நாம் எல்லோரும் திமிங்கலம் என்றால் பெரிய உருவம் கொண்ட மீன் என்று நினைத்திருக்கிறோம். ஆனால், அதன் உண்மைத் தன்மை சில பேருக்குத்தான் தெரிந்திருக்கும். திமிங்கலம் நீரில் வாழும் பெரிய பாலூட்டி இனத்தைச் சார்ந்தது.
நீலத்திமிங்கலம் உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டி ஆகும். இது ஒரு வெப்ப இரத்தப் பிராணி. மனிதர்களைப் போலவே, இது நுரையீரல்கள் வழியாக சுவாசிக்கிறது. திமிங்கலத்தில் மொத்தம் 75 வகைகள் உள்ளன.
குட்டிகளுக்கு அதன் முலைக்காம்புகள் மூலம் பால் கொடுக்கிறது. தோலின் உள்புறம் உள்ள கொழுப்பு அடுக்குகள், அதன் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
திமிங்கலத்தின் இதயம் மனிதர்களைப் போலவே நான்கு அறைகளைக் கொண்டது. அதன் இதயம் சுமார் 600 கிலோ எடை கொண்டது. ஒரு சிறிய காரைக்கூட அதன் இதயத்தில் நிறுத்தலாம்.
இரைகளைத் தேட கடலின் ஆழமான பகுதிக்குச் செல்லும். இரையைப் பிடிக்க எதிரொலி யுத்தியைப் (echolocation) பயன்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 3,600 கிலோ வரை உணவை உட்கொள்ளும்.
கிரில், சீல், கடல்நாய் போன்ற கடல் உயிரினங்களை உணவாக உட்கொள்ளும். இதன் கண்கள் குதிரையின் கண்களைப் போல் சிறிதாக இருந்தாலும், அதன் பார்வை சக்தி மிக அதிகம்.
தலையின் மேல் பகுதி பெரிய குழாய் போன்று இருக்கும். இதன் வழியாகத்தான் சுவாசம் நடைபெறுகிறது. இவை சுவாசிக்காமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கும். ஸ்பெர்ம் திமிங்கலத்தால் சுமார் 2 மணி நேரம் வரை மூச்சை அடக்க முடியும்.
சுமார் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலங்கள் நிலத்தில்தான் வாழ்ந்தன. கடந்த ஐந்து முதல் பத்து மில்லியன் ஆண்டுகளாகத்தான் அவை நீரில் வாழத் தொடங்கின.
நீலத்திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம் (Orca), சிலம்பு திமிங்கலம் (Humpback whale), மற்றும் பலீன் திமிங்கலம் (Baleen whale) என பல வகைகள் உள்ளன.
இவை பெரும்பாலும் 100 அடி நீளமும் 150 டன் எடையும் கொண்டதாக இருக்கும்.
அதன் உடலில் 20 பீப்பாய் அளவில் எண்ணெய் சத்தும், 100 பீப்பாய் அளவில் கொழுப்பும் இருக்கும். தலையில் மட்டும் ஒரு டன் அளவில் எண்ணெய் பசை இருக்கும்.
அதன் நாக்கு மட்டும் மூன்று டன் எடை கொண்டது. அதன் நாக்கில் சுமார் 50 பேர் அமர்ந்து கொள்ளலாம். அதன் மூக்கின் வழியாக நீரை உறிஞ்சி 30 அடி உயரம் வரை பீச்சி அடிக்கும்.
திமிங்கலத்தின் கொழுப்பு மற்றும் எண்ணெய், வாசனை திரவியங்கள், மெழுகுவர்த்தி, சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், திமிங்கலத்தின் வாந்திதான் அம்பர் கிரீஸ் எனப்படுகிறது. இந்த வாந்தி கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கடலில் மிதக்கும். இது உலர்ந்ததும் வாசனை திரவியமாக மாறும்.
1700களில் சுமார் மூன்று லட்சம் திமிங்கலங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது 25,000 திமிங்கலங்கள் வரை மட்டுமே உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
திமிங்கலங்கள் பெரும்பாலும் தனியாகவோ அல்லது சிறிய கூட்டமாகவோ கடலில் நீந்திச் செல்லும். இத்தகைய தன்மைகள் கொண்ட திமிங்கல இனத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.