செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 8!

வல்லினம் மிகா இடங்கள்!
Tamil grammer
Tamil grammerImage credit: AI Image
Updated on
இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 7!
Tamil grammer

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த கோமதியிடம் பார்வதி,  “இன்றைக்கு வீட்டுப்பாடம் என்னடி கொடுத்தாங்க?” என்று கேட்டாள்.

“அம்மா, தமிழில் வல்லினம் மிகா இடங்களைப் படித்து வரச் சொன்னாங்க!

“நீங்களாம், எப்படி மா தமிழ் படிச்சு இப்படி தமிழ் டீச்சரா இருக்கீங்கம்மா? இலக்கணம் எனக்கு புரியவே மாட்டேங்குது”

“ஒன்னும் கவலைப்படாத கோமதி! நான் உனக்கு சொல்லித் தரேன். நல்லா புரிஞ்சுக்கோ. வல்லினம் மிகா இடங்கள் ரொம்ப எளிமையானது தான். அதை நீ புரிந்து கொண்டால்  நீ தமிழ்ல எழுதும் போது எந்த ஒரு பிழையுமே இருக்காது. உனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்”.

“சரிங்கம்மா வல்லின மிகா இடங்களைப் பற்றி எனக்கு சொல்லிதாங்க!”

“நான் சொல்வதை எழுது கோமதி!”

“வாழ்க்கையில் நான் ஒழுக்கத்தை கடைப்பிடித்தேன்”

“நீ எழுதி இருப்பதில் ஒரு பிழை இருக்கிறது கோமதி. உனக்கு அந்த பிழை தெரிகிறதா?”

“இல்லை அம்மா!”

“வாழ்க்கையில் நான் ஒழுக்கத்தை கடைபிடித்தேன்” என்று எழுத வேண்டும்.

கடைபிடி - ஏதாவது ஒரு செயலை நாம் பின்பற்றுதல் (கடைபிடித்தல்) இந்த இடத்தில் வல்லின எழுத்து மிகாது. 

கடைப்பிடி - என்பது ஒரு கடையை விடாமல் பிடித்துக் கொள்ளுதல் என்ற பொருள்படுகிறது. 

ஆகையால் வல்லெழுத்துக்கள் எந்த இடங்களில் மிகாமல் இருக்க வேண்டுமோ அவற்றை மிகாமல் எழுதினால் பொருளில் வேறுபாடு இருக்காது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்." 

“இப்போது அருமையாக புரிந்து விட்டதம்மா!”

வல்லினம் மிகா இடங்கள்:

  • அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. எ.கா: அது செய், இது காண்

  • ​வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. எ.கா: எது கண்டாய்? எவை தவறுகள்?

  • ​எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: குதிரை தாண்டியது, கிளி பேசும்.

  • மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. எ.கா: அண்ணனோடு போ, எனது சட்டை.

  • ​விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. எ.கா: தந்தையே..! பாருங்கள், மகளே தா.

  • ​பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. எ.கா: வந்த சிரிப்பு, பார்த்த பையன்.

  • இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: நாடு கண்டான், கூடு கட்டு.

  • ​படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. எ.கா: வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார்.

  • வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: வாழ்க தமிழ்!, வருக தலைவா!.

  • வினைத்தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்.

  • எட்டு, பத்து தவிர பிற எண்ணுப்பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது. எ.கா: ஒரு புத்தகம், மூன்று கோடி.

  • உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: தாய்தந்தை, இரவுபகல்.

  • அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. எ.கா: அன்று சொன்னார்,   என்று தருவார்?, அவராவது, தருவதாவது,  யாரடா சொல், ஏனடி செல்கிறாய்?, கம்பரைப் போன்ற கவிஞர் யார்?.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 6!
Tamil grammer
  • அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. எ.கா: அவ்வளவு பெரியது, அத்தனை சிறியது, அவ்வாறு பேசினான், அத்தகைய பாடல்கள், அப்போதைய பேச்சு, அப்படிப்பட்ட காட்சி, நேற்றைய சண்டை.

  • மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. எ.கா: என்னோடு சேர், மரத்திலிருந்து பறி, குரங்கினது குட்டி.

  • இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. எ.கா: தமிழ் படி (ஐ), கை தட்டு (ஆல்), வீடு சென்றாள் (கு), கரை பாய்ந்தான் (இருந்து).

  • நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: தலைவி கூற்று, தொண்டர் படை.

  • சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. எ.கா: உறு பொருள், நனி தின்றான், கடி காவல்.

  • அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. எ.கா: பார் பார், சலசல.

  • 'கள்' என்னும் அஃறினைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. எ.கா: கருத்துகள், பொருள்கள், வாழ்த்துகள்.

  • ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. எ.கா: பைகள், கைகள்.

“வல்லினம் மிகா இடங்கள் அதிகமாக இருந்தாலும், எனக்கு நீங்கள் எளிமையாகச் சுருங்கச் சொல்லி விளங்க செய்து விட்டீர்கள் அம்மா. இதனை நான் என் வகுப்பறையில் என்னுடைய தோழிகளுக்கு கற்றுத் தருவேன். இனிமேல் நான் வல்லினம் மிகா இடங்களை என்னுடைய எழுத்து நடையில் பயன்படுத்தி தமிழ் மொழியை பிழை இல்லாமல் எழுதுவேன்.”

இன்று உறுதி கோமதியின் மனதில் வந்து விட்டது. பார்வதிக்கு ஒரே மகிழ்ச்சிதான். இலக்கணம் எல்லாருக்கும் இனிக்கத்தானே செய்யும். இனிப்பை எல்லோருக்கும் பகிர்ந்து தானே நாம் கொடுக்க முடியும். அப்படித்தான் கோமதியும் தன்னுடைய வகுப்பு தோழிகளுக்கு தான் படித்த இலக்கணத்தை கொடுக்கப் போகிறாள் என்பது திண்ணம்.

logo
Kalki Online
kalkionline.com