குட்டீஸ்களா! நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பது எப்படி என உங்களுக்கு தெரியுமா?

நவராத்திரி கொலு பொம்மைகளை ஒன்பது படிகளில் எப்படி வைப்பது, அதன் ஆன்மீக தத்துவம் மற்றும் மண் பொம்மைகளின் சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கொலு பொம்மைகள் | Navaratri kolu
கொலு பொம்மைகள் | Navaratri koluImage credit: Gemini AI
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

உங்கள் வீட்டில் கொலு பொம்மைகள் வைப்பார்களா..? அப்படி என்றால் நீங்கள் கூட அம்மாவோட சேர்ந்து குட்டி குட்டி பொம்மைகளை எங்கெங்கு வைப்பது என உதவுவீர்கள் அல்லவா..? எந்த பொம்மையை எங்கு வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருக்க வேண்டாம்! அதை எப்படி வைப்பது என தெரிந்து கொண்டீர்களானால் சுலபமாக வைத்துவிடலாம்.

நவராத்திரிக்கு மண் பொம்மைகள் தான்  ஒன்பது படிகளில் வைத்து விழாவை கொண்டாடுவார்கள். அப்படி மண் பொம்மைகள் தான் வைக்க வேண்டும் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது தன் எதிரிகளை வெற்றி கொள்வதற்காக மகாராஜா சுரதா தன் வியாபாரி சமதியுடன் குரு சுமதாவின் ஆலோசனையை கேட்கிறார்.

குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளி ரூபத்தை செய்கின்றான். அதை ஆவாகனம் பண்ணி உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான்.

அம்பிகை அவனுக்கு முன் தோன்றி அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்து பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள். 

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணாலான பொம்மையினால் என்னை பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும் சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி புராணத்தில். அதனால் தான் நவராத்திரிக்கு கொலு வைப்பதில் மண்பொம்மை முக்கியமாக இடம் பெறுகிறது. இப்பொழுது மண்பொம்மை எதற்காக வைக்கிறோம் என தெரிந்து கொண்டீர்கள் இல்லையா!

இதையும் படியுங்கள்:
அக்பர் - பீர்பால் சிறுகதை: மரத்தை சாட்சியாக்கிய விசித்திர வழக்கு!
கொலு பொம்மைகள் | Navaratri kolu

அடுத்ததாக நவராத்திரி கொலு வைப்பது ஒன்பது படிகளில் வைப்பதற்கும் ஒரு தத்துவம் உள்ளது. அது என்ன என்று தெரியுமா? அதையும் பார்ப்போமா!

  • முதல் படியில் எந்தெந்த பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பார்ப்போமா குட்டீஸ்களா!

    முதல் படியில் ஓரறிவு உயிர் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகள் வைக்க வேண்டும்.

  • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

  • மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.

  • நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

  • ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள் பறவை, பொம்மைகள் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

  • ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

கொலு பொம்மைகள் | Navaratri kolu
கொலு பொம்மைகள் | Navaratri koluImage credit: Gemini AI
  • ஏழாவது படியில் மனிதனுக்கும் மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

  • எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் வைக்க வேண்டும். நவகிரக அதிபதிகள் பஞ்சபூத தெய்வங்கள் அஷ்டதிக்கு பாலர்கள் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.

  • ஒன்பதாவது படியில் பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகள் அவர்களின் மனைவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்கும்படி நாம் வைக்க வேண்டும்.

  • ஆதிபராசக்தி நடுநயமாக இருக்க வேண்டும்.

இப்படி வைப்பதற்கு உள்ள தத்துவம் மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வமாக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இப்படி ஒன்பது படிகளிலும் பொம்மைகளை வைக்கிறோம்.

இதைத்தவிர நீங்கள் உங்கள் அம்மா கூட, பாட்டி கூட, அக்கா கூட, தம்பி கூட, அண்ணன் கூட சேர்ந்து கொலு பொம்மைகள் வைத்த இடத்தில் அருகே பார்க் பூந்தொட்டிகள் மலைகள் என வித விதமாக உங்களின் கற்பனை சக்திக்கு தகுந்தவாறு அமைத்து நவராத்திரி கொலுவை ஜமாய்த்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பணிவின் பெருமை..!
கொலு பொம்மைகள் | Navaratri kolu

என்ன குட்டீஸ்களா..! ஜாலியாக நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க இப்பவே என்னென்ன செய்யலாம் என ஐடியா தோன்றி விட்டதா உங்களுக்கு ஓகே ரெடியா!

நவராத்திரி துவங்கப் போகிறது நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து சிறப்பாக கொண்டாடுங்கள். உங்க ப்ரண்ட்ஸ்களை கூப்பிடுங்க பாடல் கதை என்று அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்ல சொல்லி அம்மா நைவேத்தியம் செய்த சுண்டல் இனிப்பு கொடுங்க..!

என்ன குட்டீஸ்களா நவராத்திரி கொலு விழாவை ஜாலியா கொண்டாட ரெடியா!!

logo
Kalki Online
kalkionline.com