

இந்தப் பாடத்தில் ‘போலி’ என்ற இலக்கணத் தலைப்பு அறிமுகமாகிறது. அறம்–அறன் போன்ற சொற்கள் மூலம் எழுத்து மாறினாலும் பொருள் மாறாத தன்மை கூறப்படுகிறது. முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி, முற்றுப்போலி என நான்கு வகைகள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன. தொல்காப்பியர் கூறிய இந்த இலக்கணம் வாழ்க்கை உதாரணங்களுடன் எளிமையாக சொல்லப்படுகிறது.
ரேவதி அம்மா வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். எல்லா மாணவர்களும் எழுந்து வணக்கத்தை கூறினார்கள்.
“எல்லோரும் நல்லா இருக்கீங்களா பிள்ளைங்களா?"
“நல்லா இருக்கோம் அம்மா!”
“நீங்கள் அரையாண்டு பரிச்சை முடிஞ்சு இப்பதான் பள்ளிக்கூடத்துக்கு வந்து இருக்கீங்க; ரொம்ப சந்தோஷம்! உங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்"
"ஒரு கேள்வி கேட்கிறேன் எல்லோரும் பதில் தெரிந்தால் சொல்லுங்க?"
“கேளுங்கள் அம்மா!”
“போலி என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“அம்மா! அரையாண்டு லீவுக்கு எங்க பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க எனக்குப் போலி செஞ்சு கொடுத்தாங்க ரொம்ப ருசியா இருந்துச்சு….”
"மாணிக்கம் சாப்பிடறதுலயே இரு! பரவாயில்லை! இது சாப்பிடக்கூடிய ஒரு வகையான போலி வேற ஏதாவது பதில் இருக்கா உங்கக்கிட்ட?”
“அம்மா நேற்று ஒரு செய்தி. அதில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் செய்த போலி டாக்டர் கைது என்ற செய்தியை நான் படித்தேன் அம்மா”
“அருமை! இலட்சுமி பாடத்திற்குள் வந்து விட்டாய்! எல்லோரும் இலட்சுமிக்கு கைகளைத் தட்டுங்கள்!”
“நன்றி அம்மா!”
“போலி என்பது என்னவென்றால் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், அவை கிடையாது அதற்கு பெயர் தான் போலி. இவ்வாறு சொற்களிலும் போலி இருக்கின்றன. அவற்றைப் பற்றி தான் நாம் இன்று படிக்கப் போகிறோம் வாருங்கள் மாணவர்களே!”
அறம் செய்ய விரும்பு- இஃது ஔவையார் வாக்கு.
அறன் வலியுறுத்தல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று.
இத்தொடர்களில் அறம், அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது.
ஆனால் பொருள் மாறுபடவில்லை.
இவ்வாறு சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.
போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது. போலி மூன்று வகைப்படும்.
1. முதற்போலி
2. இடைப்போலி
3. கடைப்போலி
1. முதற்போலி:
பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல்- மையல் ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.
2. இடைப்போலி:
அமைச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர்- அரையர் ஆகிய சொற்களில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
3. கடைப்போலி:
அகம்- அகன், நிலம்- நிலன், முகம் – முகன், பந்தல்- பந்தர், சாம்பல்- சாம்பர் ஆகிய சொற்களில் இறுதியில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை.
இவ்வாறு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும்.
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரமும் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.
முற்றுப்போலி:
மூவகை போலிகள் மட்டுமன்றி வேறு ஒரு வகைப் போலியும் உண்டு. ஐந்து- அஞ்சு இச்சொற்களை நோக்குங்கள். இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும். அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது.
இவ்வாறு ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
வாழ்க்கையிலும் போலியான மனிதர்கள் இருப்பார்கள். இனிப்பான போலியும் இருக்கும். அதைப் போலத்தான் இலக்கணத்திலும் “போலி” என்ற ஒரு தலைப்பில் இப்படிச் சிறப்பான ஓர் இலக்கணத்தை நம்முடைய தொல்காப்பியர் நமக்கு கொடுத்துள்ளார்.
இப்படி எழுத்துகளில் உள்ள போலியை நாம் எளிமையாக கண்டுபிடித்து எழுதினால் நம்முடைய எழுத்துச் சிறக்கும். இலக்கணம் என்றுமே இனிக்கும் மாணவர்களே! நாளை அடுத்த ஒரு பாட வேளையில் மற்றொரு பாடத்துடன் மீண்டும் சந்திப்போம்
சென்று வருகிறேன்……
தமிழ் இலக்கணத்தின் நுணுக்கங்களை எளிய முறையில் புரிந்துகொள்வதன் மூலம், எழுத்துகளில் ஏற்படும் பிழைகளைத் தவிர்த்து, உங்கள் எழுத்துத் திறனைத் துல்லியமாகவும் அழகாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.