இறைவன் நீக்கமற நிறைந்தவன் அவனின்றி அணுவும் அசையாது. ஆனால் அவனை ஒரு ஆலயத்திற்குள் அடைத்து வைத்தது நம் விருப்பத்தின் பேரில்தான். அவன் பவித்ரமானவன்; அவனை வழிபடும் இடம் புனிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆலயங்களை எழுப்பினோம். அந்த இடம் நமது ஆன்மாவை வசப்படுத்த வேண்டும், அதாவது நம் ஆன்மா அவன் நினைவில் லயிக்க வேண்டும் என்பதற்காக அதற்கு ஆலயம் என்று பெயரிட்டோம்.
அத்தகைய ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு புராண வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
அத்தகைய ஆலயங்கள் தமிழகத்தை தாண்டி ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலும் நிறைந்துள்ளன. அதில் ஒன்று அருள்மிகு பாமாதேவி, ருக்மணிதேவி உடனுறை அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில். கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் ஊரக மாவட்டத்தில் தேவனஹள்ளி நகரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
தேவனபுரம் என்னும் புராணப்பெயரை கொண்ட தேவனஹள்ளி நகரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள பழமைமிகு திருக்கோயில் இது. விஜய நகர அரசு கோல்கொண்டா பீஜப்பூர் சுல்தான்களால் கி.பி.1624ல் கைப்பற்றப்பட்ட பின் முடிவுக்கு வந்தது. அதற்குப் பின் அவருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்த நாயக்கர் வம்சம் தலை எடுத்து. அந்த நாயக்கர் வம்சத்தில் வந்த பல்வேறு மன்னர்களால் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டன. அதில் இதுவும் ஒன்று. கட்டியவர் பெயர் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் நாயக்கர் காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன .
ஆலயம் அமைந்துள்ள பெங்களூரு மாவட்டத்தின் புறநகரான தேவனபுரம் என்னும் தேவனஹள்ளி என்ற ஊர் பெயரின் பொருள் கடவுளின் இருப்பிடம் என்பதாகும். அதற்கேற்ப கடவுளின் இருப்பிடமாகவே ஊரும் ஆலயமும் அமைந்திருப்பது பொருத்தமான ஒன்றாகும்.
இக்கோயிலின் கருவறையில் தேவியர் இருபுறமும் உடனிருக்க, குழல் இசைத்தபடி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி அளிக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன். பெயருக்கேற்ற வடிவம் சாந்தம் அனைவரையும் ஆட்கொள்ளும் சாநித்தியம் அனைத்தும் ஒரு சேர வரப்பெற்றவராக திகழ்கிறார். அவருக்கு தாங்கள் சளைத்தவர்கள் என்பதை பாமாவும் ருக்மணியும் நம்மை பார்வையாலே வசப்படுத்துகின்றனர். சுமார் 500-ஆண்டு காலம் பழமையான திருமேனிகள் என்று கூறுகின்றனர். இவரைத் தவிர பரிவார மூர்த்திகளும் உள்ளனர்.
ஆலயத்தில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் அனைத்தும் அற்புதமாகவும். கலை அம்சம் மிக்கவையாகவும் காட்சியளிக்கின்றன. இத்திருக்கோயிலில், ஏப்ரல் மாதம் நடைபெறும் சைத்ர பூர்ணிமா வழிபாடு வெகு சிறப்பான உற்சவம் ஆகும். பொருத்தமான வாழ்க்கை துணை அமைந்திடவும், தம்பதியரிடையே கருத்தொற்றுமை மேன்மையுறவும் சனிக்கிழமை தோறும் இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப் பெறுகிறது. இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருகின்றனர்.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இவ்வாலயம் உள்ளது.
பெங்களூரு ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தேவனஹள்ளி அமைந்துள்ளது. இவ்வூர் ஒரு புறநகர மாவட்டத்தின் தலைநகராகும். மேலும் பெங்களூரின் ஏர்போர்ட் தேவனஹள்ளி பகுதியில் தான் அமைந்துள்ளது. இதை ஒட்டி ஆலயமும் அமைந்துள்ளது.
ஆலயத்தில் சதா நேரமும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இறைவனை நாடி போக காரணங்கள் வேண்டாம். ஆன்மாவுக்குள் அவனை ஏற்றுக் கொண்டு விட்டால் அவன் இருப்பிடத்திற்கே நம்மை அழைத்துக் கொள்வான்.