

இயற்கை எழில் சூழ்ந்த மருதவனம் என்ற கிராமத்தில், நீலகண்டன் என்ற குயவர் வாழ்ந்து வந்தார். மண்ணால் பலவிதமான பானைகளை உருவாக்குவதே அவரது தொழில். வாரம் முழுவதும் பானைகள் செய்து, வார இறுதி நாளான சனிக்கிழமையில், அருகிலிருந்த செம்புலச் சந்தை என்ற வாரச் சந்தைக்கு மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்வார்.
அந்த விற்பனையில் கிடைக்கும் பணத்தில், அடுத்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் தனது இரண்டு காளைகளான நந்தன் மற்றும் பலராமன் ஆகியவற்றுக்குத் தேவையான தீவனங்களையும் வாங்கி வந்து, எளிமையாக வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஒருநாள் பானைகள் செய்து கொண்டிருந்தபோது, வழக்கத்தைவிட சற்று பெரிய ஒரு பானை உருவாகிவிட்டது. அதைப் பார்த்த நீலகண்டன், "யாருக்காவது தேவைப்பட்டால், இதைச் சற்று அதிக விலைக்கு விற்றுவிடலாம்" என்று எண்ணி, மற்ற பானைகளுடன் பாதுகாப்பாக வைத்தார்.
சனிக்கிழமை வந்தது. வழக்கம்போல பானைகளை மாட்டு வண்டியில் ஏற்றினார். பெரிய பானையை தனியாக வைத்தார். சிறிய பானைகளை வைக்கோல் மற்றும் புற்களுக்கிடையில் பாதுகாப்பாக அடுக்கி வைத்தார். பின்னர், நந்தனும் பலராமனும் பூட்டப்பட்ட மாட்டு வண்டி செம்புலச் சந்தையை நோக்கிப் புறப்பட்டது.
சிறிது தூரம் சென்றபோது, பெரிய பானை அருகிலிருந்த சிறிய பானைகளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
"ஏன் சிரிக்கிறாய்?" என்று ஒரு சிறிய பானை கேட்டது.
"உங்களைப் பாருங்கள். என்னைவிட எவ்வளவு சிறியவர்கள்! நான் பெரியவன். எனக்குத்தான் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்," என்று தற்பெருமையுடன் கூறியது பெரிய பானை.
அதைக் கேட்ட மற்றொரு சிறிய பானை அமைதியாகப் பேசத் தொடங்கியது.
"அளவில் பெரியவனாக இருப்பதால் உயர்ந்தவன் ஆகிவிட முடியாது. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து உருவானவர்கள். நம் மதிப்பு உருவத்தில் இல்லை; பயன்பாட்டில்தான் இருக்கிறது."
மற்ற பானைகளும் அதையே ஆதரித்தன.
ஆனால் பெரிய பானை அதைக் கேட்டு சிரித்தது.
"என்னை வாங்கும் ஒருவரின் பணத்தில் உங்களில் இருவரையோ, மூவரையோ வாங்கிவிடலாம். அதனால் நான்தான் சிறந்தவன்," என்று மீண்டும் தற்பெருமையாகப் பேசியது.
அதற்கு பிறகு சிறிய பானைகள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தன.
சிறிது நேரத்தில் செம்புலச் சந்தை வந்தது. நீலகண்டன் தனது வழக்கமான இடத்தில் அனைத்து பானைகளையும் அழகாக அடுக்கி வைத்து விற்பனையைத் தொடங்கினார்.
சந்தைக்கு வந்தவர்கள் பெரிய பானையின் விலையைக் கேட்டனர்.
"பெரிய பானை ஐந்து ரூபாய்; சிறிய பானைகள் மூன்று ரூபாய்," என்றார் நீலகண்டன்.
அதை கேட்ட பெரிய பானை, சிறிய பானைகளைப் பார்த்து மீண்டும் ஏளனமாகச் சிரித்தது.
"பார்த்தீர்களா? நான்தான் அதிக மதிப்புள்ளவன் என்று சொன்னது உண்மைதானே!" என்று பெருமையாகக் கூறியது.
சிறிது நேரத்தில் ஒருவர் பெரிய பானையை வாங்கிச் சென்றார். பின்னர் பலரும் வந்து சிறிய பானைகள் அனைத்தையும் வாங்கிச் சென்றனர்.
இவற்றையெல்லாம் மாட்டு வண்டியில் அமைதியாக நின்று கொண்டிருந்த நந்தனும் பலராமனும் கவனித்துக் கொண்டிருந்தன.
விற்பனை முடிந்ததும், நீலகண்டன் மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தீவனங்கள் அனைத்தையும் வாங்கி மாட்டு வண்டியில் ஏற்றி, கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார்.
வழியில் நந்தன், பலராமனிடம் கேட்டது:
"பெரிய பானை சொன்னது சரியா? சிறிய பானைகள் சொன்னது சரியா?"
பலராமன் சிரித்தபடி பதிலளித்தது.
"நம் எஜமானர் அனைவரையும் ஒரே மண்ணிலிருந்து படைத்தார். பெரியது, சிறியது என்பது வடிவத்தின் வேறுபாடு மட்டுமே. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயன்பாடு இருக்கிறது. அதுதான் முக்கியம். உருவத்தை வைத்து பெருமை பேசுவது அறிவல்ல."
நந்தன் மீண்டும் கேட்டது.
"ஆனால் பெரிய பானைக்கு அதிக விலை கிடைத்ததே?"
பலராமன் அமைதியாகச் சொன்னது.
"விலை என்பது படைத்தவனின் தேவையையும் பயன்பாட்டையும் பொறுத்தது. அதனால் யாரும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ ஆகிவிட முடியாது."
இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் சென்றனர்.
சிறிது தூரத்தில் ஒரு சோகமான காட்சி தெரிந்தது. ஒருவர் இறந்திருந்தார். அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அங்கு கொள்ளிப்பானையாகப் பயன்படுத்தப்பட்டது, அந்த தற்பெருமை பேசிய பெரிய பானைதான்.
சடங்கு முடிந்ததும், அந்தப் பானை கீழே போடப்பட்டது. ஒரு கணத்தில் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
நந்தனும் பலராமனும் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த இடத்தைக் கடந்தன.
சில தூரம் சென்றபோது, மற்றொரு கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அங்கு பல சிறிய பானைகள் புனிதக் கலசங்களாக அலங்கரிக்கப்பட்டு, இறைவனின் அருகில் தீர்த்தம் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. மக்கள் அவற்றை வணங்கி மரியாதை செலுத்தினர்.
அந்தக் காட்சியைப் பார்த்த நந்தன், பலராமனை நோக்கி,
"இப்போது எனக்குப் புரிகிறது. உருவத்தின் பெருமை நிலைக்காது. பணிவும் பயன்பாடும்தான் ஒருவரை உயர்த்துகின்றன," என்றது.
பலராமன் புன்னகையுடன் கூறியது:
"ஆம். தற்பெருமை அழிவைத் தரும். பணிவு உயர்வைத் தரும். ஒரே மண்ணில் பிறந்தாலும், இறுதியில் மனிதனை உயர்த்துவது அவனுடைய குணமும் செயலும்தான்."
அந்த நாளிலிருந்து, அந்தக் காட்சி நந்தனின் மனதில் என்றும் அழியாத பாடமாகப் பதிந்தது.