

ஹலோ குட்டீஸ், உங்களுக்குப் பிடித்த சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட மிகவும் பிடிக்கும் இல்லையா? அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்த டேஸ்டியான உணவுகளில் ஒரு பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது தெரியுமா?
நாம் இது போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு, நம் பற்களுக்குள் குட்டி குட்டி உணவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்தத் துகள்களைச் சாப்பிட, கண்ணுக்குத் தெரியாத குட்டி கிருமிகள் (Bacteria) நம் வாய்க்குள் காத்திருக்கும். இந்தக் கிருமிகள் சர்க்கரை உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, ஒருவிதமான ஆசிட்டை (Acid) வெளியேற்றும். இந்த ஆசிட் தான் நம் பல்லில் இருக்கின்ற கடினமான வெள்ளை அடுக்கை (Enamel) கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, பல்லில் கருப்பு ஓட்டையை (Cavity) உண்டாக்கும்.
ஓட்டை விழுந்தா என்னாகும்? வலிக்கும்! அதன்பிறகு ஸ்கூல் லீவ் போட்டுவிட்டு, டென்டிஸ்ட் அங்கிள் கிட்ட போக வேண்டி வரும். அப்படி நம் பல்லில் ஓட்டை விழாமல் பாதுகாக்க சில சூப்பர் டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பல்லில் ஓட்டை விழாமல் தடுப்பது மிகவும் ஈஸி. எப்படித் தெரியுமா?
1. காலை, இரவு இருமுறை பல் துலக்குங்கள் (Brushing): காலையில் எழுந்ததும் பல் துலக்குவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், இரவில் தூங்கப் செல்வதற்கு முன் பல் துலக்குவைதுதான் மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா? இரவு முழுவதும் அந்தக் கிருமிகள் வேலை செய்யாமல் இருக்க, பல் துலக்குவது அவசியம். குறைந்தது இரண்டு நிமிடங்கள் வட்ட வடிவில், பற்களின் எல்லாப் பக்கங்களையும் தேய்க்க வேண்டும். வேகமாக தேய்க்க வேண்டாம்; மெதுவாக சுத்தம் செய்தால் போதும்.
2. நிறைய தண்ணீர் குடியுங்கள்: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், பற்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் உணவுத் துகள்கள் கழுவப்பட்டுவிடும். உங்கள் வாயில் எச்சில் (Saliva) நிறைய சுரந்தால், அதுவே ஆசிட்டின் சக்தியை குறைத்துவிடும்.
3. சாக்லேட், ஜூஸ், மிட்டாய் இதையெல்லாம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்றாக கொப்பளியுங்கள். பழங்கள் (ஆப்பிள், கொய்யா) மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது உங்கள் பற்களுக்கு மிகவும் நல்லது.
4. வருடத்துக்கு ஒரு தடவையாவது டென்டிஸ்ட்-யிடம் போய் உங்கள் பற்களை செக் செய்துகொள்ளுங்கள். அவர்கள் குட்டி டிப்ஸ் கொடுத்து, பற்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுவார்கள்.
இந்தக் குட்டிக் குட்டி விஷயங்களைச் செய்தால் போதும். உங்கள் பற்கள் எப்போதும் ஜொலிக்கும். புரியுதா குட்டீஸ்..?