

சரஸ் என்றால் நீர், ஒளி ஆகியவை தங்கு தடையின்றி வருவது என்று பொருள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து தோன்றிய சிறப்பு சரஸ்வதிக்கு உண்டு. அட்சரங்கள் எனப்படும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று ஐம்பத்தோரு மணிகள் கொண்ட அட்சர மாலையை தாங்கி தான் மொழி வடிவமானவன் என்பதை கலைவாணி உணர்த்துகிறார். தண்ணீரை நீக்கி பாலை மட்டுமே பருகும் அன்னப்பறவையைப் போல நூல்களைப் படிக்கும் பொழுது தீயவற்றை நீக்கி நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கலைவாணியின் வாகனம் ஆகிய அன்னப்பறவை எடுத்துக்காட்டுகிறது.
கலைவாணியின் கையில் தாங்கி இருக்கும் வீணை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட சிறப்பை உடையது வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு அந்த வீணையை தன் சகோதரியான கலைவாணிக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
குட்டீஸ்களா சரஸ்வதி தேவி எந்தெந்த கோவில்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் என்று தெரிந்து கொள்வோமா?
தமிழ்நாட்டில் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதிக்கு தனி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி அம்பாளின் திருப்பாதங்களை வெளிப்புறம் நீண்டிருக்குமாறு மலரால் நீட்டி விடுவார்கள். அன்று மட்டும் சரஸ்வதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவரும் இந்த பாதங்களுக்கு மலராலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யும் பாக்கியத்தை பெற முடியும். உங்களைப் போன்ற மாணவ மாணவிகள் கூத்தனூரில் சரஸ்வதியை தரிசிக்க சென்றால் பென்சில் பேனா போன்ற எழுதுபொருட்கள் வாங்கி சரஸ்வதியின் கைகளில் வைத்து அதை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என அனைவரும் அவ்வாறு செய்து வழிபடுகிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருவிதாங்கூர் சமஸ்தானம் விளங்கிய பொழுது அந்த சமஸ்தான மன்னர்கள் நவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினார்களாம். பத்மநாபபுரம் அரண்மனையின் ஒரு பகுதியில் நவராத்திரி மண்டபம் கட்டப்பட்டு அதற்கு முன்புறம் சரஸ்வதி கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பத்து நாட்கள் நவராத்திரி பூஜை விமர்சையாக நடைபெறும்.
இந்த விழாவுக்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் குமாரசாமி கோவில் சாமி சிலைகளை ஊர்வலமாக பத்மநாப புரம் அரண்மனைக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் வைத்து நவராத்திரி விழா பூஜைகளை நடத்துகின்றனர்.
பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரள மாநிலத்திற்கு உட்பட்டதாக அமைந்து பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. ஆனாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் குமாரர் கோவில் வேளிமலை முருகன் தமிழகத்தின் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் என மூன்று சாமி சிலைகளும் திருவனந்தபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு தேவார கட்ட சரஸ்வதி அம்மன் மூலவராக கருதப்பட்டு அங்கு நவராத்திரி மண்டபத்தில் பத்து நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நவராத்திரி விழாவில் இறுதி நாளில் வேளிமலை முருகன் பரிவேட்டைக்கு சென்று திரும்பிய பின் மூன்று சாமி சிலைகளும் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய பிரகாரத்தில் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சரஸ்வதி தேவி வீணை இல்லாமல் தரிசனம் அளிக்கிறாள். சரஸ்வதி பூஜையன்று கலைஞர்கள் வீணை மீட்டி இந்த சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி தேவியை முத்துச்சரங்கள், நெற்றிப் பட்டம், கிரீடம், கொலுசு, வளையல்கள் அணிந்த நிலையில் அலங்கார சரஸ்வதியாக தரிசிக்கலாம்.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மா போலவே சரஸ்வதியும் நான்கு தலைகளுடன் வீணை ஏந்திய சரஸ்வதி தேவியாக அருள்பாளிக்கிறாள்.
தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி தேவி மேலிரு கரங்களில் அட்சமாலை சுவடியையும் கீழிரு கரங்களில் அபயமுத்திரை எழுத்தாணியையும் ஏந்தி அருட்கோலம் காட்டுகிறாள்.
சாதாரணமாக சரஸ்வதி தேவி கையில் வீணை ஏந்தி காட்சி தருகிறார். கங்கைகொண்ட சோழபுரம் கோடிக்கா தலங்களில் சரஸ்வதி தேவி கையில் வீணை இல்லாது அருள் பாலிக்கிறார்.
கலைமகள் ஓசையாக வெளிப் படும் போது வாணி என்றும் அறிவாக வெளிப்படும் பொழுது சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். பெருவேளூர் தலத்தில் பிரம்மன் நடுவில் இருக்க இடதுபுறம் சரஸ்வதி யாவும் வலது புறம் வாணியாகவும் அருள்புரியும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம்..
திருநெல்வேலி டவுண் கீழ ரத வீதியில் காந்திமதி அம்மன் கோவில் எதிரில் விஜய சரஸ்வதி கோவில் உள்ளது..
திருநெல்வேலி டவுண் அருள் தரும் காந்திமதி அம்மன் கோயில் உள்ளே உள்ள பொற்றாமரை குளம் எதிரில் சரஸ்வதி தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
குட்டீஸ்களா சரஸ்வதி பூஜையன்று வீட்டில் பூஜையில் உங்களது புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் போன்றவைகளை சரஸ்வதி தேவி படம் முன்பு வைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் பூஜை செய்யும் போது நீங்களும் உட்கார்ந்து சரஸ்வதி தேவி துதிகளை கூறுங்கள்.
உங்களுக்கு சுலபமாக கூறும் வகையில் இதோ மூன்று துதிகள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா
யா குந்தேந்து துஷாரஹாரா தவளா யா
சுப்ர வஸ்த்ராவ்ருதா யா
வீணாவரதண்டமண்டிதகரா
யா பிரம்மாச்யுதா
சங்கரப்ரப்ரப்ருதிபிர்வை:சதா
வந்திதா
சா மாம் பாது சரஸ்வதி
பகவதீ
நிஃஷேசஜாட்யாபஹா
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்
இந்த துதிகளை மனமுருகி கூறி நன்றாக படித்து வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு மாலையில் சரஸ்வதி தேவி அருள் பாலிக்கும் கோவில்களுக்கு சென்று வணங்குங்கள்.
ஹாய் குட்டீஸ்களா சரஸ்வதி பூஜையன்று இப்படி செய்து சந்தோஷமாக கொண்டாடுங்கள்..