

அன்று முதல்பாடவேளை தமிழ் வகுப்பு.
எல்லா மாணவர்களும் தமிழ் புத்தகத்தோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ரேவதி அம்மா வகுப்பறைக்குள் நுழைந்தார். அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று,
“காலை வணக்கம் அம்மா!”
“வணக்கம்! மாணவர்களை எல்லோரும் அமருங்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய என்னுடைய செம்மார்ந்த வாழ்த்துகள்! மொழி என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?”
“அம்மா மொழி என்பது தமிழ் மொழி, ஆங்கில மொழி, ஹிந்தி மொழி என்று பலவகையான மொழிகள் உள்ளன அம்மா!”
“அருமை செல்வி! செல்விக்கு எல்லோரும் கைகளைத் தட்டுங்கள்!”
“மொழி என்பது இஃது ஒரு வகையான பொருளாகும்.”
“மொழி என்பதற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. அதற்குப் பெயர் தான் சொல்".
“இன்று நாம் பார்க்க போகிற பாடம் மொழி முதல் எழுத்துகள். சொல்லுக்கு முதலில் வரக்கூடிய எழுத்துகளைப் பற்றி தான் நாம் இன்று படிக்கப் போகிறோம் மாணவர்களே. எல்லோரும் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளீர்களா?”
“ஆம் அம்மா!”
"உயிரெழுத்து பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும். பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள் மாணவர்களே!
அம்மா, ஆடல், இரவு, ஈகை, உதவி, ஊஞ்சல், எழுத்து, ஏக்கம், ஐந்திணை, ஒட்டகம், ஓலை, ஔவை.
உயிர்மெய் எழுத்துகளுள் பின்வரும் வரிசையிலுள்ள எழுத்துகள் மொழிக்கு முதலாகும்.
க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ ஆகிய பத்து எழுத்தும் மொழி முதலாகும்.
இவற்றுள், முதல் ஆறு எழுத்து, அதன் வரிசையுடன் பன்னிரண்டாகும்.
இறுதியிலுள்ள நான்கு எழுத்துக்குரிய வரிசையில் வகர எழுத்தில் எட்டும், யகர எழுத்தில் ஆறும், ஞகர எழுத்தில் நான்கும் ஙகர எழுத்தில் ஒன்றும் மொழிக்கு முதலில் வரும்.
க வரிசை - (12) - கடல், காற்று, கிளை, கீற்று, குடம், கூட்டல், கெடு, கேள், கைவேலை, கொடி, கோட்டை, கெளளி.
ங வரிசை - (1) - ஙப்போல் வளை (ஆத்திசூடி) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம் என அக்காலத்தில் வழக்கில் இருந்தன. 'ஙனம்' என்பது, இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாகும்.
இக்காலத்தில் 'ங' எழுத்து மொழிமுதல் பயன்பாட்டில் இல்லை. எனவே, ங வரிசையில் எந்தச் சொல்லும் இக்காலத்தில் தொடங்குவதில்லை.
'ச' வரிசை (12) - சட்டம், சார்பு, சினம், சீற்றம், சுக்கு, சூடு, செந்தமிழ், சேர்த்தல், சைகை, சொத்து, சோளம், செளக்கியம்
'ஞ' வரிசை - (4) - ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிறது. இக்காலத்தில் ஞெ, ஞொ ஆகிய இரண்டும் வழக்கில் இல்லை.
'த' வரிசை - (12) - தம்பி, தாய், திண்ணை, தீ, துன்பம், தூக்கம், தெய்வம், தேங்காய், தையல், தொழில், தோகை, தௌவல்.
'ந' வரிசை - (12) - நன்மை, நாடு, நிழல், நீளம், நுகத்தடி, நூல், நெல், நேற்று, நைதல், நொச்சி, நோய், நௌவி.
'ப' வரிசை (12) - பள்ளி, பாடம், பிள்ளை, பீர்க்கங்காய், புன்னை, பூமாலை, பெண், பேழை, பைந்தமிழ், பொன், போக்கு, பௌவம்.
'ம' வரிசை - 12) - மலர், மான், மிகை, மீன், முள், மூன்று, மென்மை, மேல், மைவிழி, மொழி, மோப்பம், மௌவல்.
'ய' வரிசை - (6) - யவனர், யானை, யுகம், யூகம், யோசி, யௌவனம்.
'வ' வரிசை - (8) - வண்டி, வாலி, வில், வீடு, வெட்சி, வேலை, வைகை, வெளவால்.
மேற்கூறிய தடித்த எழுத்துகள், ஒரு சொல்லுக்கு முதலில் வருகின்றன. அவையன்றி, பிறமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும்போது, அவற்றின் ஒலிக்கேற்ப, இம்முதல் எழுத்துகளில் தொடங்குவதும் உண்டு.
எடுத்துக்காட்டாக, அநியாயம் (வடசொல்), ஆப்பிள் (ஆங்கிலச்சொல்).
பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் கவனியுங்கள். பிறமொழிச் சொற்களுள் சில, தமிழில் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஒலிக்கப்படுகின்றன. அவை, தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டாலும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அத்தகைய சொற்கள் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளில் தொடங்கும் சொற்களாகவும் உள்ளன.
எடுத்துக்காட்டாக, லட்டு, ரம்பம், ரப்பர், ரவை, டப்பா, லண்டன், லுங்கி, ரொட்டி, ரிட்ஷா, ஜாங்கிரி, ஜிலேபி, ஐஸ்கிரீம், லாபம் போன்று வரும் சொற்களுக்கு முன்னால், இகரம் சேர்த்து 'இலாபம்' என எழுதுவதுண்டு.
மேலும், ராமாயணம் – இராமாயணம், லோகம் – உலோகம், ரங்கன் – அரங்கன் என லகர, ரகர எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால், அ, இ, உ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி எழுதுவர்.
இக்காலத்தில் எல்லாச் சொற்களுக்கும் இது பொருந்தவில்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான 'ரப்பர்' என்பதை, 'இரப்பர்' என எழுதினாலோ பேசினாலோ அதன் உண்மையான பொருள் (Rubber) என்பது அறியப்படாமல், 'யாசிப்பவர்' எனப் பொருளைத் தந்துவிடும். இதனால், பெரும்பாலும், லகர, ரகர எழுத்தில் தொடங்கும் சொற்கள் அந்தந்த எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளன.
மேற்கண்டவாறு நீங்கள் ஒரு சொல்லை எழுதும்போது அதற்கு முன்பு எந்தச் சொல் வரும் என்பதை அறிந்து புரிந்து கொண்டு எழுதினால், இந்த மொழி முதல் எழுத்துகள் உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் மாணவர்களே. மொழிக்கு முதலில் வர வேண்டிய எழுத்துக்குப் பதிலாக மொழிக்கு முதலில் வராத எழுத்துக்களை நீங்கள் எழுதினால் அதனுடைய பொருள் முற்றிலும் வேறுபட்டு விடும்.
ஆகையால் மொழி முதல் எழுத்துகளை நீங்கள் நன்றாகக் கற்று எழுதினீர்கள். ஆனால் தமிழ் பாடம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். எழுத்துப் பிழைகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு இது உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் மாணவர்களே!”
“கண்டிப்பாக படிப்போம் அம்மா!”
“அருமை மாணவர்களே! நாளை மற்றொரு இலக்கணப் பாடத்தோடு உங்களை அடுத்த வகுப்பில் சந்திக்கிறேன் மாணவர்களே”
“நன்றி அம்மா!”