குட்டீஸ்களா! நவராத்திரி பிறந்த கதையைப் பார்ப்போமா! 

நவராத்திரி பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது? மகிஷாசுர வதம் மற்றும் முப்பெரும் தேவியரின் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
நவராத்திரி | Navaratri
நவராத்திரி | NavaratriImage credit: Gemini AI
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

நவராத்திரி என்று சொல்கிறார்களே அது எப்படி வந்தது என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு தான் இந்த தகவல்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் பத்தாவது தினத்தையும் சேர்த்து தசரா என்று கூறுவோம். ஒன்பது நாட்களிலும் சக்தி வழிபாடு செய்த பின்பு பத்தாவது நாளில் வசதி படைத்தவர்களும் பெரும் செல்வந்தர்களும் கலைஞர்களை கௌரவிப்பார்கள் இந்த பத்தாம்நாளே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகா வரம் பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும் காளிகா என்கிற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும் தேவியின் வடிவமான அஷ்டமாதர்களும் அஷ்ட ராத்திரிகளாக தோன்றினார்.

பிரம்மாணி என்ற பிரம்மசக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை கமண்டலத்துடனும், வைஷ்ணவி என்ற விஷ்ணு சக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கௌமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும், மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயத்துடனும், வாராகி என்ற வாராஹியுடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எமவாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்ஹி என்ற நரசிம்மரின் சக்தி கூறிய நகத்தை ஆயுதமாகக் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா! நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
நவராத்திரி | Navaratri

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர். இந்த ராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும் நவராத்திரி தேவதைகளையும் போற்றித் துதித்தனர். இந்த வைபமும் நவராத்திரி எனப்படுகிறது. இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இன்னொரு கதை ஒரு காலத்தில் மகிஷன் என்ற அசுரன் அசுரர்களுக்கு தலைவனாக இருந்தான். அவன் அசுரேந்திரன் என்று அழைக்கப்பட்டான்.

தேவர்களுக்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும் என்று மகிஷன் பேராசைப்பட்டு தேவர்களுடன் போரிட்டான். இந்த மகிஷாசுரனை அடக்கி வெற்றி கொள்ள துர்க்காதேவி போரிட்டாள். மகிஷன் எருமை உருவில் இருந்து சிங்க உருவில் தோன்றினான்.

நவராத்திரி | Navaratri
நவராத்திரி | NavaratriImage credit: Gemini AI

தேவியின் சிங்க வாகனத்துடன் இந்த அசுரச் சிங்கம் சண்டைக்கு புறப்பட்டது. தேவி சிங்கத்தின் தலையை வெட்ட முற்படும்போது அசுரன் வாளும் கையுமாக மனித உருவில் மாறினான். தேவி அவனைக் கொல்ல  முயன்றதும் அசுரன் யானையாக மாறி துதிக்கையால் தேவியின் சிங்க வாகனத்தை இழுக்க ஆரம்பித்தார். அந்த துதிக்கையை தேவி கத்தியால் வெட்டி தள்ளினாள். உடனே மகிஷாசுரன் பழையபடி எருமையாக மாற திடீரென தேவி அந்த எருமை மேல் குதித்து ஏறி தன் காலால் கழுத்தில் மிதித்து சூலாயத்தால் ஓங்கி அடித்தாள்.

இந்த சூழ்நிலையில் மகிஷாசுரன் தனது நிஜமான அசுர உருவில் வெளிப்பட்டு போரை தொடர்ந்து நடத்த விரும்பினான். ஆனால் தேவியின் பெரிய வாள் அசுரனை வெட்டி வீழ்த்தியது. மகிஷாசுர வதம் செய்த துர்கா தேவியை மக்கள் மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள்.

துர்கா தேவி மகிஷாசுரனை அழிக்கும் போது விரதம் இருந்த தினங்களை நவராத்திரி என்றும் அசுரனை வென்ற தினம் விஜயதசமி என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பதாவது நாளை மகா நவமி என்கிறோம். வெற்றியை அளிக்க போகும் அந்த ஆயுதங்களை தேவி அன்று வைத்து பூஜை செய்ததால் மகாநவமி ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.

கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி, தண்ணீர் அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்வி, செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களே! வீட்டைச் சுற்றும் கிளிகள் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கா?
நவராத்திரி | Navaratri

அதனால் நவராத்திரி ஒன்பது நாட்களும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் போற்றி வணங்கி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடி நவராத்திரியை சிறப்பிக்கிறோம்.

நவராத்திரி பிறந்த கதை இதுதான். சரஸ்வதி பூஜையன்று நீங்கள் படிக்கும் புத்தகங்களுக்கு குங்குமம் வைத்து சரஸ்வதி படத்தின் முன் வைத்து பூஜை செய்வார்கள் பெரியோர்கள்.

பூஜையில் புத்தகங்கள் முக்கியமாக இடம் பெற வேண்டும்; மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களையும் பேனா போன்றவற்றையும் பூஜையில் வைக்க வேண்டும்.

சரஸ்வதிக்கு பூஜை செய்யும் பொழுது அந்த புத்தகங்கள் சரஸ்வதி முன் இடம் பெற வேண்டும். மறுநாள் விஜய தசமி அன்று காலையில் மீண்டும் பூஜை செய்து சரஸ்வதி தேவியை வணங்கி விட்டு புத்தகங்களை எடுத்து படித்து எழுதி சரஸ்வதியின் பேரருளை பெறுங்கள். கல்வியில் சிறந்து விளங்கி எதிர் காலத்தில் சிறந்த கல்வியாளராக வருவதற்கு சரஸ்வதியின் பேரருள் கிடைக்கும். நவராத்திரி பற்றி தெரிந்து கொண்டீர்கள் தானே! நவராத்திரியை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள் குட்டீஸ்களா!

logo
Kalki Online
kalkionline.com