
உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?
மிக மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை : யோக வசிஷ்டம்!
எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள் – மனிதன் ஏன் பிறக்கிறான், எப்படி வாழ்கிறான், ஏன் இறக்கிறான், மறு பிறப்பு உண்டா, உருவ வழிபாடு வேண்டுமா, கர்மா என்பது உண்மையா, சொர்க்கம், நரகம் உள்ளதா, நாம் காணும் உலகியல் இன்பங்கள் உண்மையா, பொய்யா – இப்படி எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள்.
சரியான, அருமையான பதில் இந்த நூலில் கிடைக்கும்.
சுவாமி ராமதீர்த்தர் இந்த நூலைப் பற்றிக் கூறுகையில், “சூரியனுக்குக் கீழ் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அற்புதமான நூல் இது; இதைப் படிப்பவர் கடவுள் அநுபூதியை உணராமல் இப்பூவுலகில் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறுகிறார்.
ஶ்ரீ ராமர் கேட்ட கேள்விகளுக்கு வசிஷ்ட மாமுனி கூறும் பதில்கள் இதில் உள்ளன.
இதை இயற்றியவர் வால்மீகி முனிவர்.
ஒரு லட்சம் சுலோகங்கள் ஆதியில் கொண்டிருந்த சம்ஸ்கிருத நூல் இது. இது பின்னர் 27687 முக்கிய ஸ்லோகங்களைக் கொண்டு யோகவாசிஷ்ட சாரமாகத் தொகுக்கப்பட்டது. இதையும் படிக்க முடியாதவர்களுக்காக 2500 ஸ்லோகங்களில் இதன் சுருக்கம் இப்போது கிடைக்கப் பெறுகிறது.
உலக வாழ்க்கை எப்படிப்பட்டது?
பெரிய ஆமை ஒன்று கடற்கரை ஓரம் இருந்த பாறை ஒன்றில் ஒரு துளையில் புகுந்து கொண்டது. அது தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டும் போது பெரிய அலைகள் அதன் மீது படும். அப்போது சடக்கென்று அது தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அந்த அலை கடலுக்குள் உள்வாங்கிய பிறகு மீண்டும் ஆமை தன் தலையை வெளியே காண்பிக்கிறது.
இப்போது இன்னொரு பெரிய அலை! மீண்டும் தலை துளைக்குள்...!
இது தான் மனித வாழ்க்கை!
வாழ்க்கையில் நுழையும் போது பிரபஞ்ச சாகரம் என்னும் அகண்ட சமுத்திரத்திலிருந்து பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் அவன் சிக்குகிறான்.
ஐம்புலன்களை வைத்துக் கொண்டு அவன் படும் பாடு, சொல்லி முடியாது! ஆமை போல அவன் உலகிலிருந்து வெளியேறும் போது அவனது ஐம்புலன்களும் விடுபடுகிறது. அலைகள் தாம் சந்தோஷம் (அல்லது இன்பம்) மற்றும் துக்கம் (அல்லது துன்பம்).
இன்பம் மறையும் போது துன்பம் தோன்றுகிறது!
இதிலிருந்து விடுபட்டு மெய்யான மெய்யை – உண்மையான உண்மையைக் காண வழி உண்டா?
உண்டு என்கிறது - மர்மங்கள் அனைத்தையும் விளக்கும் யோக வாசிஷ்டம்.
நான்கு வழிகள்!
இந்த உலக இன்ப துன்பங்களைக் கடந்து மெய் ஞானத்தை அடைய நான்கு வழிகள் உண்டு.
சந்தோஷம், சாது சங்கம், விசாரம், சமஸ்தம், அவ்வளவு தான்!
சந்தோஷம்
விஷயங்களில் ஆசையை அகற்றி எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவனிடம் மாபெரும் சக்திகள் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும்.
சாது சங்கம் (நல்லோர் இணக்கம்)
மனதில் இருக்கும் இருளைப் போற்றி அகண்டாகாரமான ஒளியைக் காண்பிப்பர் நல்லோர். இதற்கு ஈடான எதையும் மதச் சடங்குகளாலும், விரதங்களாலும் கூடப் பெற முடியாது.
விசாரம்
நான் யார்? ஏன் இந்த பிறப்பு என்ற தோஷம் என்னை வந்து சேர்ந்தது? தர்க்கரீதியாக இப்படி விசாரம் செய்வது?... அடுத்த வழி!
சமஸ்தம்
அனைத்து உயிர்களையும் நேசித்து நட்புடன் இருப்பது ஆத்மாவைச் சுத்தப்படுத்துவதற்கான வழியாகும். இதுவே சமஸ்தம்!
இதைத்தான் வசிஷ்டர் ராமர் மூலமாக உலகிற்குத் தரும் செய்தியாகச் சொல்கிறார்.
இந்த நான்கு வழிகளையும் மேற்கொண்டால் உலக மர்மங்கள் தானே விடுபடும்! உயர் ஜோதியுடன் ஒன்றாகலாம்!