திருப்பதி ஏழுமலையான் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கிறது? வியாழன், வெள்ளியின் ரகசிய அலங்காரங்கள்!

திருப்பதியில் பெருமாளின் கண்கள் திறக்கப்படும் வியாழக்கிழமை சேவையின் பின்னணியில் உள்ள அதிசயங்களும் நிஜபாத தரிசன சிறப்புகளும்!
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

உலகிலேயே பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும் .

திருப்பதியில் தினசரி மூலவருக்குச் செய்யப்படும் இயல்பான மலர் மாலைகள் மற்றும் ஆபரண அலங்காரம். நித்யகட்ல சமர்ப்பனா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முக்கிய அலங்காரங்கள் மற்றும் சேவைகள் திருப்பதியில் நடைபெறும்.

திருப்பதி தரிசனம்;

திங்கள் கிழமை - உற்சவ மூர்த்திக்கு 14 கலசங்களைக் கொண்டு சிறப்பு விசேஷ பூஜைகள் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படும்.

செவ்வாய்க்கிழமை - அஷ்டதள பாத பத்மாராதனை எனும் மூலவருக்கு 1008 தங்க தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்படும்.

புதன்கிழமை - போக ஸ்ரீநிவாச மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு 1008 கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். செய்யப்படுகிறது இதனை சஹஸ்ர கலசாபிஷேகம் என்கிறார்கள்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தரிசனங்கள் மிகவும் தனித்துவமான ஆன்மீக சிறப்புகளைக் கொண்டவை. இந்த இரண்டு நாட்களில் பெருமாளின் அலங்காரமும், சடங்குகளும் மற்ற நாட்களை விட முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும்பொழுது அவருடைய கண்களை மட்டும் சரியாக பார்க்க முடியாதபடி நாமம் இட்டு மறைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதற்கான உண்மையான காரணம் ,திருப்பதியில் உள்ள பெருமாளின் கண்களுக்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஏழுமலையானின் கண்களில் இருந்து வரும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சை மனிதர்களால் தாங்க முடியாது என்பதால்தான் திருப்பதி ஏழுமலையானின் கண்கள் நாமம் போட்டு மறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets

ஆனால், வியாழக்கிழமை மட்டும் திருப்பதி பெருமாளின் கண்கள் திறந்திருக்கும். இதற்கான காரணம் என்னவென்றால், வியாழக்கிழமை காலை பெருமாளுக்கு ‘திருப்பாவாடை சேவை’ நடைபெறும். அன்று காலை ஆறு மணிக்கு திருப்பதி ஏழுமலையான் அணிந்திருக்கும் ஆபரணங்களையெல்லாம் களைந்துவிடுவார்கள். பின்பு பெருமாளுக்கு இடப்படும் நாமத்தின் அளவை நன்றாக குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படி செய்வார்கள்.

வெங்கடேச பெருமாளுக்கு எதிராக மலைப்போல புளியோதரையை குவித்து வைப்பார்கள். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள பெருமாளுக்கு நிவேதனமாக படைப்பார்கள். வியாழக்கிழமையின் அபிஷேகத்தின்போது திருப்பதி ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்பது ஐதீகம்.

இதனால் பெருமாளின் காருண்யம் நிறைந்த கண்கள் (நேத்ரம்) முழுமையாகத் தெரியும். வியாழக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானின் கண்களை பக்தர்கள் நன்றாக தரிசனம் செய்ய முடியும். இறைவனின் நேர்க்கண்ணோட்டம் நம் மீது படுவதால், நம் பாவங்கள் விலகி, வாழ்வில் அமைதியும் சுபிட்சமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருப்பாவாடை சேவையின்போது பெருமாளின் முன்பு மலைப்போல புளியோதரையும் இதர இனிப்பு பண்டங்களான பாயசம், லட்டு, ஜிலேபி, அப்பம் மற்றும் தேங்காய், பூ, சந்தனம், குங்குமம், ஆகியவை நைவேத்தியமாக பெருமாளின் முன்பு படைக்கப் பட்டிருக்கும். மந்திரங்கள் ஒலிக்க, ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பெரிய நாமத்தை எடுத்துவிட்டு சிறிதாக நாமம் போடப்படும்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets

இதனால், பெருமாளின் பார்வை நேராக மனிதர்களின் மீது விழாமல் நேராக புளியோதரையின் மீது விழும்படி அமைத்திருப்பார்கள். எனவே அவரின் பார்வையின் வீரியம் குறையும் என்று நம்பப்படுகிறது. புளியோதரை ஒரு திரைப்போல செயல்பட்டு பக்தர்களை காப்பதாக சொல்லப்படுகிறது.அன்று அந்த புளியோதரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாலையில் மூலவருக்குத் தலை முதல் பாதம் வரை வெல்வெட் அங்கி மற்றும் வண்ணமயமான மலர்களால் பூவாங்கி அலங்காரம் செய்யப்படும்.

வெள்ளிக்கிழமை - அதிகாலையில் மூலவருக்குப் புனித நீர், பால், மஞ்சள் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் நடைபெறும்.அபிஷேகத்திற்குப் பிறகு துளசி அலங்காரம் இல்லாமல், இறைவனின் திருப்பதங்களை நேரடியாகத் தரிசிக்கும் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

இங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி தருகிறார் என்பது தெரியுமா? வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் அப்படிக் காட்சி தருகிறார். வியாழக்கிழமை அன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி மந்திர ரூபத்தில் அவரை சங்கரநாராயணர் போல மாற்றுவார்கள்.

இதையும் படியுங்கள்:
கண் குறைபாடு தீர்க்கும் நகரி தேசம்மா கோயில்: பார்வை தரும் அற்புதம்!
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets

அப்போது அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் பெருமாளை தரிசித்துச் சென்ற பின்னர் 'நிஜபாத தரிசனம்' தொடங்கும். அப்போது பெருமாளின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க முடியும்.

மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்கு அடுத்த சில மணி நேரங்களுக்குக் கவசங்கள் இன்றி, பெருமாளின் அசல் திருவடிகளை (நிஜபாதம்) நேரடியாகத் தரிசிக்கலாம். அவரது பாதங்களைச் சரணடைவதே பிறவிப் பிணியை அறுக்கும் வழி என்பதால், இந்த தரிசனம் மிகவும் மகத்தானது.

வெள்ளிக்கிழமை அபிஷேகத்தின்போது, பெருமாளின் மார்பில் உறையும் அலமேலுமங்கை தாயாருக்கும் (மகாலட்சுமி) சேர்த்து அபிஷேகமும், வில்வ இலைகளால் அர்ச்சனையும் செய்யப்படுகிறது. இது செல்வ வளத்தைப் பெருக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
ஈரோட்டில் அமர்ந்த கோலத்தில் அருளும் லட்சுமி நாராயணர்: பிரிந்த தம்பதியரை சேர்க்கும் அதிசயம்!
திருப்பதி தரிசனம் - Tirupati Balaji Secrets

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் சிறப்பு தங்க கிரீடம், லட்சுமி காசு மாலை, மாங்கா மாலை மற்றும் விலைமதிப்பற்ற வைர வைடூரிய ஆபரணங்களுடன் பிரம்மாண்டமான அலங்காரம் பெருமாளுக்கு செய்யப்படும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் குறைவாகவும், நிம்மதியாகவும் தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com