

ஜென் கோட்பாடு என்பது ஜப்பானியர்களின் வாழ்வியலை ஒட்டி உண்டான வாழ்க்கை அனுபவத்தின் தேடல்..... அதன் மூலம் அவர்கள் கண்டடைந்த ஞானம்.
அதை புரிந்துகொள்ள நமக்கு தேவை ஒரு பயன்பாட்டு மொழி ; அந்த மொழியில் அடையாளங்கள் அழிக்கப்படும் ; மாறாக அனுபவங்கள் சங்கமிக்கும் ; அங்கே காட்சிகள் காட்சிகளாக, தோற்றங்கள் தோற்றங்களாக இருக்கும்.
எளிதாக சொல்ல வேண்டுமானால் உள்ளதை உள்ளபடி காணுதல். அனுபவங்களை அனுபவங்களாக அனுபவித்தல்.
காட்சிகளையும், அனுபவங்களையும் வார்த்தைகளில் விளக்குவது ஜென்.
அகங்காரத்தை அழிக்கும் ஜென் தத்துவம்:
ஜென் ஒரு மெய்ஞான தேடல்: இதன் மூலம் ஒருவன் தன் அறிவுக்கு அப்பால்; சிந்தனைக்கு அப்பால்; தான் காண்பதை , கண்டு உணர்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறான். அதுவாகவே மாறுகிறான்.
இது ஒரு நிலவு ஆகாயத்தில் மிதப்பது போன்றது . இந்த மிதவைதான் அனுபவம்.
அங்கே காண்பவனும் இல்லை;
காணப்படுவதும் இல்லை;
அதுவே பௌத்தம் ;
அதுவே ஞானம் ;
அதுவே மௌனம் ;
அதுவே மொழியற்ற விஞ்ஞானம் ;
அதுவே மெய்ஞானம்.
புத்தரை நாம் எப்படி பார்த்து இருக்கிறோம்?
அமைதியாக, மௌனமாக, நிதானமாக, தியானத்தில் அமர்ந்து கொண்டு... ஆனால் அந்த மௌனத்தின் மூலம் நம்மிடையே புகுந்து ஒரு மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறார் .
அந்த புரட்சியானது வார்த்தைகளுக்கு அப்பால் இருக்கிறது, அர்த்தங்களுக்கு அப்பால் இருக்கிறது, அனுபவங்களை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.....
அங்கே ஐம்புலன்களின் வெளிப்பாடு என்பது உயிர்போடு இருக்கிறது. இயற்கை போற்றப்படுகிறது; அனுபவங்கள் தொகுக்கப்படுகின்றன.
இவ்வாறாக ஜப்பானியர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடைய ஜப்பானிய பயன்பாட்டு மொழியில் உலகத்துக்கு தந்திருக்கிற கொடை தான் ஜென் என்கிற தத்துவ ஞானத் தேடல்.
உதாரணத்திற்கு ஜென் இயற்கையை போற்றுகிறது; இயற்கையை இயற்கையாகவே காண்கிறது; அந்த அனுபவங்களை அனுபவித்து அந்த இயற்கையாகவே மாறுவது.
அப்படியான ஒரு ஜென் கவிதை :-
புல் நிசப்தமாய் அமர்ந்திருக்கிறது,
எதுவும் செய்யாமல்,
வசந்தம் வருகையில்,
தானே வளர்கிறது.
அமைதியே ஜென் கோட்பாடு
மனமே புத்தர்,
விளங்குவது எளிது,
வாழ்ந்து காட்டுவது கடினம்.
ஜென் என்பது ஒரு இயக்கம்:
இந்த இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு தேவை ஒரு மெய்ஞ்ஞானத் தேடல்; அந்த தேடலுக்கு முடிவே கிடையாது; அது அறிவுக்கு கட்டுப்படாது; அது அந்த கணத்தில் இருக்கிறது; செயல்படுகிறது ; அவ்வளவே! அது ஒரு சுயஅனுபவத்தை விட இயற்கையை தன் ஊடகமாக கொள்கிறது . மேகம் ஆகாயத்தில் இல்லை. அது ஒரு நகர்வு. தொடர் இயக்கம்.
உதாரணத்திற்கு...
வேப்ப இலையில் ஊர்ந்து செல்லும் பூச்சி நகரவும் செய்கிறது; அதே சமயம் இலையையும் தின்கிறது.
ஜென் இயற்கை பற்றிய முன் அனுபவங்களை கடந்து, கலைந்து, புதிதாக அந்த இயக்கத்தை பார்த்து அறிய தொடங்குகிறது.
ஜென் என்பது ஒரு குழந்தை போல; ஏற்றுக்கொள்வது எளிதல்ல: அதே நேரத்தில் அது சவாலும் அல்ல.
ஜென் வாசகன் தன் அனுபவத்தில் வயதை இழக்கிறான். ஜென் வாசகன் தன்னைப் பற்றிய சுய பிம்பங்களை நழுவ விடுகிறான். இப்போது அவன் அருகில் ஊறும் எறும்புக்கும் அவனுக்கும் எந்த பேதமும் இல்லை.
ஜென் என்பது ஒரு எல்லையற்ற பிரபஞ்சம்:
ஜென்னில் சமூகப் பிரச்னைகள், சக மனித உறவுகள், உளவியல் சிக்கல்கள் என எதுவும் இல்லை.
அது எல்லையற்ற பிரபஞ்சமும், ஒரே ஒரு மனிதனும் மட்டுமே இருப்பதைப் போலவே சித்தரிக்கப்படுகிறது.
ஜென் எனும் மெய்ஞானம் :
ஜென் தத்துவத்தில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. வீழ்ச்சி, எழுச்சி எதிலும் சமநிலை வகிக்கிறது.
இந்த மெய்ஞான தேடல் என்பது தண்ணீரில் மிதக்கும் நிலவை போன்றது. நிலா நனைவதும் இல்லை. தண்ணீர் உடைவதும் இல்லை.
உயிர்களினுடைய உன்னதம் ஜென். எளிய சொற்கள் இயற்கையுடன் ஒன்றுபட்டு உறவாடி மகிழ்வது.
அது உணர்வுபூர்வமானது.
இதுவே ஜப்பான் உடைய வழி.
ஜப்பானுடைய மொழியினுடைய எதார்த்தம்.
ஜென் வழி நடப்பதன் மூலம் நாம் இயற்கையை நிரந்தரமாக துணையாக காணலாம். அதற்கு நாமும் அப்படியாக மாறவேண்டும்.
இதோ ஒரு சிறு கவிதை:
நள்ளிரவு அலைகள் இல்லை,
காற்றும் இல்லை,
வெற்றுப்படகு மிதந்து கொண்டிருக்கிறது நிலவெளியில்.
இங்கே வெற்றுப்படகு என்பது அடையாளங்களை துறப்பது.
நிலவெளி என்பது பேரின்பத்தின் வெளிப்பாடு.
மெய்ஞானம் புற உலகில் இயக்க சக்திகள் ஒழிந்து போனாலும் ஒரு மிதத்தல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த மிதத்தல் எளிய அனுபவம் இல்லை; மாறாக அது ஒரு பேருண்மை.
உதாரணத்திற்கு ஒரு கவிதை:
நீர்ப்பறவைகள் வருகின்றன போகின்றன;
அதன் சுவடுகள் அழிந்துபோகின்றன;
ஆனால் அவைகள் பாதைகளை
மறப்பதே இல்லை.
இதுதான் Zen.
இதுதான் ஜப்பான் மரபு.