

இரண்டாம் குலோத்துங்க சோழமன்னன் கட்டிய ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இரண்டாம் குலோத்துங்கனின் தங்கை கோமளவல்லி. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய மன்னன், அவளது ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டி கணிக்கச் சொன்னான். அந்த ஜோதிடர் சொன்ன செய்தி மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளதாகவும், அதற்கு உரிய பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் ஜோதிடர் கூறினார்.
மன்னன் தான் வணங்கும் சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது, "ஒரு ஆலயம் கட்டு, உன் தங்கையின் தோஷம் விலகும்" என்ற அசரீரி வாக்கு கேட்டது. அந்த அசரீரியை தெய்வக் குரலாக உணர்ந்த மன்னன், ஒரு ஆலயம் கட்டி முடித்தான். இரண்டாம் குலோத்துங்கச் சோழனான அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்குத் தன் தங்கையின் பெயரையே சூட்டினான்.
ஆலயம் கீழ்த்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைப்பாதை; நடுவே நந்தியெம்பெருமான் அருள் பாலிக்கிறார். அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது.
மண்டப நுழைவாயிலில் இடது புறம் பிள்ளையாரும், வலது புறம் முருகப் பெருமானும் துவாரபாலகர்களாக கொலுவிருக்க, மகா மண்டபத்தின் வலதுப் புறமாக கோமளவள்ளியின் சன்னதி உள்ளது. கருவறையில் அன்னை நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகின்றன.
அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலப்புறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலைகளாக அமைக்கப்பட்டு கண்ணைக் கவருகின்றன. பொதுவாக நடராஜர், சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ இருக்கும்; ஆனால், இங்கு விக்கிரகமாக (கற்சிலையாக) இருப்பது சிறப்பு அம்சமாகும்.
மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரிய, சந்திரர்கள் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமானும் வீற்றிருக்கின்றனர். கருவறையில் இறைவன் சோழீஸ்வரர் சிவலிங்க திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருள் புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நந்தி, மேற்கில் மகா கணபதி, வள்ளி-தெய்வானை உடன்முருகன், கஜலக்ஷ்மியும், கிழக்கில் காலபைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடனும், வாகனத்துடனும் அருள் பாலிப்பது அபூர்வமானது.
இங்கு தலவிருட்சமாக வில்வம் தழைத்தோங்கி, கிழக்குப் பிராகாரத்தில் செழுமையாக காட்சி தருகிறது. பிரதோஷம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது; நவராத்திரி மற்றும் சிவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. நாகதேவன் இத்தல இறைவன், இறைவியை வேண்டி சாபம் நீங்கப் பெற்றான். எனவே, இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அதனால் தானோ என்னவோ, நாகங்கள் சர்வ சாதாரணமாக கருவறைக்குச் செல்வதும், இறைவன் திருமேனியில் ஊர்ந்து காணப்படுவதையும் பக்தர்கள் அடிக்கடி காண்கிறார்கள்! ஆனால், இந்த நாகங்கள் யாருக்கும் தொந்தரவு செய்வதில்லை.
நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன், இறைவிக்கு பாலாபிஷேகம், மாதுளம்பழ அபிஷேகம் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு வடைமாலை சாற்றி, செவ்வரளி மாலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் விலகும் என்கிறார்கள். குழந்தை வேண்டி வருபவர்களுக்கு விரைவில் அந்த பேறு கிடைக்கிறது. குழந்தைக்கு ஒரு வயது ஆனதும், இந்த ஆலயத்தில் ஆயுசு ஹோமம் செய்கிறார்கள்; பின்னர் அன்னப்பிராசனமும் குழந்தைக்கு இதே ஆலயத்தில் நடைபெறுகிறது.
இக்கோவிலில் ஆவணி 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் விழுந்து, ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுகிறார்கள். இங்கு கஜலக்ஷ்மிக்கு ஆடி வெள்ளியில் வளையல் அலங்காரம் செய்து, அதை பக்தர்களுக்கும் பிரசாதமாக தருகிறார்கள். திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடியில் இக்கோவில் அமைந்துள்ளது.