
திருஉத்தரகோசமங்கை கோவில் :
மிகவும் தொன்மை வாய்ந்த கோவில்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன.
ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இத்திருக்கோவில் உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.
ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் எனவும் நம்பப்படுகிறது.
7000 வருடங்களுக்கு முன்னால் சிவபெருமான் இந்த உத்திரகோசமங்கையில் தான் பிறந்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் இன்று (4/4/2025 வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள் ராஜகோபுர கலசங்கள் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஏப்ரல் 1-ம்தேதி திறக்கப்பட்டு மரகத நடராஜர் மீது சாத்தப்பட்டிருந்த சந்தனம் முழுவதுமாக களையப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு நடராஜருக்கு மீண்டும் பால், பன்னீர், திரவியம், மாப்பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் மாலை 5 மணி அளவில் மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் மட்டுமே மார்கழி ஆருத்ரா நாளில் திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னதியானது இந்த ஆண்டு கும்பாபிஷேகத்திற்காக 3 நாட்கள் திறக்கப்பட்டு இருப்பதால் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் :
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். மருத மரங்கள் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் கோவில் கொண்ட முருகனுக்கு மருதாச்சல மூர்த்தி என்ற பெயரும் உண்டு. வேறெங்கும் காணமுடியாத வகையில் முருகன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிலை இக்கோவிலில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலமான மருதமலை கோவில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன. மலை மீதிருக்கும் இக்கோவிலுக்கு 837 படிகள் ஏறி செல்ல வேண்டும். இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தரின் சந்நிதியில் தரப்படும் விபூதி பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது என ஆணித்தரமாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் இன்று (4/4/2025 வெள்ளிக்கிழமை) திருச்சுற்று தெய்வங்கள், பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், கொடிமரம் பரிவார விமானங்கள், ஆதி மூலவர், விநாயகர் மருதாச்சலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரி வரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.