

தீபாவளி திருநாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடுகிறார்கள் தீபங்களின் ஒளியாம் இந்த தீபாவளி திருநாளில் எல்லோருமே தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றியும் மற்றும் பளபளக்கும் சிறிய சிறிய மின் விளக்குகளை போட்டும் அலங்கரிக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு பின்னணியாக புராணங்களில் இரண்டு கதைகள் கூறப்படுகின்றன.
இராமர் தன்னுடைய பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு சீதையடன் அயோத்திக்குத் இந்த நன்னாளில் தான் திரும்பியதாக கூறப்படுகிறது. அவர் திரும்பியதும், அயோத்தியில் இருந்த குடிமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகல் விளக்குகளை ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
இதே தீபாவளி திருநாளில்தான் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் சேர்ந்து நரகாசுரனை வதம் செய்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. அவன் அழிந்த சந்தோஷத்தில் மக்கள் விளக்குகளை ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு கதைகளின் அடிப்படையில்தான் நாமும் இன்றளவும் விளக்குகளை ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் இந்த நாளை கொண்டாடுகிறோம்.
பொதுவாகவே, நாம் எல்லோருமே இந்த தீபாவளி திருநாளில், செழிப்பு, வெற்றி மற்றும் நல்வாழ்விற்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, பிள்ளையார் மற்றும் லட்சுமி தேவியை வழிபடுவதுதான் வழக்கம்.
பிள்ளையார் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவார் என்றும், லட்சுமி நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் வழங்குவார் என்றும் எண்ணி மக்கள் இந்த இரண்டு தெய்வங்களையும் வணங்குகிறார்கள்.
இதே நாள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு புத்தாண்டு திருநாளாகவும் கருதப்படுகிறது அவர்கள் அன்று தான் தங்களுடைய புத்தாண்டை கொண்டாடு கிறார்கள். அவர்களும் அன்று மாலை லட்சுமி தேவியைத்தான் வழிபடுவார்கள்.
ஆனால், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்த தீபாவளி பண்டிகை அன்று அவர்கள் காளியை வணங்குகிறார்கள். ஏன், அவர்கள் இந்த தீபாவளி திருநாள் என்று காளியை வணங்குகிறார்கள்?? அதற்கான காரணத்தை இப்பதிவில் பார்க்கலாம்...
இந்த காளி பூஜை பெரும்பாலும் மேற்கு வங்கத்தில் தான் மிக சிரத்தையாகவும் சிறப்பாகவும் கொண்டாடப் படுகிறது.
நவராத்திரி என்கிற துர்கா பூஜைக்குப் பிறகு வங்காள இனத்தவர் கொண்டாடும் மிகப் பெரிய பூஜை இந்த காளி பூஜைதான்.
இந்த காளி பூஜை பண்டிகையானது விரிவான சடங்குகள் மற்றும் மனதைக் கவரும் விழாக்களுடன் கொண்டாடப் படுகிறது.
இந்து புராணங்களின்படி, காளி தேவி, துர்கா தேவியின் உக்கிரமான மற்றும் கருணையுள்ள வடிவமாக கருதப் படுகிறாள். அவள் பெரும்பாலும் கருமையான நிறம் கொண்ட தெய்வமாக, மண்டையோடுகளால் ஆன மாலையை அணிந்து, வாயிலிருந்து நாக்கு வெளியே நீட்டியபடி சித்தரிக்கப்படுகிறாள்.
புராணங்களின்படி, ரக்தபீஜன் என்கிற ஒரு அசுரன் இருந்தான். அவனை யாராவது அழிக்கப்போனால் அவனுடைய உடம்பிலிருந்து தரையில் விழும் தன்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு துளியாலும் தன்னைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளும் திறனை கொண்டிருந்தான். ஆகவே அந்த கொடூரனை அழிக்க யாராலும் முடியவில்லை. அந்த அசுரனை தோற்கடிப்பதற்காகவே, தேவி இதை போன்று ஒரு ரூபத்தை எடுத்தாள். அந்த அசுரனின் பெருக்கத்தைத் தடுப்பதற்காக, தேவி அவனுடைய உடலில் இருந்து வரும் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் அருந்தி, இறுதியில் அந்த அசுரனைத் தோற்கடித்தார்.
தீமையின் மீதான இந்த வெற்றிதான் காளி பூஜையின் போது கொண்டாடப்படுகிறது.
இந்த அசுரனை காளி தோற்கடித்த நாளும் இந்த தீபாவளி அன்றுதான். அமாவசை அன்று இரவு நேரத்தில்தான் அவனை அவள் முழுவதுமாக வதம் செய்தாள். ஆகவே தான் தீபாவளி அன்று இரவு காளிக்கு சிறப்பு பூஜை செய்து ஆராதனை செய்து அவளை வழிபடுகிறார்கள்.
காளியின் உக்கிரமான வடிவத்தை வழிபடுவதன் மூலமாக, நாமும் தீய சக்திகளை வென்று, இறைவனை அடையமுடியும் என்று நம்பப்படுகிறது.