

அக்பரின் அன்பிற்கு உரியவராக பீர்பால் பல சிக்கலான வழக்குகளை தீர்த்துவைத்துள்ளார். அப்படிப்பட்ட சிக்கலான வழக்கு பற்றி பார்ப்போம்.
ஒருமுறை யாத்திரை செல்ல விரும்பிய ஒருவர் தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் 500 பொற்காசுகளை கொடுத்து தான் யாத்திரையில் இருந்து திரும்பி வரும்வரை பத்திரமாக வைக்கச் சொன்னார். அவரும் அதைப் பற்றிய கவலை வேண்டாம்; தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவர் நண்பரிடம் பொற்காசுகளை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் நண்பரோ "என்னிடம் நீங்கள் கொடுக்கவில்லை. வயதாகிவிட்டதல்லவா. நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள்" என்று பொய் கூறினார். காசு கொடுத்தவர் அதிர்ச்சியடைந்து, "நண்பா, நட்புக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் நீங்களோ பொய் சொல்கிறீர்களே" என்று கோபமாகக் கூறியவர், பீர்பால் இடம் புகார் அளித்தார். பீர்பால் காசு வாங்கிய நபரைக் கேட்க, அவர் "சத்தியமாக தன் நண்பர் பொற்காசுகள் தரவில்லை" என்று கூசாமல் பொய் உரைத்தார்.
உடனே பணம் கொடுத்த பெரியவரிடம், "நீங்கள் பணம் கொடுக்கும்போது யாராவது இருந்தார்களா" எனக் கேட்டார்.
அதற்கு அவர், "என் நீண்டநாள் நண்பர் என்பதால் நானே வலியப் சென்று இவரிடம் கொடுத்தேன். கடவுளைத் தவிர வேறு சாட்சி கிடையாது" என்றார். "சரி எந்த இடத்தில் வைத்துக் கொடுத்தீர்" என்று பீர்பால் கேட்க, பெரியவர் "நண்பர் வீட்டு மாமரத்தின் அடியில் வைத்துக் கொடுத்தேன்" என்று கூறினார்.
"சரி.. அவர் வீட்டில் மாமரம் இருக்கிறதா? வெட்டப்படவில்லையே" என்று கேட்க பணத்தை வாங்கியவன், "மாமரம் நிற்கிறது. வெட்டப்படவில்லை" என்று கூற, உடனே பீர்பால், "அவரிடம் மாமரத்தைச் சாட்சியாக அழைத்து வரச்சொல்லி கூறினார். பணம் கொடுத்த பெரியவர் திகைத்தார்.
"பெரியவரே மரம் எப்படி சாட்சி சொல்லும் என்றுதானே தயங்குகிறீர். நீங்கள் சென்று கூப்பிடுங்கள். கடவுள் அருள் உண்டு" என்றார்.
பெரியவர் சென்றதும் பீர்பால் ஏமாற்றுக்காரனிடம் நீங்கள் பெரியவர் வரும்வரை இந்த இடத்தைவிட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டு ஒரு காவலரைக் கூப்பிட்டு அவரை மறைவாகக் கண்காணிக்கப் சொல்லி பீர்பால் சென்றுவிட்டார்.
நீண்டநேரம் பொறுத்து மீண்டும் வந்த பீர்பால் அந்த ஏமாற்றுக்காரனிடம் பேச்சுகொடுத்தார். அந்தப் பெரியவர் இன்னும் வரவில்லையே. இவ்வளவுநேரம் ஆகிவிட்டதே. இதுபோன்று பொய்சொல்லி பலரையும் ஏமாற்றுகிறாரோ என்றெல்லாம் கூறினார்.
தனக்குச் சாதகமாக பீர்பால் பேசுகிறார் என்று எண்ணி ஏமாற்றுக்காரன், "ஐயா அந்த பெரியவர் சீக்கிரம் வர முடியாது. அந்தமரம் வெகுதொலைவில் உள்ளது" என்றார்.
சிறிது நேரத்தில் பெரியவர் வந்துவிட்டார். அவரிடம், "என்ன ஆயிற்று" என்று பீர்பால் கேட்க, "மரம் எங்காவது சாட்சிக்கு வருமா என்று ஆலோசிக்காமல் சென்றுவிட்டேன். அந்த மரத்தின் பக்கம் சென்றபின் தான் இந்த எண்ணம் வந்தது" என்று கவலையோடு கூறினார். உடனே பீர்பால், "பெரியவரே மரம் சாட்சிக்கு வந்து விட்டது. உங்கள் நண்பர் உண்மையை ஒப்புக் கொண்டார்" என்று பீர்பால் கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். ஏமாற்றுக்காரன், "இல்லையே நான் உண்மையை ஒத்துக் கொள்ளவில்லையே" என்று ஏமாற்றுக்காரன் கூறினான்.
உடனே பீர்பால், "உன்னுடைய உளறலே உண்மையை வரவழைத்துவிட்டது. அந்த மரம் வெகுதொலைவில் உள்ளது என்று கூறினீர்கள். அது வெட்டப்படவில்லை என்றீர்கள். மேலும் சற்றுமுன் நான் உண்மையை ஒத்துக்கொள்ளவில்லை என்றீர்கள் அப்படியென்றால் அவர் பணம் கொடுத்தது உண்மைதானே" என்றெல்லாம் சரமாரியாகத் கேள்விகேட்டடு அவனை திக்குமுக்காட வைத்து விட்டார்.
மீண்டும் பொய் சொன்னால் சிறைத்தண்டனை தான் கிடைக்கும் என்பதை உணர்ந்த அவன் "என்னை மன்னித்துவிடுங்கள். இவரிடம் வாங்கிய பொற்காசுகளை கொடுத்து விடுகிறேன்" என்று கொடுத்துவிட்டான்.
பீர்பாலின் வழக்கு விசாரித்த முறையை எல்லோரும் பாராட்டினார்கள்.