

நான்கு மாத யோக நித்திரைக்குப் பிறகு மகாவிஷ்ணு விழித்தெழும் நாளாகப் போற்றப்படும் ஏகாதசி இது. இதன் பின்னணியில் உள்ள ஆன்மிகச் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்வோமா?
2026 நவம்பர் 20 ம்தேதி ஸ்மார்த்த மரபின் படியும், நவம்பர் 21 ம்தேதி வைஷ்ணவ மரபின் படியும் பிரபோதினி ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது.
இந்துக்களின் வழிபாட்டு மரபில் ஏகாதசி விரதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வந்தாலும், கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
உத்தான ஏகாதசி தேவுத்தான ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. உத்தானம் என்றால் எழுதல் அல்லது விழித்தெழுதல் என்று பொருள். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி முதல் மகாவிஷ்ணு யோக நித்திரையில் ஆழ்வதாகவும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று அவர் விழித்தெழுவதாகவும் புராண மரபு கூறுகிறது.
மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருந்த இந்த நான்கு மாத காலம் சதுர்மாஸ்யம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் பக்தர்கள் விரதம், தியானம், வழிபாடு, தானம் போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உத்தான ஏகாதசியுடன் இந்தக் காலம் நிறைவடைகிறது.
இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து, துளசி தளங்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு அஷ்டோத்திரம், நாராயண மந்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பு.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தங்களுடைய உடல்நிலைக்கும் வயதுக்கும் ஏற்றவாறு விரத முறையைத் தேர்ந்தெடுக்கலாம். சிலர் முழு உபவாசம் இருப்பார்கள். சிலர் பழங்கள், பால் போன்ற எளிய உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். விரதத்தின் முக்கிய நோக்கம் உடலை வருத்துவது அல்ல; மனதை இறைவனிடம் ஒருமுகப்படுத்துவதுதான்.
இந்த ஏகாதசியுடன் துளசி விவாகம் என்ற சிறப்பான வழிபாட்டு மரபும் தொடர்புடையது. துளசி தேவிக்கும் மகாவிஷ்ணுவின் வடிவமான சாளக்கிராமத்துக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு வடஇந்தியாவில் விமரிசையாக நடைபெறுகிறது.
சில இடங்களில் இந்த நாளிலிருந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்குவதாகவும் நம்பப்படுகிறது.
பிரபோதினி ஏகாதசியின் மகத்துவம்;
உத்தான ஏகாதசிக்கு பிரபோதினி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. பிரபோதினி என்றால் விழிப்புணர்வு அல்லது விழித்தெழுதல் என்று பொருள். மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருந்து விழித்தெழும் நாளாக இது போற்றப்படுவதால் இந்த பெயர் ஏற்பட்டது.
இந்த ஏகாதசி ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாமல் புராணங்களிலும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக இந்த நாளில் விஷ்ணுவின் நாமங்களை உச்சரிப்பதும், பகவத் கீதை மற்றும் விஷ்ணு புராணம் போன்ற புனித நூல்களைப் படிப்பதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
பிரபோதினி ஏகாதசியை முன்னிட்டு பல விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் துளசி மாலை அணிவித்து பெருமாளைத் தரிசனம் செய்கின்றனர். சில கோயில்களில் தீபங்கள் ஏற்றி, இறைவனின் நாமத்தை மனதார சொல்லி இரவு முழுதும் விழித்திருந்து வழிபடும் வழக்கமும் உள்ளது.
மேலும் இந்த நாளில், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல், தான தர்மங்கள் செய்தல், பிறருக்கு உதவுதல் போன்ற நற்செயல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இறை வழிபாட்டோடு மனித நேயத்தையும் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதே இந்த விரதம் உணர்த்தும் உயர்ந்த கருத்தாகும்.
ஏகாதசி வழிபாடு நடைபெறும் திருத்தலங்கள்:
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி. நகர் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட விஷ்ணு ஆலயங்களில் பக்தர்கள் ஏகாதசி நாளில் பெருமாளை வழிபடுவது வழக்கம் .
குறிப்பாக துளசி அர்ச்சனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சிறப்பு அலங்காரம் போன்ற வழிபாடுகள் பக்தர்களுக்கு ஆன்மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.. ஏகாதசி அன்று கோயில்களுக்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பதும் துளசி தீர்த்தம் பெற்றுக்கொள்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
ஏகாதசி விரத்த்தின்நிறைவாக மறுநாள் துவாதசி அன்று பாரணை செய்வது முக்கியமான மரபாகும். விரதம் இருப்பவர்கள் உரிய நேரத்தில் உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
குறிப்பாக துளசி தீர்த்தம் அருந்தி பெருமாளை மனமார பிரார்த்திப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு விரதமும் வழிபாடும் இணையும் பிரபோதினி ஏகாதசி பக்தர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் மன அமைதியையும் வளர்க்கும் நாளாகத் திகழ்கிறது.
இறைவனை நினைத்து மனதைத் தூய்மைப்படுத்தி, அன்பு, பொறுமை, தர்மம் ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள உத்தான ஏகாதசி நமக்கு நினைவூட்டும் ஒரு புனிதமான நாளாகும். ஓம் நமோ நாராயணாய!