திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கிய தமிழர் யார்?

ரூ.200 கோடி மதிப்பிலான 46 வகை பொன் நகைகளை வழங்கி வரலாறு படைத்த வர்தமான் ஜெயின்!
திருப்பதி தங்கம் - Tirupati gold donation
திருப்பதி தங்கம் - Tirupati gold donation
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

திருப்பதி சென்று திரும்பி வந்தாலே வாழ்க்கையில் நல் திருப்பங்கள் நேரும் என்பது மக்களின் நம்பிக்கை!பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் அந்த நம்பிக்கை காரணமாகக் காணிக்கைகள் குவிந்து வருவதும் கண்கூடு.

உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களும், மற்றவர்களுங்கூட திருப்பதி வெங்கடேசரை நேரில் கண்டு களிப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள்; அதற்காகவே பயணங்களையும் மேற்கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றித்தரும் பாலாஜிக்குப் பணமாகவும், வெள்ளி, தங்க மதிப்பு மிக்க உலோகங்களாகவும் உள்ளார்ந்த பக்தியுடன் 

கணிசமான காணிக்கையைச் செலுத்துகிறார்கள். எனவேதான் ஏழுமலை வாசன் எப்பொழுதும் பணக்காரக் கடவுளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில்,இது வரை திருப்பதி கோயில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு தனி மனிதர் காணிக்கையாக, சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள 121 கிலோ திருப்பதி தங்கம் ஆபரணங்களை ஒருவர் வழங்கியுள்ளார்!

யார்? யாரவர்? என்று அறிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் எழுவது இயல்பே.

அதிலும் நமக்கு ஒரு சிறப்புதான். ஏனெனில் அந்த வள்ளல் தன்மைகொண்ட பரோபகாரி நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வெளி நாடு வாழ் இந்தியரான அவர் பெயர் வர்தமான் ஜெயின் (Vardhaman Jain). அமெரிக்காவில் உள்ள அவரின் நிறுவனத்தின் 60 விழுக்காட்டுப் பங்குகளை விற்றதன் மூலம் சுமார் 6000 கோடி ரூபாயை அவர் ஈட்டியுள்ளாராம். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே ஏழுமலை ஶ்ரீனிவாசருக்கு ஒரு குவிண்டாலுக்கு மேல் எடையுள்ள தங்க ஆபரணங்களை வழங்கியுள்ளாராம்.

என்னென்ன நகைகள் என்ற எதிர்பார்ப்புதானே அடுத்து நம் மனதில் உதிக்கும் கேள்வி. சிலைகளின் மீது அணிவிக்கும் கிரீடம், சங்கு-சக்கரம், புஜ கீர்த்திகள் என்று அழைக்கப்படும் தோள்பட்டை ஆபரணங்கள், நாகாபரணம், ஒட்டியாணம், மாலைகள், தாமரை பீடம், அபய ஹஸ்தங்கள் மற்றும் தங்க ஆடைகளும் ஆபரணங்களோடு அடக்கமாம்.

எட்டரை அடி உயரமுள்ள கோவிந்தனின் உருவச் சிலையின் அழகைக் கூட்டும் அத்தனை ஆபரணங்களும் இதில் அடக்கமாம். மேற்கண்ட அனைத்துமே பிரத்யேகமாக, திருமலைவாசனுக்காக மிகுந்த சிரத்தை கொண்டு தயாரிக்கப்பட்டனவாம்.

எத்தனை எண்ணிக்கையில் அவை செய்யப்பட்டிருக்கும் என்ற எண்ணம் அடுத்து எழுந்து மனதில் நிழலாடும். ஒன்பது பெருந்தொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை 46 ஆம்.

ஒப்படைப்பு நிகழ்ச்சி முறைப்படி அறிவிக்கப்பட்டு கடந்த 26.11.2026 அன்று நடந்தேறியுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்பதால் முதலமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களும் விழாவில் பங்கேற்றுள்ளார்.

