
பக்தியில் ஆண் - பெண் என்ற எந்த பேதமும் இல்லை. இந்த கும்பமேளாவில் அதிகளவில் பெண் நாகசாதுக்கள் வெளிப்பட்டனர். கும்பமேளா வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் ஆண் நாக அகாடா (குழு) வருகைக்கு பிறகு, பெண் நாக அகாடாவும் மிகுந்த உற்சாகத்துடனும் வந்தனர். இந்த மகளிர் சாதுக்கள் அரச ஸ்நானங்களில் பங்கேற்றனர். இந்த சாதுக்களை சக்தியின் வடிவமாக போற்றுகிறார்கள்.
பெண் நாக சாதுக்கள் பொது இடங்களில் காவி உடை அணிகிறார்கள். இந்த உடை நூலினால் தைக்கப்படக் கூடாது. ஒரு காவி உடையை தங்கள் உடலை சுற்றி கழுத்தில் சுற்றி முடிச்சி போட்டுக் கொள்கிறார்கள். இதற்கு காந்தி என்று பெயர். உடல் முழுக்க மாலைகளையும் அணிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உடை மீது எந்த பற்றும் இல்லை. ஆனாலும் பொது வெளியில் காவி உடை அணிந்திருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
பெண் சாது அகாடா:
நாக சாதுக்களுக்கு 13 அகாடாக்கள் உள்ளன. இதில் ஜூனா அகாடா மிகப்பெரியது. லக்னோ நகரில் உள்ள ஸ்ரீ மங்காமேஷ்வர் கோவிலின் தலைமை பூசாரி அவ்தேசானந்த்கிரி இந்த அகாடாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூனா அகாடாவில் 10,000க்கும் மேற்பட்ட பெண் சாதுக்கள் உள்ளனர். இது தவிர வெளிநாட்டு பெண் சாதுக்களும் உள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் பெண் சாதுக்களுக்காக கின்னர அகாடா உருவாக்கப்பட்டது. லக்ஷ்மி நாராயண் திரிபாதி அதன் தலைவியாக உள்ளார். இந்த அகாடாவை தவிர பல பெண் சாது அகாடாக்கள் உள்ளன. ஒவ்வொரு அகாடாவிற்கும் தனிக்கொடி தனி முத்திரை உண்டு.
பொதுவாக அகாடாவின் அனைத்து பெண் சாதுக்களும் 'மாதா', 'அவதூதானி' அல்லது நாகின்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இருப்பினும், இந்த மாதா மற்றும் நாகின் ஆகியோருக்கு அகாடாவில் உள்ள எந்த முக்கிய பதவியும் வழங்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட பகுதியின் தலைவியாக அவர்களுக்கு 'ஸ்ரீமஹந்த்' என்ற பெயருடன் பதவி வழங்கப்படுகிறது. ஸ்ரீமஹந்தராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், அரச புனித நீராடுவதற்காக பல்லக்கில் பயணம் செய்கிறார். மைபடா என்ற பெயருடன் அழைக்கப்படும் சாதுக்களுக்காக தனி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண், நாகின் சாதுவாக மாற, அவரது முந்தைய பிறவிகளை குருமார்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். முதலில் பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் இடையே தனக்கு எந்த பற்றும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். ஒரு நாகின் சாது 5 குருக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு 6 லிருந்து 12 வருடங்கள் வரை பிரம்மச்சரிய விரதமிருந்து கடுந்தவம் புரிய வேண்டும். இன்னும் சில சோதனைகள் முடிந்த பின்னர், அவர் தன் வாழ்வு முடிந்ததாக கருதி தனக்கு தானே இறுதி சடங்குகளை செய்ய வேண்டும்.
மற்ற நாக சாதுக்களைப் போலவே பெண் தன் தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் அவர்களுக்கு நாகின் சாதுவாக தீட்சை அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் நீண்ட முடி வளர்த்துக் கொள்கிறார்கள். தினமும் காலை அவர்கள் ஈஸ்வரனையும் மாலையில் தத்தாத்ரேயரையும் வழிபடுகிறார்கள். இந்த சோதனைகள் அனைத்திலும் பெண் தேர்ச்சி பெற்றால், அவளுக்கு மாதா என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பெண் சாதுக்களுக்கு முழு மரியாதை அளிக்கப்படுகிறது. அவர்கள் இறைசக்தியின் பெண் வடிவமாக வணங்கப்படுகிறார்கள்.
நாகின் சாதுக்கள் வேர்கள், பழங்கள், மூலிகைகள், பழங்கள் மற்றும் பல வகையான இலைகளை சாப்பிடுகிறார்கள். ஆண் நாக சாதுக்களும், பெண் நாகின்களும் தனித்தனியாக வாழ்கின்றனர். அகாடாக்களில் பெண் துறவிகளுக்கென தனி இடம் உள்ளது. பெண் நாக சாதுக்கள் கும்பமேளா காலங்களில் மட்டுமே வெளியுலகிற்கு வருகிறார்கள். புண்ணிய நதியில் நீராடிவிட்டு, விரைவில் ஹிமாலயாவின் அடர்ந்த வனத்திற்கு திரும்பி தங்கள் தவ வாழ்க்கையை தொடர்கிறார்கள்.