதற்கு முன்பு இங்கிருந்த மண்ணின் மக்கள் வணங்கிய தெய்வம் நெய்திலக்காவிலம்மா ஆகும். பூரம் நன்னாளில் இந்த அம்மாளையும் ஒரு புறம் வைத்து சிறப்பு செய்யப்படுகிறது. இதனை பூர விலாம்பரம் என்பர். வடக்கு நாதன் கோவிலின் தெற்கு நுழைவு வாயிலில் நெய்திலக்காவில் அம்மா சிலையை சுமந்தபடி ஒரு யானை சற்று தள்ளியே நிற்கும். அதுவரை அங்கு செல்வாக்கு பெற்ற தெய்வமாக விளங்கிய பகவதி, சிவன் கோயிலில் பூரம் விழா தொடங்கியதும் முக்கியத்துவம் குறைந்தவள் ஆனாள்.
திருச்சூர் பூரம் விழாவில் இரண்டு குழுவாக பங்கேற்பார்கள். மேற்குப் பிரிவினர் குழுவில் திருவம்பாடி, கனிமங்கலம், லாலூர் ஐயன்தோள், நெத்திலகாவு ஆகிய கோவில்களும், கிழக்கு குழுவில் பரமக்காவு, காரமுத்து, செம்புக்காவு, சூரபோட்டு காவு, பணமுக்கம்பள்ளி ஆகிய கோவில்களும் அடங்கும்.
வெடிக்கெட்டு:
2025ஆம் ஆண்டில் மே ஐந்தாம் நாள் இரவு வெடிக்கெட்டு என்ற பெயரில் வான வேடிக்கை நடைபெறும். அன்று சுமார் ஒரு மணி நேரம் வான வேடிக்கைகளும் விதவிதமான வெடிகளும் வெடிப்பதைப் பார்க்கலாம். திருவம்பாடி மற்றும் பரமேகாவு தேவஸ்தானங்களில் தனிதனியாக ஒரு மணி நேரம் வெடி வெடிக்கும். இரவு சுமார் 7:00 மணிக்கு வான வேடிக்கை தொடங்கும். அன்று புதிய புதிய பட்டாசுகள் அங்கு அறிமுகமாகும்.
குடமாட்டம்:
வடக்கு நாதன் கோயிலுக்கு முன்புள்ள தேக்கன்காடு மைதானத்துக்கு அலங்கரிக்கப்பட்ட நூறு யானைகள் அழைத்து வரப்பட்டு எதிர் எதிராக இரண்டு பிரிவாக நிற்கும். யானையின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர் சாமியைப் பிடித்திருப்பார். ஒவ்வொரு யானைக்கும் 40 ஆயிரம் வரை செலவாகும். வெடிக்கெட்டு திருவிழாவுக்கு ஒவ்வொரு குழுவும் சுமார் 30 லட்சம் வரை செலவழிக்கும். இரு பிரிவினரும் மாறி மாறி செண்டை மேளம் கொட்டி இசை முழக்கம் செய்வர். இப்போட்டி விடிய விடிய நடை பெறும். இதனை குடமாட்டம் என்று அழைப்பார்கள்.
பகல் பூரம்:
திருச்சூர் பூர விழா ஏழாம் நாள் நிறைவடையும். அன்றைக்கு பகல் பூரம் என்று அழைக்கப்படும். அன்று திருச்சூர் பூரம் விழாவுக்கு வந்த தெய்வங்கள் விடைபெற்று ஊர் திரும்பும். இதனை பிரியாவிடை விழா என்று அழைப்பார்கள். இதுவே கோவில் வளாகத்தின் முன்பு நடைபெறும் கடைசி நிகழ்வாகும்.
பிரியா விடை:
திருச்சூர் கோவிலுக்குப் பூரம் விழாவுக்காக வந்த திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர், பரமக்காவு பகவதி கோவில் அம்மன் ஆகியோர் கொண்டாட்டத்தை நிறைவு செய்த பின்பு அவரவர் கோவிலுக்குப் புறப்படுவர். அப்போது பகலில் வெடி வெடிக்கப்படும். பகல் வெடிக்கெட்டுடன் பிரியாவிடை பெற்று இவ்விரு தெய்வங்களும் தம் ஊருக்கு திரும்புவர். இந்நிகழ்வை பிரியாவிடை என்பர்.
உலகப்புகழ் பெற்ற பூரம்:
திருச்சூர் பூரம் விழா சுமார் ஒன்றரை நாள் (36 மணி நேரம்) நடைபெறும். திருச்சூர் விழா உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் விழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. மதம், மாநிலம் நாடு கடந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். இந்தியாவின் சமய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் திருச்சூர் பூரமும் ஒன்றாகும்.