

தமிழாசிரியர் குமார் ஐயா வகுப்பில் ‘வழக்கு’ என்ற இலக்கணப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக விளக்குகிறார். வழக்கு என்பது பேசும், எழுதும் மொழியில் சொற்கள் பயன்படுத்தும் முறையென கூறி, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகை என்றும், அவற்றின் கீழ் இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி போன்ற வகைகளை உதாரணங்களுடன் கற்பிக்கிறார்.
தமிழாசிரியர் குமார் ஐயா, வகுப்பறைக்குள் நுழைந்தார். அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்கள்.
“வணக்கம் ஐயா!”
“அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய என்னுடைய செம்மார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்”
“நன்றி ஐயா!”
“போன வகுப்பில்பெயர்ச்சொற்களைப் பற்றி நன்றாகக் கற்றுக் கொண்டீர்கள். வகுப்பில் என்ன பாடம் நடத்தப் போகிறேன் என நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்!”
“ஆமாம் ஐயா! வழக்கு என்று ஒரு பாடம் நம்முடைய புத்தகத்தில் இருக்கிறது ஐயா!”
“அருமை! அருமை! அதே பாடம்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். மாணவர்களே!”
“வழக்கு என்றால் என்ன யாராவது சொல்ல முடியுமா?”
“ஐயா! நான் இன்றைய நாளிதழில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் படித்தேன்”
“அருமை மாயாண்டி! எல்லோரும் கைகளை தட்டுங்கள். இஃது ஒரு வகையான வழக்கு. ஏதாவது தவறு செய்தவர்கள் மீது நாம் கொடுக்கும் புகார் வழக்கு என்று சொல்லலாம்.
இதைப் போல எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
இயல்பு வழக்கு
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
1. இலக்கணமுடையது:
நிலம், மரம், வான், எழுது - ஆகிய சொற்களை நோக்குங்கள். இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
2. இலக்கணப்போலி:
இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னோர் முன்றில் என மாற்றி வழங்கினர். கிளையின் நுனியைச் கிளைநுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை, கடைக்கண், நடுவூர்.
வாயில் - வாசல்
இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப்போலியாகும்.
3. மரூஉ:
நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.) கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு, சைதாப்பேட்டை - சைதை. மயிலாப்பூர் - மயிலை.
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.
தகுதி வழக்கு:
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல்
மங்கலம்
குழுஉக்குறி
1. இடக்கரடக்கல்:
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.)
கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது.
ஒன்றுக்குப் போய் வந்தேன்.
2. மங்கலம்:
செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பிட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா.)
கடித்தால் உடனே இறப்பு வரும். அத்தகைய கொடிய பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம்.
ஓலை - திருமுகம்
கறுப்பு ஆடு - வெள்ளாடு
விளக்கை அணை - விளக்கைக் குளிரவை
சுடுகாடு - நன்காடு
3. குழுஉக்குறி:
பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழுஉக்குறி எனப்படும்.
(எ.கா.):
மாணவர்கள் குள்ளமாக இருக்கும் ஆசிரியருக்கு ‘அகத்தியர்’ எனப் பெயர் வைப்பர். 'அகத்தியர் வருகிறார்' என்றால் அவர் எந்த ஆசிரியை என்பது அந்த மாணவர்களுக்கு மட்டும் விளங்கும்
பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
இன்று நடத்திய ‘வழக்கு’ என்ற பாடம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறாக வாழ்க்கையில் பேசக்கூடிய மங்களம், இடக்கரடக்கல், இலக்கணப்போலி, மரூஉ, குழூஉக்குறி எல்லாம் நமக்குத் தெரிந்தது மட்டுமே அவற்றை நாம் விரிவாகப் படித்தால் இலக்கணம் நமக்கு எளிதாக இருக்கும். நாளை மீண்டும் நல்லதொரு இலக்கணப் பாடத்தோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி மாணவர்களே."
"நன்றி ஐயா"
அன்றாடப் பேச்சு மற்றும் எழுத்தில் நாம் பயன்படுத்தும் சொற்களின் உண்மையான வேர்களை அறிந்துகொள்வதன் மூலம், தமிழ் மொழியின் மீது புதிய பிடிப்பும், துல்லியமான மொழி ஆளுமையும் உங்களுக்குக் கை கூடிவரும்.