முன்கூட்டியே ஆலோசனையை ஆலய தேவஸ்தான நிர்வாகிகளுடன் மேற்கொண்ட வர்தமான் ஜெயின், செய்யப்போகும் ஆபரணங்கள் குறித்த விபரங்கள் குறித்துக் கலந்துரையாடல் மேற்கொண்ட பிறகே ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.

அப்பொழுது வர்தமான் தனது பெயரைப் பிரபலப் படுத்தத் தேவையில்லையென்றும் வேண்டுகோள் வைத்தாராம்.

திருப்பதி தங்கம் - Tirupati gold donation
திருப்பதி தங்கம் - Tirupati gold donation

மதிப்புமிக்க மலையானுக்கு மகிழ்ந்தளித்த நன்கொடைகள் ஏராளம் என்று சொன்னால் அது நிறைவாகாது.

திருக்கோயில் வரலாற்றிலேயே முதன்முதலாகப் பெறப்பட்ட மிகப்பெரிய நன்கொடையை பல்லவ அரசி சாமவை கி.பி.966 லேயே அளித்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் விளம்புகின்றன. போக ஶ்ரீனிவாசரின் வெள்ளி விக்கிரகம், தங்க ஆபரணங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்காகப் பல ஏக்கர் நிலங்களைக் காணிக்கையாகத் தேவஸ்தானத்திற்கு வழங்கினராம் ராணி.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
திருப்பதி தங்கம் - Tirupati gold donation

விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் (1517)அதிக அளவில் தங்க, வைர, வைடூரிய நகைகளை வழங்கினாராம். கருவறையின் மேலுள்ள ஆனந்த நிலைய விமானத்திற்குத் தங்க முலாம் பூசவும், ஏழுமலையானின் வைரக் கிரீடம் உள்ளிட்ட பல ஆபரணங்கள் செய்யவும் தங்கத்தையும், தேவைப்பட்ட நிதியுதவியையும் அதிக அளவில் செய்தாராம்.

மைசூர் மன்னர்கள் மற்றும் கட்வால் சமஸ்தானத்தினர் வெங்கடேசப் பெருமானுக்குப் பெருமளவிலான தங்க, வைர நகைகளைக் காணிக்கையாகக் கொடுத்தனராம்.

கி.பி.300 முதலே தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும், சோழ மற்றும் பாண்டிய மன்னர்களும் கோயில் திருப்பணிகளுக்காகத் தங்க ஆபரணங்களையும், பல கிராமங்களையும் வழங்கியுள்ளார்களாம்.

ஹைதராபாத் ஏழாவது நிஜாம் திரு மிர் உஸ்மான் அலி கான் கோயிலின் நித்திய பூஜை மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக ஆண்டு தோறும் ரூ 8000/-செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

தற்காலத்தில், சஞ்சீவ் கோயங்கா அவர்கள் ரூ5 கோடி மதிப்பிலான ஆபரணங்களை அளித்துள்ளாராம்.

பக்தர்கள் குழு, ரூ3.86 கோடி மதிப்பிலான தங்க மாலையைப் பரிசாக அளித்துள்ளதாம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போதைய சூழலில்,ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்கும் நேரத்தில் 121 கிலோ தங்கத்தை ஏழு மலையானுக்கு வழங்கியுள்ள வர்தமான் ஜெயின் போற்றுதலுக்கு உரியவர் ஆகிறார்.

மேலும் மேலும் மதிப்புமிக்க உலோகத்தைப் பெற்று வரும் ஏழுமலைவாசன் இவ்வுலகை இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி எல்லோர்க்கும் வளத்தை வழங்க 

வணங்கிக் கேட்டுக்கொள்வோம்!

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை: ஆன்மிகப் பயணம் தந்த ஆனந்த அனுபவம்!
திருப்பதி தங்கம் - Tirupati gold donation