யானையின் எடை எவ்வளவு?

The Clever Boy and the King's Elephant
The Clever Boy and the King's ElephantAI Image
Published on

ஒரு நாட்டின் அரசருக்குத் திடீரென்று தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்ற சந்தேகம் தோன்றியது. "யானையின் எடையை எவ்வாறு தெரிந்துகொள்வது?" என்று அவர் அமைச்சரிடம் கேட்டார். அந்த எடையைச் சரியாகக் கணித்துச் சொல்பவருக்குப் பெரும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், யாருக்கும் அதற்கான சரியான விடை தெரியவில்லை.

அப்போது அங்கிருந்த அமைச்சரின் மகன், "நான் யானையின் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்!" என்று கூறினான். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். இருப்பினும், அந்தச் சிறுவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்தச் சிறுவன் யானையை அங்கிருந்த நதிக்கு அழைத்துச் சென்றான். நதிக்கரையோரம் இருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை படகில் ஏறியதும், படகு தண்ணீரில் எவ்வளவு தூரம் அமிழ்ந்ததோ, அந்த மட்டத்தைப் படகில் ஒரு குறியீடாகக் குறித்து வைத்தான்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா! கண் சிமிட்டுதல் பற்றி அறிவோமா?
The Clever Boy and the King's Elephant

பிறகு யானையைப் படகிலிருந்து இறக்கிவிட்டு விட்டு, பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். தான் குறித்து வைத்திருந்த குறியீடு வரை படகு தண்ணீரில் மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டன.

இப்போது சிறுவன் அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, "மன்னா, இந்தப் படகில் உள்ள கற்களின் எடைதான் யானையின் மிகச்சரியான எடை!" என்று கூறினான்.

அங்கிருந்த அனைவரும் சிறுவனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தனர். அரசரும் தனது கேள்விக்குச் சரியான விடை கிடைத்ததால், சிறுவனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com